சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இன்னா நாற்பது இனியவை நாற்பது

vegetables
பிரீமியம் ஸ்டோரி
News
vegetables

நலம் 16

ந்தக் கட்டுரையை வாசிக்கும் சமயம், செய்திகளை, காட்சிகளை ஒளி அலைகளாகக் கடத்தி, அதன் வேகத்தைப் பலமடங்கு உயர்த்தி, ரிலையன்ஸ் ஜிகா நிறுவன வணிகம் ஆரம்பித்திருக்கும். ‘நீங்கள் கொடுக்கும் குறைவான தொகையில், ஒரு விநாடியில் 100 மெகாபைட் தகவல்களைத் தடையின்றித் தருவோம்’ என்ற சூளுரையில், ஒட்டுமொத்த, இந்திய இணைய வணிகமே ஆடிப்போய் நிற்கிறது. 1992-ல் தொலைபேசி இணைப்புக்கு நான் விண்ணப்பித்தபோது, ‘சித்த மருத்துவருக்கு டாக்டர் கோட்டாவில் எப்படித் தொலைபேசி இணைப்பு கொடுப்பது?’ என அந்தத் துறை பலமாக யோசித்தது. ‘இல்லப்பா... அவங்களும் அஞ்சரை வருசம் படிச்ச டாக்டர்தான்’ என்று சொல்வதற்கு பாரதப் பிரதமர், அமெரிக்க அதிபர் வரை பேசி, கடைசியாய் என் மருத்துவமனைக்குத் தொலைபேசி வந்தது. அப்போது, கிடைத்த மகிழ்ச்சியை விவரிக்க முடியாது. தொலைபேசிக்கு சந்தனப்பொட்டு, பூ வைத்து, ஆண்டவன் தொலைபேசி எண் தெரியாததால், ‘முதல் போன் யாருக்குப் பண்ணலாம்?’ என பலமாய் யோசித்து, கடைசியில் அண்ணா நகர் ஐயப்பன் கோயிலைச் சுற்றி வந்து, புளகாங்கிதம் அடைந்த காலம் உண்டு. ஆனால் இன்றைக்கு, கொய்யாப்பழம் வாங்கப்போனால்கூட, ‘உங்க போனில் பே டிஎம் ஆப் இருந்தா இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் பண்ணுங்க’ எனப் பழ வியாபாரி ஸ்மார்ட்போனுடன் நிற்பதைப் பார்க்கையில், வியப்பை நிறுத்த முடியவில்லை. நானறிந்தமட்டில், உலகின் மலிவான விரைவான தொலைபேசி சேவை(?) இந்தியாவில் மட்டும்தான்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

‘வாங்கும்போது நூறு மெகாபைட் ஸ்பீடுன்னு சொன்னாங்க சார். ஆனால், இப்போ ரெண்டு மெகாபைட் தான் வருது’ என இணையம் முடங்கி நிற்கிறது. `பேசாமல் அங்கேயே நகர்ந்திடலாமா?’ என்ற கேள்வி, அரசு சேவைகளை ஆட்டம் காண வைக்கிறது. இந்த வேகமான இணைய சேவையில், இனி இந்தியன் ஒருவன் தன் அலைபேசியில், இணையதளத் திரைப்படம் ஒன்றை நெட்ஃப்ளிக்ஸில் மில்லிசெகண்டு இடையூறின்றி முழுவீச்சில் பார்க்க ஆரம்பித்திருக்கலாம். அடுத்த வருஷத்திலிருந்து ‘அட்லாண்டா’ வாத்தியார், அமிஞ்சிக் கரையிலுள்ள பையனுக்கு, ஆன்லைனில் குட்டுவைத்து, குட்டுவைத்து ‘நீட்’ பாடம் சொல்லிக் கொடுக்கலாம்.

ஆம்! இந்த அசுர வேகம், நவீன அறிவியலின் உச்சம்தான். மனிதனை அதன் சக உயிரினங்களின் சுழற்சி இணைப்பிலிருந்து எப்போதும் விலக்கி விலக்கி நகர்த்துவதும் இந்த அறிவியல் உச்சம்தான். நாம் மிருகக்காட்சி சாலையில் பார்த்தது, அக்வாரியத்தில் பார்த்தது, கூகுளில் தேடிப்பார்த்தது எல்லாம் சேர்த்துக் கணக்கு வைத்தால்கூட, உலகில் நம்மோடு உள்ள இன்னும் 80 - 85 சதவிகித உயிரினங்களை நமக்குத் தெரியாது. வெளியே இருக்கட்டும். ‘நம்ம ஆதார் கார்டுக்குள்ளேயே, எந்த போட்டோவும் காட்டாமல், ஒரு கோடி சொச்சம் உயிரிகள் இருக்கலாம்’ என ஒரு கணக்கு சொல்கிறது. நம் உடல்தான் அவற்றின் பிரபஞ்சம். அந்த ஒரு கோடி உயிருக்கும் மூளை இருக்கிறது; காதல் இருக்கிறது; நம் மூளைக்கு தினமும் சில கோப்புகளை அனுப்பி பைசல் பண்ணுகிறது. ஆனால் இவை எவற்றையுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், நம் ஒட்டுமொத்த உலகையும் நாம் பட்டா போட்டதுபோல, மனிதனை மட்டுமே முன்னிறுத்தும் ‘ஆந்த்ரோ போசென்ட்ரிக்’ (Anthropocentric) மனநிலையில் ஆட்டம்போடுகிறோம்.

போன மாதம் ஐஸ்லாந்தில் உலகின் மிகப்பெரிய, பல மில்லியன் டன் எடையுள்ள பனிப் பாறை உருகியதால், கடல்மட்டம் கொஞ்சம் உயர்ந்து போனது. ஐஸ்லாந்தை விடுவோம். நம் நீலகிரியில் கொட்டித் தீர்த்த மழை, வட இந்தியாவில் பியாஸ் நதியில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள் அத்தனையும் நம் ‘ஆந்த்ரபோசென்ட்ரிக்’ அறிவியல் திமிரின் அடையாளங்கள்தாம்.

நம் சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிப்புறுவதை, சற்றும் சங்கடத்தோடு பார்க்காமல், இத்தனை லட்சம் கோடி முதலீட்டில், இப்படியான உச்ச அறிவியலின் வணிகங்கள், வணிக வெறியுடன் நகர்வதுதான் பெரிதும் பயமுறுத்துகிறது. ‘இந்தமாதிரி இணைய சேவை சூழலுக்கு எப்படிக் கேடு? இதை ஏன் குறை சொல்கிறீர்கள்?’ எனக் கேள்வி எழுப்ப வேண்டாம். இந்த அறிவியலைக் குறை சொல்லவில்லை. இப்படியான அறிவியல் ஏற்படுத்தும் பெருவணிகம்தான் பயமுறுத்துகிறது. இம்மாதிரி அறிவியல் படரவிடும் பெரு வணிகங்களில் சூழல் பற்றிய சிந்தனை சுத்தமாய்த் தொலைந்துபோகிறது. அண்ணாசாலையில் போய் புத்தகக்கடையில் புத்தகம் வாங்கி வரப் போனபோது ஏற்படாத சூழல் மாசு, ஆன்லைனில் நூல் வாங்குகையில் சீர் கெட்டுப்போனது. நூலை எடுத்துக்கொண்டு, வேகமாக வரும் ஆன்லைன் ஊழியனின் பயணத்தில், என் நடை, என் தேடல், தேடும்போது கிடைத்த பல பக்கவாட்டு அறிவுகள் அத்தனையும் தொலைந்துபோனது. நூலை அட்டைப்பெட்டியில் வைத்து, நெகிழிப்பையில் சுற்றிப் பாதுகாப்பாக எடுத்து வருகையில், நூல் பாதுகாப்பாகவும் பூமி பாதுகாப்பற்றும் போகிறது. ‘இன்னும் அதிகமில்லை ஜென்டில்மேன். சரியாய் 25 வருடங்களில் சூழலியல் பாதிப்புகள் மிகப்பெரிய அளவில் நம் அன்றாட வாழ்வை பாதிக்கும்’ என்கிறது அதே உச்ச அறிவியல். இப்போ ‘நீட்’ கோச்சிங்கிற்குப் போய் வந்து கொண்டிருக்கும் நம் குழந்தைகளின் உலகத்தில், ‘மெரினா பீச்’ அண்ணா நகரில் இருக்கும். ‘கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இருக்கலாம். ஆனால் தீவு இருக்குமா என்று தெரியாது’ என அனுமானிக்கிறது சூழலறிவியல்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

ஆனாலும் தொடர்ச்சியாக இந்த வணிக அறிவியலின்பால் படரும் பெருவணிகமோ, ‘மாட்டுத்தீவனம் விலையேறிப் போச்சா? இவங்க லிட்டருக்கு 31 ரூபாய்க்கு மேல பாலுக்குத் தரமாட்டேங்கிறாங்களா? அதனால இரண்டு மாசமா இதயநோய் மாத்திரை வாங்கல, வீட்ல அவளுக்கு 30 தடவ கரன்ட்டு வைக்கச் சொன் னாவ... 21 தடவைக்கு மேல பெரியாஸ்பத்திரிக்குப் போய் வர, காசு இல்ல...’ எனச் சொல்லி வருந்தும் ஏழைப் பால்வணிகருக்கு எந்தவிதத்திலும் உதவ மறுக்கிறது. ‘அவருக்கு இன்ஷூரன்ஸ் இல்லை. இன்ஷூரன்ஸ் கொடுக்கும் நிறுவனத்தில் வேலையும் பார்க்கவில்லை. அப்புறம் எப்படி நோய்க்கு வைத்தியம் பார்ப்பது?’ என அலட்சியமாய் நகர்கிறது. ஆனால், பால் ஊற்றும் அந்தத் தொழிலாளிக்கு கனடாவில், அமெரிக்காவில் இருப்பதைவிட வேகமான தொழில்நுட்பத்துடன் இணையசேவை கிடைக்கிறது. ஆனால், அங்குள்ள கடைக்கோடிப் பால்வணிகருக்குக் கிடைக்கும் மருத்துவச் சேவையில் ஒரு சதவிகிதம்கூட இங்கு அரசு தராது. பல வளர்ந்த நாடுகளில் இருப்பதுபோல, அறிவியல் வளர்ச்சியில் அரசும் அரசு சேவையுமல்லவா வளர வேண்டும்?

இந்த ஒளிக்கற்றை வணிகம், இன்னும் பல பெரு வணிகத்தை, இணையவழி விற்பனையை எக்குத்தப்பாய் உயர்த்தும். ஏற்கெனவே நம் இளைஞரில், நிறைய பேர் ராப்பகலாகத் தூங்காமல் சாப்பிடாமல் ஊபரும் ஓலாவும் ஓட்டுகிறார்கள். சொந்தமாய் அவர்கள் வைத்திருந்த வாடகைக் கார் கம்பெனிகளை மூடி மூன்று நான்கு வருடமாச்சாம். யாரோ சாப்பிட, பசியோடு பைக்கில் பீட்ஸா கொண்டுபோய்க் கொடுக்கிறார்கள். ‘ஏ முதல் இஸட் வரை நாங்க வித்துக்குறோம், நீ கடையை மூடிட்டுப்போய் என் கூலியாகவோ என் சேவையாளனாகவோ சாகும் வரை இரு’ எனச் சொன்னதைக் கேட்டு ஆங்காங்கே அழகான யூனிபார்ம் போட்டு, தன் வறண்ட உதட்டுக்கு விலைமலிவான கனிமத்துகள் கொண்ட சாயம் பூசி, போலியாய்ச் சிரித்து, விமானம் முதல் வீதி வரை சேவை செய்கிறார்கள். ‘மலிவான ஆள் உள்ள தேசம் இதுப்பா. உன் நாடு மாதிரி மணிக்கு 15 டாலர் எல்லாம் தர வேணாம். மனிதவளத்தை இதயத்தைக் கழற்றி வைத்துவிட்டுக் கொடுக்கும் பயிற்சி பெற்ற ஆயிரம் ஜிகா பைட் இயந்திரங்கள் 120 கோடிப் பேர் இருக்கிறார்கள். அதுவும் அவர்கள் சாதி மதம் என அடித்துக்கொண்டு இருக்கும்படி பிரமாதமாய் வைத்திருக்கிறோம்.

‘இப்பல்லாம் நாங்கெல்லாம் பிரசாரம் பண்றதில்லை. குடும்பம் குடும்பமா வாட்ஸ் அப்பில் அவர்களே பிரசார பீரங்கியாய் குடும்ப குரூப்பில் தினம் தினம் பேசி, மண்டையைக் கழுவிக் கொண்டிருக்கிறார்கள். இனி ஆப்டிக் ஃபைபரில் அது இன்னும் வேகமாக நடக்கும். கொடுக்கிற காசை வாங்கிக்கொண்டு, 24 மணி நேரமும் அவர்கள் வேலை செய்வார்கள். இங்கே வணிகம் செய்ய வா’ என அரசும் கார்ப்பரேட்டும், ஆடிப்பாடி உலகெங்கும் உள்ள அசுர கார்ப்பரேட்டுகளை அழைத்துக் கொண்டே இருக்கிறது.

‘ஐயோ வலிக்கிறதே!’ என யோசிக்கையில், ‘இந்த வலியெல்லாம் போக்கத்தான் நாங்க வாரோம்’ என்ற அறைகூவலுடன் அஞ்சு வருசத்துக்கு ஒருமுறை காசோடு ஒரு கூட்டம் களமிறங்கும். அல்லது ‘நாற்பது வருசத்துக்கு ஒருமுறை அத்திவரதர் தரைக்கு வருவார்’ என சாமானியர்கள் எப்போதுமே காத்துக் கொண்டிருப்பார்கள்.

நாற்பதுகளின் நோய்க்கூட்டங்களுக்குப் பின்னே, வலிநிறைந்த வாழ்வியலுக்குப் பின்னே பாக்டீரியாவும் பாயசமும் மட்டும் இல்லை, சூழலைச் சிதைத்த அறிவியல், சூழலைச் சிதைக்கக் காரணமான அரசியல், சிதைவுபெற்ற சூழலில் மன அழுத்தத்துடன் வாழும் வாழ்வியலும்கூடக் காரணங்கள்.

படுவேகமாகச் சூழல் கெட்டுப்போவதில், இன்னும் ஓரிரு வாரத்தில் டெங்கு வெர்ஷன் 3.0 வரக்கூடும். ‘காவிரியில் தண்ணீர் வந்தாச்சு’ என்கிற மாதிரி ‘டெங்கு வந்தாச்சு’ என, கடந்த மூன்று வருடங்களாகக் கொசு பேசுபொருளானதும் சூழலியல் கேடுதான். பாலூட்டும் மார்புக்கோளத்தில் செல்கள் மாறிப்போனதும் மலக்குடலின் சுவரில் முளைத்தெழும் குருக்களின் செல்கள் மாறிப்போனதும் ஒற்றைக் காய்ச்சலோடு வந்த ரத்தசெல்லின் பிழை ரத்தப்புற்றானதும் சுற்றுச்சூழலில் மனிதன் நடத்தும் வன்முறையே காரணம். நாற்பதை நலமாய் வைத்திருக்க சாப்பாட்டை மட்டுமல்ல, நம் சூழலையும் வாழ்வியலையும் சரியாய் வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

கடந்த வாரங்களில், அத்திவரதரைப் பார்க்க எக்குத்தப்பாய்க் கூட்டம் வந்ததைப் பார்த்தபோது, ‘அப்பர், சுந்தரர், திருநங்கையாழ்வார் பாடியபோது எல்லாம் இல்லாத பக்திப்பரவசம், ஏன் இப்படிப் பொங்கியுள்ளது?’ என யோசிக்க வைத்தது. இந்த பக்திக்குப் பின்னால், மிகப்பெரிய அளவில், ஏராளமானவர்களிடம், தனிமனிதப் பாதுகாப்பற்ற உணர்வு இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ‘ஏதேனும் எனக்கு விடிவு கிடைக்காதா, என் தொழில் உயராதா, என் ரத்த சர்க்கரை குறைந்துவிடாதா, ஆட்டிசக் குழந்தை அச்சுப்பிசகாமல் பேசாதா?’ என்கிற பல வலிகளோடு, அதிசய ஆச்சர்யங்களுக்காக வேண்டி வந்தவர்களே அதிகம். ‘இப்ப விட்டால், இந்த டாக்டர் அப்பாயின்ட்மென்ட் கிடைக்க, இன்னும் நாற்பது வருஷம் ஆகும். அதனால் பார்த்தே தீர வேண்டும்’ என உலகெங்கும் இருந்து முண்டியடித்து வந்தவர்களில்கூட நாற்பதுகள்தான் அதிகம். அதிசயங்களுக்காக ஆண்டவனிடம் அடைக்கலம் கோரும் நம்மில் பலர், அமைதிக்கான பயிற்சிக்காகப் போவதேயில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

அதிசயங்கள் நிகழ்ந்தால் ஆச்சர்யங்களுடன் அனுபவிப்போம். ஆனால் அது தானாக நிகழும் என நாம் சுயநலத்துடன் சூழலியல் சிதைவுகளைப் படுவேகமாக நிகழ்த்திக்கொண்டிருப்பதில், பேரதிசயம் நடந்தாலும் நடந்துவிடும். ஆம்! இதுவரை உலகம் நான்கு முறை ஒட்டுமொத்தமாய் அழிந்திருக்கிறது. ‘கெட்டாஸ்ட்ரோபிக்’

(CATASTROPHIC) என்று அதை அறிவியல் சொல்கிறது. ‘கடந்த பேரழிவிற்குக் காரணம், பிரபஞ்சக் கூறுகளில் வெளியில் உள்ள ஏதோ ஒரு பிரபஞ்சக் கூறு, பூமியைத் தாக்கியது’ என்கிறார்கள். ‘இம்முறை அந்த கெட்டாஸ்ட்ரோபிக்’கிற்குக் காரணமாகப் போவது வெளியிலிருந்து பூமிக்கு வந்த கூறுகளாய் இருக்காது. பூமிக்குள்ளேயே திரியும் சுயநலமிக்க ‘ஆந்த்ரோபோசென்ட்ரிக்’ மனிதர்களாகத்தான் இருப்பார்கள் என்கிறது’ அந்த உச்ச அறிவியல்.

- இனியவை தொடரும்...