Published:Updated:

கொள்ளை நோய் காலங்களில் வழிபாட்டுத் தலங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்... வரலாறு சொல்லும் பாடம்!

வரலாறு
வரலாறு

நீர், நெருப்பு, காற்று, நிலம் ஆகிய இயற்கை கூறுகள் ஒவ்வொன்றும் நம்மை வாட்டும்போதெல்லாம், நாம் கலங்கினாலும் மீண்டுவருகிறோம். இதைப் பற்றிய தொடர் சிந்தனையால், நம் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டினேன்.

கொரோனா வைரஸ் பாதிக்காத இடமே இன்று இல்லை. உலகம் முழுவதும் வயது வித்தியாசமே இல்லாமல் எல்லோரையும் பயமுறுத்தும் வார்த்தை. இதன் பாதிப்பிலிருந்து தப்பிக்கப் பல வகையான அறிவியல் கருத்துகள் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை நம் காதுகளை எட்டுகின்றன. இயற்கையும் விலங்குகளும் மட்டும் வழக்கம்போல இயங்க, நாம் எல்லோரும் நமது கூட்டுக்குள் அடைப்பட்டிருக்கிறோம்.

நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள், இந்நேரத்தில் பல அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். மக்கள் எண்ணில்லா வகைகளில் பரிதாபமாகத் தவிக்கிறார்கள். இரக்கமுடைய பொதுமக்கள் முதல் சமுதாயத்தின் பல தட்டு மனிதர்களும் உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர். நீர், நெருப்பு, காற்று, நிலம் ஆகிய இயற்கை கூறுகள் ஒவ்வொன்றும் நம்மை வாட்டும்போதெல்லாம், நாம் கலங்கினாலும் மீண்டுவருகிறோம். இதைப் பற்றிய தொடர் சிந்தனையால், நம் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டினேன்.

religoin
religoin

மனித வாழ்க்கை என்பதே இயற்கையுடனான போராட்டம்தான். சென்ற நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் நம்மை தாக்கிய பிளேக், அதற்கு முன் வாட்டிய அம்மை போன்ற பலவும் சொல்லிய பாடம், தூய்மையின் தேவை ஒன்றே. கல்வெட்டுகளைத் தேடியே பழகியதால் ஆர்வம் அங்கேயே சென்றது. `டைம் மெஷின்’ போல என்னை அப்படியே 1000 ஆண்டுகள் பின்நோக்கி அழைத்துச் சென்றன கல்வெட்டுகள்.

அன்றைய சமுதாயம் இயற்கை பேரிடர்களை எதிர்கொண்ட முறை மற்றும் கருணைக் கரங்கள் வந்த திசையை விளக்கின கல்வெட்டுகள். முதலில் வந்தது, முடிசூடிய மன்னர்களின் உதவியே. வேளாண்மையே பெரும்பான்மை மக்களுக்கான தொழில் என்பதால், முதலில் மன்னர்கள் நிலவரியை ரத்துசெய்தனர். சில காலத்தில் குறிப்பிட்ட தொகை குறைக்கப்பட்டது. இதன்மூலம் மக்களின் சுமையைக் குறைத்து, மன்னன் தனது வருமானத்தின் ஒரு பகுதியைக் குறைத்துக்கொண்டான்.

கோயில்களின் சேவை இரண்டாம் இடம் வகித்தது. இதற்கு பின்னரே செல்வந்தர்கள், வணிகர்கள் மற்றும் பலரின் பங்கு வருகிறது. ஆம்! இயற்கை சீற்றங்களின்போது, கிராமங்களின் மறுவாழ்வுக்காகக் கோயில் சொத்து பல வகைகளிலும் பயன்பட்டது. மக்கள் கடவுளுக்கு அளித்த காணிக்கை, திரும்ப அவர்களுக்கே பயன்பட்டது. இது, துன்ப காலங்களில் மக்களுக்கு மறு வாழ்வளித்தது. தெய்வச் சிலைகள் தன் மீது தாங்கியிருந்த அத்தனை தங்க நகைகளையும் மக்களுக்குத் தானமாகவும், பல நேரங்களில் கடனாகவும் கோயில்கள் வழங்கின. கோயிலில் இருந்த வெள்ளிப் பாத்திரங்களும் மக்களின் கைகளுக்கு இடம்மாறின. இவற்றோடு, கோயிலின் நிதி இருப்பும் பகிர்ந்தளிக்கப்பட்டது. கோயில்களின் அசையும் செல்வம் அனைத்தும் மக்களுக்காகவே பயன்பட்டன.

religion
religion

இதற்கு ஆதாரமாக அமைந்த ஒரு கல்வெட்டின் கருத்தை அறியலாம். சோழப் பேரரசின் தலைநகர் தஞ்சைப் பகுதியிலிருந்தே ஓர் உதாரணத்தைச் சொல்லமுடியும். தஞ்சையின் ஆலங்குடியில் கிடைத்த சோழர் காலத்து கல்வெட்டு வரி, `கால தோஷம்' எனும் ஒரு பேரிடரைச் சொல்கிறது. இச்சொல், இயற்கை மற்றும் மனிதனால் ஏற்பட்ட ஒரு துன்பத்தை குறிப்பதாக புரிந்துகொள்ளலாம். இந்தத் துன்பத்திலிருந்து மக்களை மீட்க, கோயிலின் சொத்து கடனாக, பொதுமக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

`பொதுமக்கள் கால தோஷம் காரணமாக, கோயிலின் பண்டாரத்திலிருந்து எல்லா தங்கநகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் சேர்த்து, மொத்தம் 1011 கழஞ்சு எடைகொண்ட தங்கம், 464 பலம் வெள்ளி கடனாகப் பெற்றுக்கொண்டனர்.’ என்கிறது ஆலந்தூரின் கல்வெட்டு வாசகம்.

மக்கள் கடனை திரும்பச் செலுத்தினார்களா எனும் கேள்விக்கான பதில் தெரியவில்லை. ஆனால், துன்பக் காலத்தில் மானுடம் இறையருளைத்தானே வேண்டும். இவ்வாறு உதவிய இறைவனை கண்டிப்பாகப் பொதுமக்கள் ஏமாற்றி இருக்கமாட்டார்கள். மக்களின் பணம் மகேசனுக்கு என அர்ப்பணிக்கப்படுகிறது. அதேபோல, பேரிடர் காலங்களில் அந்த மகேசனின் பணம், மக்களுக்கும்தானே பயன்பட வேண்டும்?

இந்தக் கொள்கையைத் தற்போது செல்வம் மிகுந்த திருப்பதி தேவஸ்தானம், சபரிமலை ஐயப்பன், திருவனந்தபுரத்தின் பத்மநாபசுவாமி போன்ற முக்கிய கோயில்கள், இன்று மறந்துபோயிருப்பது கவலைக்குரியது. இந்த வகையில், இஸ்லாமியர்களின் டெல்லியின் நிஜாமுதீன், ராஜஸ்தானின் அஜ்மீர் காஜாஷெரீப் உள்ளிட்ட பல தர்காக்களும் மக்களுக்கு உதவலாம். இந்தப் பட்டியலில், பஞ்சாபின் அம்ருத்ஸரின் சீக்கியப் பொற்கோயிலும், அவர்களுடைய குருத்துவாராக்களும், கிறிஸ்துவ தேவாலயங்களும் பொதுமக்களுக்கு உதவுவதில் அவற்றுக்கு இழப்பில்லை. இந்த வழிபாட்டுத்தலங்களில் இல்லாத பணமா? பிறகு இவற்றுக்கு என்னதான் செலவிருக்க முடியும்?

temple
temple

இதற்கு சமீப உதாரணமாக பணமதிப்பு நீக்கம் சமயத்தில், கேரளாவில் ஒரு சம்பவம் நடைபெற்றது. இதில் ஒரு கிறிஸ்துவ தேவாலயப் பாதிரியார், நிதியை பொதுமக்கள் முன் வைத்திருந்தார். இதுபற்றி பரவலாகச் செய்திகளில் வெளியாகி இருந்தது.

தற்போதைய கொரோனா சூழல், அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களிலும் மக்கள் கூடமுடியாத நிலையை உருவாக்கிவிட்டது. இந்த நிலைமை சரியாக, அங்குள்ள செல்வங்கள், மறுதானமாகப் பொதுமக்களுக்கு அளிப்பது அவசியம். இதைக் கடவுள்களின் பெயரால் நிர்வகித்துவரும் மனிதர்களே செய்யமுடியும்.

- முனைவர் எஸ்.சாந்தினிபீ

கட்டுரையாளர், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைழகத்தின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர்.

அடுத்த கட்டுரைக்கு