Published:Updated:

கொரோனா `டெல்டா' இருக்கட்டும்; மற்ற வைரஸ்கள் எப்படி பெயரிடப்பட்டன தெரியுமா?

டெல்டா என்று பெயர் வைத்தது ஒருபுறம் இருக்கட்டும். கொரோனா வைரஸ் மட்டுமன்றி, பொதுவாக இதுபோல் மனிதர்களிடையே தொற்றுநோய்களைப் பரப்பும் வைரஸ் நுண்கிருமிகளுக்கு எப்படிப் பெயர் வைக்கிறார்கள்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவில் பரவிவரும் உருமாறிய புதிய வகை கொரோனாவுக்கு, சமீபத்தில் டெல்டா என்று பெயரிடப்பட்டது. இதைக் கண்டித்து, மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை குறித்து, ம.நீ.ம கட்சியின் மாநில செயலாளர் பொன்னுசாமியின் மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அதற்குப் பதிலளித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ``உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி நோயான உருமாறிய கொரோனா வைரஸுக்கு உலக சுகாதார நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்டா எனப் பெயர் சூட்டியிருந்ததை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். அந்த அறிக்கையைப் படித்த பல விமர்சித்து வருகின்றனர்.

India Covid 19 Outbreak
India Covid 19 Outbreak

ஆனால், டெல்டா என்கிற பெயர் கிரேக்க எண்களில் ஒன்றாக இருந்தாலும், பெரும்பாலும் தமிழகத்தில் டெல்டா என்றால் ஆற்றுப்படுகை அல்லது விவசாயத்துக்கு ஏற்ற சமதள விளைநிலப் பகுதியாகவே பார்க்கப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை. அதுமட்டுமன்றி, டெல்டா என்கிற பெயரைக் கேட்கும் பலருக்கும் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களையே அது நினைவூட்டும். அப்படியிருக்கும்போது, அந்தப் பெயரை ஆபத்தான நுண்கிருமிக்குச் சூட்டியபோது மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சியும் அச்சமுமே தோன்றும் என்பதால்தான், உலக சுகாதார நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டேன்" என்று கூறியுள்ளார்.

உருமாறிய புதிய கொரோனா வைரஸ்களுக்கு, கிரேக்க எழுத்துகளில் பெயரிட வேண்டுமென்று சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில், டெல்டா என்று பெயர் வைத்தது ஒருபுறம் இருக்கட்டும். கொரோனா வைரஸ் மட்டுமன்றி, பொதுவாக இதுபோல் மனிதர்களிடையே தொற்றுநோய்களைப் பரப்பும் வைரஸ் நுண்கிருமிகளுக்கு எப்படிப் பெயர் வைக்கிறார்கள்?

SARS-CoV-2, HIV போன்ற வைரஸ்களால் ஏற்படும் தொற்றுநோய்களுக்கு கோவிட்-19, எய்ட்ஸ் என்று அதிகாரபூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு நோய்களை உண்டாக்கும் நுண்கிருமிகளுக்கும் பெயரிடுவதில், பல சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் பங்கும் இருக்கும். இந்நிலையில், உலகமே ஒரு தொற்றுநோய் பேரிடரில் சிக்கியிருக்கும்போது, அவற்றுக்குப் பெயரிடுவதில் அவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமா என்ற கேள்வியும் பலர் மனதில் எழலாம். ஆனால், உண்மையில் அப்படிப் பெயரிடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

corona
corona
``உயிரைக்கொல்லும் வைரஸூக்கு `டெல்டா' பெயரா?!" - WHO முடிவுக்கு இப்படியும் ஓர் எதிர்ப்பு

உலகளாவிய ஊடகங்கள் கொரோனா பெருந்தொற்று தொடங்கிய நேரத்தில் அது சார்ந்த செய்திகளை வெளியிடும்போது, அந்த நுண்கிருமியைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெயர்கள் பலவாறாக வேறுபட்டன. சிலர் சீன கொரோனா வைரஸ் என்றார்கள். இன்னும் சில ஊடகங்கள் வுகான் வைரஸ் என்றழைத்தன. இப்படியாக, இந்தத் தொற்று தொடங்கிய நிலப்பகுதியைக் குற்றம் சாட்டும் வகையிலான பெயர்கள் அந்த நுண்ணுயிரிக்கு வழங்கப்பட்டன. இன்னும்கூட, சில ஊடகங்கள் அப்படியான பெயர்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால், விரைவில் 2020-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதியன்று சர்வதேச வைரஸ் வகைப்பாட்டு குழுமம் இந்த நுண்ணுயிரிக்கு SARS-CoV-2 என்று பெயரிட்டார்கள். அதேநேரத்தில், உலக சுகாதார நிறுவனம் இந்தக் குறிப்பிட்ட நுண்ணுயிரியால் பரவக்கூடிய தொற்றுநோய்க்கு கோவிட்-19 என்று பெயரிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹெச்.ஐ.வி வைரஸால் உண்டாகக்கூடிய எய்ட்ஸ் நோய்க்கும்கூட, 1981-ம் ஆண்டு ஆணும் ஆணும் உடலுறவு வைத்துக் கொள்வதால் இது ஏற்படுவதாகக் கூறி அதற்கு கே கேன்சர் (gay cancer), gay-related immune deficiency என்றெல்லாம் பெயரிட்டு எழுதப்பட்டது. பின்னர், ஹெராயின் பயன்படுத்துவோர், குருதி உறையாமை குறைபாடுகளுக்கு ஆளாகியிருப்போருடன் இந்த நோய் தொடர்புபடுத்தப்பட்டது. 1982-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (CDC), acquired immunodeficiency syndrome, AIDS என்று இந்த நோய்க்குப் பெயரிட்ட பிறகே இந்தத் தவறான கருத்துகள் குறையத் தொடங்கின. இது உண்மையில் நோய் எதிர்ப்புக் குறைபாட்டோடு தொடர்புடைய நோய் என்பதைப் பின்னர்தான் ஓரளவுக்கு மக்களிடையே கொண்டு சேர்க்க முடிந்தது. அதற்கு அடுத்து நான்கு ஆண்டுகள் கழித்துதான், ஹெச்.ஐ.வி (Human immunodeficiency virus, or HIV) என்று பெயரிடப்பட்டது.

HIV
HIV

2015-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம், புதிதாகக் கண்டறியப்படும் தொற்றுநோய்களைப் பெயரிடுவதற்கான சில பொதுவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதன்படி, ஒரு நோயின் பெயரில், அதன் மரபியல்புகளைக் குறிக்கும் பதங்கள் இருக்க வேண்டும். கூடுதலாக, அந்தப் பெயரில் நோய்க்காரணிகளையும் குறிப்பிடலாம். மிக முக்கியமாக, ஒரு தொற்றுநோயின் பெயரில் எந்தக் குறிப்பிட்ட நிலவியல் அமைப்புகளையோ, குறிப்பிட்ட கலாசாரத்தையோ, மக்கள் தொகையையோ, பணிகளையோ, மக்களின் பெயர்களையோ வைக்கக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறியது. நாடுகள், பொருளாதாரம், மக்கள் ஆகியவற்றில் அது செலுத்தும் எதிர்மறையான தேவையற்ற தாக்கங்களைக் குறைக்க வேண்டும் என்று அந்த வழிகாட்டுதல் அறிக்கை குறிப்பிட்டது.

இதுவே சர்வதேச வைரஸ் வகைப்பாட்டு குழுமம், தொற்றுநோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளுக்குப் பெயரிடுவதில் சற்றே வேறுபட்ட அணுகுமுறையைக் கையாள்கிறது. இங்கும், நிலவியல் அமைப்புகளையோ, குறிப்பிட்ட கலாசாரத்தையோ குறிப்பிடுவதை ஊக்கப்படுத்துவதில்லை. புதிதாகக் கண்டறியப்படும் ஒரு வைரஸ் நுண்ணுயிரிக்கு, முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணுயிரிகளோடு அவற்றுக்கு இருக்கும் மரபு சார் தொடர்புகளின் அடிப்படையில் குறிப்பிடுகிறார்கள்.

Corona Virus
Corona Virus

அதாவது, நீண்டகால நுண்ணுயிரியல் ஆராய்ச்சியில் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் வைரஸ் வகைகளுடைய மரபணுவுக்கும் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் வைரஸ்களுடைய மரபணுவுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்படும்போது, அது எந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியாக இருக்கிறதோ, அந்த வைரஸ் குடும்பத்தின் அடிப்படையிலேயே புதிய வைரஸுக்கும் பெயரிடப்படுகிறது. உதாரணத்துக்கு, சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ள SARS-CoV-2 என்ற நுண்ணுயிரி கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது என்று கண்டறியப் பட்டதாலேயே, அப்படிப் பெயரிடப்பட்டது.

இது 2003-ம் ஆண்டு தொற்றுப் பேரிடரை நிகழ்த்திய சார்ஸ் தொற்றுநோயைப் பரப்பிய கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியோடு தொடர்புடையது. ஆகவேதான், அது சார்ஸ் பெயரிலேயே வகைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நுண்ணுயிரி பரப்பும் நோய் என்பதால், அந்த நோயை CO என்றும் வைரஸ் மூலம் பரவுவதால் VI என்றும் நோய் என்பதைக் குறிப்பதற்காக D (disease) என்றும், 2019-ம் ஆண்டு தொடங்கியதால் அதற்கு 19 என்று குறிப்பிட்டு, COVID-19 என்ற பெயர் வழங்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பு - WHO
உலக சுகாதார அமைப்பு - WHO

2015-ம் ஆண்டு விதிமுறைகளின்படி, ஒரு நிலப்பகுதியின் பெயரையோ, கலாசாரத்தையோ குறிப்பிடக் கூடாது. ஆனால், சமீபத்தில் புதியதாகப் பரவத் தொடங்கிய உருமாறிய கொரோனா வைரஸ்கள், UK/Kent (B.1.1.7), தென்னாப்பிரிக்கா (B.1.351), பிரேசில் (P.1), இந்தியா(B.1.617.2) என்று எந்தெந்த நாடுகளில் அந்த உருமாறிய வைரஸ்கள் தோன்றினவோ, அந்த நாடுகளின் பெயரில் அழைக்கப்பட்டன. இதைச் சரிசெய்வதற்காகவே, அந்தப் பெயர்களை கிரேக்க எழுத்துகளில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று உலக சுகாதார நிறுவனம் மாற்றிப் பெயரிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வரக்கூடிய அடுத்த புதிய வகைகளுக்கும் இதேபோல் கிரேக்க எழுத்துகளின் வரிசையில், எப்சிலோன், ஸீட்டா, ஈட்டா, தீட்டா, லோட்டா, கப்பா என்றே பெயரிடப்பட்டுள்ளன.

மேலும், இந்த புதிய வகைகளின் மரபியல் அடிப்படையில் வைக்கப்பட்ட அறிவியல் பெயர்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறிய உலக சுகாதார நிறுவனம், உலகளவில் பொதுமக்கள், அதிகாரிகள், ஊடகங்கள் ஆகியவற்றில் அவற்றின் பெயர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைச் சரிசெய்யவே இந்த முறையில் எளிமைப்படுத்திய பெயர்களை வழங்கியிருப்பதாகத் தெரிவித்தது.

இதற்கு முன்னர் ஸ்பானிஷ் காய்ச்சல், மத்திய கிழக்குப் பகுதியை குறிக்கும் வகையில் பெயரிடப்பட்ட மெர்ஸ் நோய் (MERS, Middle East Respiratory Syndrome) போன்ற நோய்கள் ஒரு குறிப்பிட்ட நிலவியல் அமைப்புகளையும் அவைசார்ந்த மக்களையும் குறிப்பிட்டு பெயரிடப்பட்டுள்ளன. அதேபோல், எபோலா என்ற நதியிலிருந்து தொடங்கியதால் எபோலா வைரஸ் என்றும் உகாண்டாவிலுள்ள ஸிகா காட்டில் தொடங்கியதால் ஸிகா வைரஸ் என்றும் பெயரிடப்பட்டன.

corona
corona

அவை இன்றளவும் பெயர் மாற்றப்படாமலே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. உலக சுகாதார நிறுவனத்தின் 2015-ம் ஆண்டு வழிகாட்டுதல்கள் வருவதற்கு நீண்ட காலம் முன்பே இந்தப் பெயர்கள் வழங்கப்பட்டுவிட்டன என்றும் அவை வரலாற்றில் அந்தப் பெயர்களிலேயே பதிவாகிவிட்டதாலும் தற்போது மீண்டும் மாற்றவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் கெய்ஜி ஃபுகுடா தெரிவித்துள்ளார்.

இப்படி நிலவியல் அடிப்படையில் தொற்றுநோய்கள் பெயரிடப்பட்டதால், அந்தப் பகுதிகளிலிருந்து வரும் மக்கள் பல சிக்கல்களைச் சந்தித்துள்ளனர். அவர்கள் ஏதோ நோய்களைச் சுமப்பவர்களாக நடத்தப்பட்ட கதைகளும் இருக்கின்றன. அது நடந்துவிடக்கூடாது என்பதாலேயே தற்போது நாடுகளின் பெயர்களுக்குப் பதிலாகப் புதிய கொரோனா வகைகள் கிரேக்க எழுத்துகளில் பெயரிடப்பட்டுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு