என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

துரத்தும் தொற்றுகள்... கர்ப்பிணிகள் கவனத்துக்கு!

கர்ப்பிணிகள் கவனத்துக்கு!
பிரீமியம் ஸ்டோரி
News
கர்ப்பிணிகள் கவனத்துக்கு! ( pixabay )

#Health

தொற்றுகளின் ஆதிக்கத்தின் பிடியிலிருந்த 2020-ம் ஆண்டிலிருந்து தப்பித்து 2021-ம் ஆண்டைத் தொட்டிருக்கிறோம். கோவிட்-19, ஹெச்.ஐ.வி போன்ற கொடிய நோய்கள் மட்டுமே தொற்றுநோய்கள் பட்டியலில் வருவதில்லை. சாதாரண சளி, மெட்ராஸ் ஐ என்று சொல்லப்படும் கண்வலிகூட தொற்றுநோய்தான்.

பொதுவாக தொற்றுநோய்கள் நோய் எதிர்ப்புத்திறன் குறைவானவர்களைத்தான் எளிதில் தாக்கும். அதனால்தான் கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் தவறாமல் குறிப்பிடுவார்கள். சில தொற்றுநோய்கள் பிரத்யேகமாக கர்ப்பகாலத்தில் பெண்களைத் தாக்கும் வாய்ப்புள்ளது.

மிருதுபாஷினி கோவிந்தராஜன்
மிருதுபாஷினி கோவிந்தராஜன்

கர்ப்பிணிகளை தொற்றுகள் அதிகம் பாதிக்க காரணம் என்ன என்று மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் மிருதுபாஷினி கோவிந்தராஜன் விளக்குகிறார்.

" சாதாரண மனிதர்களுக்கு வரும் எந்தத் நோய்த்தொற்றும் கர்ப்பகாலத்தில் பெண்களை பாதிக்கலாம். கர்ப்பப்பையிலோ கர்ப்பப்பைக்கு உள்ளேயே வரும் நோய்த்தொற்றுகள் தவிர, மற்ற அனைத்து வகையான தொற்றுகளும் எந்தக் காலத்திலும் ஏற்படலாம்.

பொதுவாகவே நமது உடல் பாக்டீரியாவோ வைரஸோ அல்லது வேறு விதமான கிருமிகள், தாவரங்கள், விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள் உள்ளிட்டவை (Protozoan infections) மூலம் ஏற்படும் தொற்றுகளோ ஏற்படும்போது அவற்றை அந்நியப் பொருள்களாகவே (Foregin Body) கையாளும். அதற்கெதிராக வினையாற்றி நோய் எதிர்ப்புத் திறனை செயல்படுத்தும்.

துரத்தும் தொற்றுகள்... கர்ப்பிணிகள் கவனத்துக்கு!

சில செல்களே நோய்க் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படுவது நோய் எதிர்ப்புப் பொருள் (ஆன்டிபாடி உருவாகி கிருமிக்கு எதிராகப் போராடுவது என நோய் எதிர்ப்புத் திறன் இருவழிகளில் செயல்படும்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். குழந்தையே அந்நியப் பொருளாகத்தான் பெண்ணில் உருவாகிறது. குழந்தையை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் தாயின் நோய் எதிர்ப்புத் திறன் மாறுகிறது. அதனால்தான் கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோய்த்தொற்று எளிதாக பெண்களை பாதிக்கிறது" என்பவர் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பொதுவான தொற்றுகுறித்து விவரிக்கிறார்.

கோவிட்-19 தொற்றால் தாய் தீவிரமாக பாதிக்கப்படும் பட்சத்தில் அது பிரசவத்திலும் சிக்கல்களை ஏற்படுத்தலாம். பிரசவத்துக்குப் பிறகும் தாய்க்கு தொற்று பாதிப்பு இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.

"சிறுநீர்ப்பாதை தொற்றுதான் கர்ப்பகாலத்தில் பெண்களை பாதிக்கிறது. ஆரம்பத்திலேயே குணப்படுத்தாவிட்டால் சிறுநீர்ப் பாதையிலிருந்து, சிறுநீர்ப்பையைத் தாக்கி அங்கிருந்து சிறுநீரகத்தைத் தாக்கி ரத்தத்தில் நச்சேற்றும் 'செப்சிஸ்' பிரச்னையை ஏற்படுத்தும். உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் செப்டிக் ஷாக் போன்ற நிலையை எட்டலாம். சாதாரண நபர்களுக்கு இந்தத் தொற்று ஏற்படும் பட்சத்தில் அது வேகமாகவும் தீவிரமடையாது. சிகிச்சையளித்து குணப்படுத்துவதற்கும் அதிக நேரம் கிடைக்கும். நோய் எதிர்ப்பத் திறன் குறைவாக இருப்பதால் கர்ப்பிணிகளை இது தீவிரமாகவும் வேகமாகவும் பாதிக்கிறது.

சில வகை வைரஸ் தொற்றுகள் நஞ்சுக்கொடியைத் தாக்கும். நஞ்சுக்கொடி என்பது தாய்க்கும் குழந்தைக்குமான ஒரு தடுப்புச்சுவர். தாய்க்குள் நுழையும் அனைத்தும் நஞ்சுக்கொடிக்கும் செல்லும். நஞ்சுக்கொடியைத் தாண்டிதான் குழந்தையிடம் செல்ல வேண்டும். நஞ்சுக்கொடி இயற்கையாகவே சில தொற்றுகளைத் தவிர்த்துவிடும். சில தொற்றுகள் அதையும் தாண்டி குழந்தையிடம் சென்றுவிடும். கர்ப்ப காலத்தின் 13, 14 வாரங்களில் உறுப்புகள் முழுவதும் வளர்ச்சியடைந்துவிடும். கர்ப்பகாலத்தின் தொடக்கநிலையில் தொற்றுகள் நஞ்சுக்கொடியைத் தாண்டி குழந்தையிடம் செல்லும்போது அது உறுப்புகளின் வளர்ச்சியை பாதிக்கும்" என்கிறார்.

"கர்ப்ப காலத்தில் ஹெபடைட்டிஸ் தொற்று ஏற்பட்டால் அது வேகமாகத் தீவிரமடைந்து இரு உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி தொற்றுகள் மிகவும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் அனைத்து வகை ஹெபடைட்டிஸ் தொற்று ஏற்படாமலும் கர்ப்பிணிகள் பாதுகாக்க இருக்க வேண்டும்.

ஹெபடைட்டிஸில் ஏ, பி, சி, டி, இ என ஐந்து வகை உண்டு. இவை தொற்றுவதற்கான காரணங்கள்...

  • ஏ - பாதிக்கப்பட்டோருடன் உடலுறவு, சுகாதாரமற்ற உணவு, தண்ணீர்

  • பி - தாயிடமிருந்து குழந்தைக்கு, உடல் திரவம் மற்றும் ரத்தம் மூலம், உடலுறவு, ஒரு நபருக்கு பயன்படுத்திய சிரிஞ்ச், ஊசியை பிறர் பயன்படுத்தும்போது

  • சி - பாதிக்கப்பட்ட நபரின் ரத்தத்தை மற்றவருக்கு ஏற்றும்போது, பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய சிரிஞ்ச், ஊசியை பிறர் பயன்படுத்தும்போது

  • டி - ஹெபடைட்டிஸ் பி ஏற்பட்டவர்களுக்கு டி பாதிக்கும்

  • இ - சுகாதாரமில்லாத தண்ணீரின் பயன்பாட்டினால் குடல் வழியாகவும் வாய் வழியாகவும் இந்த வைரஸ் பரவலாம்

கோவிட்-19 அலெர்ட்!

"அதிக காய்ச்சல் ஏற்பட்டால் குறைமாத பிரசவம் ஏற்பட வாய்ப்புள்ளது. தாய்க்கு கோவிட்-19 பாதித்திருந்தாலும் பெரும்பாலும் அது அரிதாகவே குழந்தையைத் தொற்றுகிறது. கோவிட்-19 தொற்றினால் தாய் தீவிரமாக பாதிக்கப்படும் பட்சத்தில் அது பிரசவத்திலும் சிக்கல்களை ஏற்படுத்தலாம். பிரசவத்துக்குப் பிறகும் தாய்க்கு தொற்று பாதிப்பு இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாகவே எந்தவித காய்ச்சலாக இருந்தாலும், அது தீவிரமாக தாயை பாதித்தால் குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்புள்ளது. சில நேரங்களில் குழந்தையை இழக்கவும் வாய்ப்புள்ளது.

கர்ப்பகாலத்திலும் தடுப்பூசி!

ர்ப்பகாலத்தில் போட வேண்டிய சில தடுப்பூசிகளும் உள்ளன. ரணஜன்னிக்கான தடுப்பூசி (Tetanus toxoid) கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுகிறது. ஹெபடைட்டிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கருத்தரித்த பின்னர் ரூபெல்லா என்ற ஒரு வகையான அம்மை நோய்க்கான ஆன்டிபாடி பரிசோதனை செய்து பார்த்து, ஆன்டிபாடி இல்லையென்றால் ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டும். கோவிட்-19 போன்ற ஒரு வகையான தொற்று இன்ஃப்ளூயென்ஸா, இதற்கான தடுப்பூசியையும் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்வது நல்லது. உலக அளவில் இன்ஃப்ளூயென்ஸாவால் நிறைய கர்ப்பிணிகள் உயிரிழக்கின்றனர்.

தொற்றுகளைத் தடுப்பது எப்படி?

சிறுநீர்ப்பாதை தொற்றுக்கு போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, போதிய இடைவெளியில் சிறுநீர் கழிக்காமல் இருப்பது, அந்தரங்க பகுதி சுத்தமில்லாமல் இருப்பது போன்றவை காரணம். அடிக்கடி தண்ணீர் குடித்தால், போதிய இடைவெளியில் சிறுநீர் பிரியும். தொற்றை தவிர்க்கலாம். கர்ப்ப காலத்தில் போட வேண்டிய தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கூட்டமான பகுதிகளைத் தவிர்ப்பது போன்றவையும் தொற்றுகளைத் தடுப்பதற்கு அவசியம். சுகாதாரமில்லாத உணவு, தண்ணீர் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். அவசியமில்லாமல் மருத்துவமனைக்குச் செல்வதையம் தவிர்க்க வேண்டும். மிகவும் முக்கியமாக கர்ப்ப காலத்தில் அந்தரங்க சுகாதாரத்தையும் பேண வேண்டும்.