உலக சுகாதார மையத்தின் தலைவர் டாக்டர் டெட்ராஸ் அதனோம், மூன்று நாள் பயணமாக திங்கள் கிழமை இந்தியா வந்தார். அவர் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் குஜராத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்து கொண்டு வருகிறார். திங்கள் கிழமை இரவு குஜராத் வந்து சேர்ந்த டாக்டர் டெட்ராஸுக்கு, மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 'மிகவும் அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றி' என்று தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டாக்டர் டெட்ராஸ், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு நன்மை பயக்கும் ஒருங்கிணைந்த பாரம்பர்ய மருத்துவத்திற்கு அடித்தளம் அமைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆவலாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
செவ்வாய்க் கிழமை ஜாம் நகரில் நடந்த, பாரம்பர்ய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்து கொண்டார் டெட்ராஸ். இதில் பேசியவர், ஆரம்பத்தில் 'நமஸ்கார்' என்று சொல்லிவிட்டு, குஜராத்தி மொழியில் 'எப்படி இருக்கிறீர்கள் (கெம் சொ)' என்று கேட்டார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உடனே பிரதமர் மோடி உட்பட கூட்டத்தில் இருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 'உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பல்வேறு வகையான நோய்களுக்கு பாரம்பர்ய மருந்துகளைத்தான் முதலில் நாடுகின்றனர். உலகம் முழுவதும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பாரம்பர்ய மருத்துவத்தை மேம்படுத்த இந்த உலகப் பாரம்பர்ய மருத்துவ மையம் தொடங்கப்படுகிறது' என்று தெரிவித்தார்.
35 ஏக்கரில் அமையவிருக்கும் இந்தப் பாரம்பர்ய மருத்துவ மையம் 2024-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்றும், இத்திட்டத்திற்கு இந்தியா 250 மில்லியன் டாலர் செலவிடும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அடுத்த 30 ஆண்டுகளில் பாரம்பர்ய மருந்துகள் உலக அளவில் முக்கியத்துவம் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று காந்தி நகரில் நடக்கும் குளோபல் ஆயுஷ் முதலீடு மற்றும் கண்டுபிடிப்பு கூட்டத்தில் டாக்டர் டெட்ராஸ் பிரதமர் மோடியுடன் பங்கேற்கிறார்.
உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தில் என்னென்ன விஷயங்கள் இடம்பெறும் என்பது குறித்து சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் கேட்டோம்.
''பாரம்பர்ய மருத்துவத்தைப் பரவலாக்கும் நோக்கில் மருத்துவ நிறுவன மையங்களை தொடங்குதல், அதற்கான திட்ட வரையறையை வழங்குதல், நிதியளித்தல், ஆராய்ச்சிக்கான கட்டமைப்புகளை உருவாக்குதல், பாரம்பர்ய மருத்துவம் குறித்த நூல்கள் வெளியிடுதல், கல்லூரிகள், பல்கலைக்கழகம் அமைத்தல் போன்ற பல ஆக்கபூர்வமான பணிகள் இந்த மையத்தின் மூலமாக நடைபெற வாய்ப்பு உள்ளது. பாரம்பர்ய மருத்துவத்தை வளர்த்தெடுப்பதிலும், பயன்பாட்டிலும் இந்தியா சிறந்து விளங்குவதால் இந்த மையம் தற்போது இந்தியாவில் அமைகிறது.
உலக நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் அந்தந்த நாட்டினுடைய பாரம்பர்ய மருத்துவத்தையே பயன்படுத்துகிறார்கள். அந்தந்த நாட்டினுடைய சொந்த மருத்துவ முறைகளை வளர்த்தெடுத்தால்தான் உலகின் மக்கள் தொகைக்கு ஏற்ப அனைவருக்கும் மருத்துவம் சென்று சேரும் என்பதால்தான், உலக சுகாதார நிறுவனத்தின் கொள்கை முடிவில், அந்தந்த நாட்டினுடைய பாரம்பர்ய மருத்துவத்தையும் ஆதரிக்க வேண்டும் என்ற மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் இந்தியாவிலுள்ள பாரம்பர்ய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் , சித்த மருத்துவம் உள்ளிட்டவை ஆரோக்கிய நலப் புதையலாக இருப்பதால் இந்த மையத்தை தொடங்கலாம் என்கிற முடிவுக்கு உலக சுகாதார நிறுவனம் வந்துள்ளது.
இந்தியாவில் ஆயுர்வேதம், யுனானி, யோகா போன்ற பாரம்பர்ய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்போதைய மத்திய அரசு, சுதேசி கொள்கை என்று சொல்லி இவற்றையெல்லாம் மீட்டெடுத்து வருகிறது. குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தவர் ராஜேஷ் வைத்யா. அவர்தான் தற்போது ஆயுஷ் துறையின் செயலாளராக இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பாரம்பர்ய மருத்துவ மையத்தின் மூலம் சித்த மருத்துவ முறைகளை உலகளவில் ஊக்குவிப்பதற்கும், பிரசாரம் செய்வதற்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் அறிவியல் உலகில் பேசுபொருளாவதற்கும், சித்த மருத்துவத்தில் நிறைய ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், ஆய்வுபூர்வமாக இது நிரூபிக்கப்பட்ட மருத்துவம் என்று தெரிவிக்க இந்த பாரம்பர்ய மருத்துவ சிகிச்சை மையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் உள்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டு மக்களுக்கும் நம் பாரம்பர்ய மருத்துவத்தை அளிக்க முடியும்.

மக்கள் பாரம்பர்ய உணவு முறைகளுக்கும், வாழ்வியலுக்கும், விவசாயத்துக்கும் மாறுகிற இந்நேரத்தில் மருத்துவத்திலும் பாரம்பர்யத்துக்கே மாறுவது வெகுதொலைவில் இல்லை. அதன் தொடக்கமாக இந்த பாரம்பர்ய சிகிச்சை மையம் இருக்கும் என்று நம்புகிறோம். இந்த மையத்தில் தென்னிந்தியாவின் பாரம்பர்ய மருத்துவமான சித்த மருத்துவத்துக்கு என்று தனியாக ஒரு பிரிவு ஒதுக்கப்பட வேண்டும். ஆயுர்வேதத்துக்கு நிகரான முக்கியத்துவம் சித்த மருத்துவத்துக்கும் தரப்பட வேண்டும். இதற்கு தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மாநில அரசு எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் பாரம்பர்ய மருத்துவ மையத்தில் சித்த மருத்துவத்துக்கான இடம் கிடைக்கும்'' என்றார்.