Published:Updated:

உடலைக் குலைக்கும் உயர் ரத்த அழுத்தம்!

உயர் ரத்த அழுத்தம்
பிரீமியம் ஸ்டோரி
உயர் ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது ரத்தக்குழாய்கள் சுருங்கத் தொடங்கும். அயோடா என்பதுதான் இடது இதய அறையிலிருந்து (வென்ட்ரிக்கிள்) நல்ல ரத்தத்தைக் கொண்டு போகும் ரத்தக்குழாய்.

உடலைக் குலைக்கும் உயர் ரத்த அழுத்தம்!

ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது ரத்தக்குழாய்கள் சுருங்கத் தொடங்கும். அயோடா என்பதுதான் இடது இதய அறையிலிருந்து (வென்ட்ரிக்கிள்) நல்ல ரத்தத்தைக் கொண்டு போகும் ரத்தக்குழாய்.

Published:Updated:
உயர் ரத்த அழுத்தம்
பிரீமியம் ஸ்டோரி
உயர் ரத்த அழுத்தம்

இந்தியாவில் நிகழும் மரணங்களில் 63 சதவிகிதம் தொற்றாநோய்களால் ஏற்படுபவை. அவற்றில் 27 சதவிகித மரணங்களுக்குக் காரணம் இதயநோய்கள். 40 முதல் 69 வயது வரையிலான 45 சதவிகித மக்களை பாதிக்கும் இதயநோய்களுக்கு மிக முக்கிய காரணம் உயர் ரத்த அழுத்தம் எனப்படும் ஹைப்பர்டென்ஷன் - அதிரவைக்கும் புள்ளிவிவரம் தருகிறது உலக சுகாதார நிறுவனம்.இது ஏன்? விளக்கமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் அருணாசலம்.

‘`உடல் முழுவதும் ரத்தம் சீராக ஓடுவதற்கு ரத்த நாளங்களில் குறிப்பிட்ட அளவு அழுத்தம் இருக்க வேண்டும். இந்த அழுத்தம்தான் உடலிலுள்ள எல்லா பாகங்களுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் உந்துசக்தி. இது, குறிப்பிட்ட அளவைவிடக் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும் நிலையையே, ‘ரத்த அழுத்த நோய்’ என்கிறோம்.

ரத்த அழுத்தமானது இருவிதமாக அளவிடப்படுகிறது. இதயம் சுருங்கி, துடிக்கும்போது அழுத்தம் ஏற்பட்டு, மகாதமனி வழியாக எல்லா தமனிகளுக்கும் ரத்தம் பரவுவதை `சிஸ்டாலிக் அழுத்தம்’ (Systolic Pressure) என்கிறோம். பி.பி அளவை எழுதும்போது இந்த அளவானது மேலே குறிப்பிடப்படும். அதே போல இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உடலில் இருந்து வரும் ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. அப்போது ஏற்படும் அழுத்தம் முன்னதைவிடக் குறைவாக இருக்கும். இந்த அழுத்தத்தை `டயஸ்டாலிக் அழுத்தம்’ (Diastolic Pressure) என்போம்.

உடலைக் குலைக்கும் உயர் ரத்த அழுத்தம்!

இளவயதில் உயர் ரத்த அழுத்தம் வர, சிறுநீரக பாதிப்பு காரணமாக இருக்கலாம். 40 வயதுக்கு மேல் பாதிக்கப்படுவோருக்கு அத்தனை வயதுவரை அவர்கள் அனுபவித்த ஸ்ட்ரெஸ், சாப்பிட்ட உணவு, ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியும் அளவுக்கு உடல் பருமன், உடலுழைப்பே இல்லாமலிருப்பது, கவலை, மரபியல் போன்றவை காரணங்களாக இருக்கலாம். காலை, மதியம், இரவு, கோபப்படும்போது, நடக்கும்போது, படியேறும்போது, படுத்திருக்கும்போது என எல்லா நேரத்திலும் இது ஒன்றுபோல இருக்காது. வேலையின் தன்மையைப் பொறுத்தும் மனநிலையைப் பொறுத்தும் கூடவோ, குறையவோ கூடும்.

ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது ரத்தக்குழாய்கள் சுருங்கத் தொடங்கும். அயோடா என்பதுதான் இடது இதய அறையிலிருந்து (வென்ட்ரிக்கிள்) நல்ல ரத்தத்தைக் கொண்டு போகும் ரத்தக்குழாய். இந்த அயோடா சுருங்கும்போது இடது வென்ட்ரிக்கிள், அதிகப்படியான ரத்தத்தை அழுத்தி அழுத்தி உள்ளே அனுப்பும். இதனால் இதயத்தின் சுவர்கள் வீங்க ஆரம்பிக்கும். இதை எக்கோ பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம். ரத்த அழுத்தம் அதிகமிருந்து ரத்தக்குழாய்கள் சுருங்கும் இடங்களில் கொழுப்பு படிந்திருந்தால் அந்தக் குழாய்களிலிருந்து ரத்தம் இதயத்துக்குச் செல்ல முடியாமல் போவதை ‘ஹார்ட் அட்டாக்’ என்றும், மூளைக்கு ரத்தம் செல்ல முடியாததை ‘பக்கவாதம்’ என்றும் சொல்கிறோம். பெற்றோரில் யாருக்காவது உயர் ரத்த அழுத்தம், சிறு வயது மரணம், மாரடைப்பு, ஸ்ட்ரோக் இருந்திருந்தால் பிள்ளைகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்’’ என்று எச்சரிக்கிறார் டாக்டர் அருணாசலம்.

ஸ்பூர்த்தி அருண், பிரப்தீப் கவுர், அருணாசலம்,
ஸ்பூர்த்தி அருண், பிரப்தீப் கவுர், அருணாசலம்,

ஒரு மாத்திரை ஆயுளை நீட்டிக்கும்... - டாக்டர் பிரப்தீப் கவுர்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சலின் துணை இயக்குநரும் ‘இந்தியா ஹைப்பர்டென்ஷன் கன்ட்ரோல் இனிஷியேட்டிவ்’வின் முதன்மை ஆய்வாளருமான டாக்டர் பிரப்தீப், ‘`இந்தியாவில் 18 வயதுக்கு மேலானவர்களில் மூன்றில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ள அனைவரும் சிகிச்சை எடுப்பதில்லை. எடுத்தாலும் சிகிச்சையைத் தொடர்வதில்லை. பத்தில் ஒருவருக்கு மட்டுமே பி.பி அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அந்த நபரும் தொடர் சிகிச்சை மற்றும் வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். சிலர் சில நாள்களுக்கு மட்டும் பி.பி மருந்துகளை எடுத்துக்கொண்டு நிறுத்தி விடுகிறார்கள். கட்டுப்படுத்த முடியாத ரத்த அழுத்தம், மாரடைப்புக்கும் பக்கவாதத்துக்கும் காரணமாகும் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை. தமிழ்நாட்டில் எல்லாப் பொது சுகாதார நிலையங்களிலும் பி.பி-க்கான மாத்திரைகளை இலவசமாகக் கொடுக்கிறார்கள். தினம் ஒரு மாத்திரையை விழுங்குவதன் மூலம் பல வருடங்கள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பது நல்ல விஷயம்தானே...’’ என்கிறார்.

இது ஒரு சைலன்ட் கில்லர்... - டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

‘`உயர் ரத்த அழுத்த பாதிப்பு ‘சைலன்ட் கில்லர்’. அது எந்த அறிகுறிகளையும் காட்டாமலே பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கும். பாதிப்பு தீவிரமான பிறகுதான் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். அதனால்தான் குறிப்பிட்ட இடைவெளிகளில் பி.பி அளவைப் பரிசோதிக்க வலியுறுத்துகிறோம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

‘`முன்பெல்லாம் வயதானவர்களின் நோய்ப்பட்டியலில் இருந்த பல நோய்களும் இன்று இள வயதினரையும் பாதிக்கின்றன. அந்த வரிசையில் உயர் ரத்த அழுத்தமும் சேர்ந்திருக்கிறது. இதில் சோகம் என்னவென்றால், குழந்தைநல மருத்துவர்கள்கூட பி.பி பாதித்த குழந்தைகளைப் பார்க்கிறார்கள். முன்பெல்லாம் குழந்தைகளிடம் பருமன் பிரச்னை பெரிதாக இல்லை. இன்றோ குழந்தைப்பருவ உடல்பருமன் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. வெளி உணவுகள், வீடியோ கேம்ஸ், உடலியக்கம் இல்லாதது எனக் குழந்தைகளின் வாழ்க்கை முறை மாறியிருப்பதுதான் காரணம். எல்லாக் குழந்தைகளுக்கும் பி.பி பரிசோதனை தேவைப்படாது. பருமனுடன் முறையற்ற லைஃப்ஸ்டைலில் வளரும் குழந்தைகளுக்கு, மருத்துவர்கள் பி.பி அளவைப் பரிசோதிப்பார்கள்.

கொரோனா காலகட்டத்தில் ஹைப்பர்டென்ஷன் பாதிப்பு அதிகரித்திருக்கிறது. பலரும் உடற்பயிற்சிகள் செய்வதை நிறுத்திவிட்டார்கள். வொர்க் ஃப்ரம் ஹோம் சூழல், வீட்டு வேலைக்கு ஆட்கள் வராததால் வெளி உணவுகளை அதிகம் சாப்பிட்டது என இதற்குப் பல காரணங்கள்... இதில் இளவயதினர் அதிகம். கொரோனாவுக்கு முன்பு ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்கள்கூட, கொரோனாச் சூழலில் அந்தக் கட்டுப்பாட்டைத் தவற விட்டிருக்கிறார்கள். ஆரம்பநிலையில் கண்டறியாமலும், அதிகரித்த பிறகு முறையான சிகிச்சை எடுக்காமலும் வாழ்வியல் முறையை மாற்றிக்கொள்ளாமலும் இருந்தால் உயர் ரத்த அழுத்தம் உயிரையும் பறிக்கலாம். எனவே எல்லோரும் வருடம் ஒருமுறையாவது பி.பி பரிசோதனை செய்துபார்க்க வேண்டியது அவசியம்’’ அலெர்ட் செய்கிறார், டாக்டர் ஸ்பூர்த்தி.

உடலைக் குலைக்கும் உயர் ரத்த அழுத்தம்!

அறிகுறிகள்

உயர் ரத்த அழுத்தம் தீவிரமானதன் அறிகுறிகளாக தலைவலி, பார்வைக் கோளாறு, மயக்கம், தலைச்சுற்றல், நெஞ்சுவலி, யாரோ தள்ளிவிடுவது போன்ற உணர்வு, அதிகமான இதயத்துடிப்பை உணர்வது உள்ளிட்ட அறிகுறிகளை உணர்வார்கள். மூளையும் இதயமும் பாதிக்கப்பட்டால் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் வரும். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் கால் வீக்கம், சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் வரும். சருமம் பாதிக்கப்பட்டால் சருமத்தில் மாற்றங்களை உணரலாம்.

வீட்டிலேயே பி.பி செக் செய்வது சரியா?

பி.பி-யை சரிபார்க்கும் ஹோம் கிட்டுகள் எந்த அளவு துல்லியமானவை என்பதை உறுதியாகச் சொல்வதற்கில்லை. கிளினிக் சென்று செக் செய்வதுதான் சரியானது.

எந்த நேரத்தில் பி.பி செக் செய்வது?

ஸ்ட்ரெஸ் எதுவும் இல்லாமல் ரிலாக்ஸ்டாக உட்கார்ந்தபடி செக் செய்யலாம். காபி குடிப்பதற்கு முன்பும், சாப்பிடுவதற்கு முன்பும் சரிபார்க்க வேண்டும். காபியில் உள்ள கஃபைன், உணவிலுள்ள உப்பு போன்றவை பி.பி அளவை அதிகரித்துக் காட்டலாம்.

ஸ்ட்ரெஸ்ஸுக்கும் பங்குண்டா?

ஸ்ட்ரெஸ் மட்டுமல்ல, தூக்கமின்மையும் உயர் ரத்த அழுத்தத்துக்கான முக்கிய காரணம். ‘அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஆப்னியா’ (Obstructive Sleep Apnea) என்றொரு பிரச்னை இருக்கிறது. அதிக குறட்டை விடுபவர்கள், 8-10 மணி நேரம் தூங்கினாலும், அது ஆழ்ந்த உறக்கமாக இருக்காது. அவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த பாதிப்பானது ரத்த அழுத்தத்தை மட்டுமன்றி, ரத்தச் சர்க்கரை அளவையும் அதிகமாக்கும் என்பதால் அதைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

தவிர்க்க முடியுமா?

உடற்பயிற்சிகளுடன் குறைந்த உப்பு சேர்த்த உணவுகள், ஆக்டிவ்வான லைஃப்ஸ்டைல் - இவை மூன்றும் முதன்மையானவை. உடற்பயிற்சிகள் செய்தால் மட்டும் போதாது, கூடவே ஆக்டிவ்வாகவும் இருக்க வேண்டும். வருடம் தவறாமல் பி.பி அளவை சரிபார்க்க வேண்டும். தூக்கம் முறைப்படுத்தப்படுவதுடன், ஸ்ட்ரெஸ் குறைக்கப்பட வேண்டும்.

ஹைப்பர் டென்ஷனை எப்போது உறுதிசெய்வார்கள்?

ஒரே ஒருமுறை பி.பி செக்செய்துவிட்டு அது அதிகம் காட்டினாலே ஹைப்பர் டென்ஷன் என்று மருத்துவர்கள் முடிவுக்கு வர மாட்டார்கள். இரண்டு, மூன்று முறை செக் செய்து பார்க்க வேண்டியிருக்கும். தலைவலித்தாலோ, முந்தைய நாள் இரவு சரியாகத் தூங்காவிட்டாலோகூட பி.பி அதிகரிக்கும். அதைவைத்து உடனே பி.பிக்கான மருந்துகளை ஆரம்பிக்கக்கூடாது. ஒருவாரம் காத்திருந்துவிட்டு, மறுபடி, மறுபடி டெஸ்ட் செய்து பார்த்துதான் முடிவு செய்யப்படும்.

உயர் ரத்த அழுத்தத்தை குணப்படுத்த முடியுமா?

முடியும். உயர் ரத்த அழுத்தத்துக்கான காரணங்களான ஸ்ட்ரெஸ், உடற்பயிற்சியின்மை, தூக்கமின்மை, தவறான உணவுப்பழக்கம் போன்றவை முறைப்படுத்தப்பட்டாலே ரத்த அழுத்தம் சரியாகிவிடும். ஆனால் கவனிக்காமல் விட்டு, ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு, தீவிர நிலையில் உள்ளவர்களுக்கு அதை ரிவர்ஸ் செய்வது கஷ்டம்.