Published:Updated:

மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட `துப்பாக்கி' அக்‌ஷரா மீண்டது எப்படி? #WorldMentalHealthDay

Akshara Gowda
Akshara Gowda

``நீங்க தனியா இல்ல... இந்த உலகமே உங்களுக்காக இருக்கு. இதை நீங்க உணரணும். அடுத்தவரின் உதவியை நாட தயங்கக் கூடாது. உங்க பிரச்னையைப் பெற்றோரிடமோ நண்பர்களிடமோ பகிர்ந்துக்கோங்க. பகிர்ந்துக்கிறதாலயே பாதி பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைச்சிடும்."

'துப்பாக்கி', 'போகன்' போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் அக்‌ஷரா கவுடா. கன்னட நடிகையான இவர் தமிழ் உட்பட பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பிட்ட காலகட்டத்துக்கு முன்பாக மனச்சோர்வால் (Depression) பாதிக்கப்பட்ட இவர், தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல தினம் மற்றும் தேசிய மனச்சோர்வைக் கண்டறியும் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு மனச்சோர்விலிருந்து மீண்ட அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அக்‌ஷரா கவுடா.

"நான் விகடனுக்கு இதுக்கு முன்னாடி ஒரு தடவை பேட்டி கொடுத்துருக்கேன். என் நோயைப் பற்றி அல்ல... சினிமாவைப் பற்றி" என்ற முன்னுரையுடன் பேசத் தொடங்கினார் அக்‌ஷரா .

"என் வாழ்க்கை நல்லாத்தான் போய்ட்டு இருந்துச்சு. நிறைய படங்களில் வாய்ப்பு, அன்பான பெற்றோர்னு எந்தக் குறையும் இல்லை. ஆனால், எனக்கு மனசுல ஏதோ ஒரு கவலை இருந்துட்டே இருந்துச்சு. அதனால என்னை நானே தனிமைப்படுத்திக்க ஆரம்பிச்சேன். ராத்திரியெல்லாம் தூக்கமே வராது. மனசுல பதற்றம் (Anxiety) இருந்துட்டே இருந்தது. பதற்றம்தான் என் பிரச்னைக்கான முதல் அறிகுறியாக உணர்ந்தேன். ஆனாலும், எட்டு மாதம் வரை என்ன பிரச்னைன்னு உணரவே முடியல.

Akshara Gowda
Akshara Gowda

உடல்எடை குறைஞ்சிட்டே இருந்தது. அதனால் என் பெற்றோர் ஏதாவது நோயாக இருக்குமோன்னு சந்தேகப்பட்டாங்க. அப்படியும் எதுவுமில்லை. கொஞ்ச நாள்கள் கழிச்சுதான் இது உடல் சார்ந்த நோய் இல்லை... மனம் சார்ந்த பிரச்னைன்னு தெரிஞ்சது. அதுக்கு சிகிச்சை எடுக்க ஆரம்பிச்சேன்.

சிகிச்சை எடுத்துக்கிட்டு இருக்கும்போது எந்த சினிமாவிலும் கமிட்டாவதைத் தவிர்த்தேன். காரணம், ஒரு டேக் எடுக்க வேண்டிய இடத்துல பல டேக் எடுக்க வேண்டிய நிலை வரலாம். என் பிரச்னையினால பிறர் பாதிக்கப்பட வேண்டாம்னுதான் கொஞ்ச நாள் நடிக்காம இருந்தேன். 'டிப்ரஷன்' ஒரே நாளில் வரும் பிரச்னை இல்லை. டிப்ரஷன்ல இருக்கிறவங்களுக்குத் தற்கொலை எண்ணம் வர்றது சகஜம். நானும் அதுக்கு விதிவிலக்கு இல்லை. அந்த மாதிரி நேரங்கள்ல என்னை பத்திரமா பார்த்துக்கிட்டவங்க என் பெற்றோர்தான்.

ராத்திரி எத்தனை மணி ஆனாலும், நான் தூங்குறவரை அவங்களும் முழிச்சிட்டு இருப்பாங்க. இப்போலாம் அதைப்பத்தி பேசும்போது நான் காமெடியா சொல்றதுண்டு... `ஒருவேளை, தற்கொலை செஞ்சிருந்தா இப்போ இருக்கிறதைவிட ஃபேமஸ் ஆகியிருப்பேன்’ " என்று கூறிச் சிரிக்கும் அக்‌ஷரா, மனச்சோர்விலோ, மனஅழுத்தத்திலோ இருக்கும்போது அதிலிருந்து மீள்வதற்கான வழிகளையும் சொல்கிறார்.

நான் இப்போ டிப்ரஷன்ல இருந்து மீண்டிருக்கேன். மறுபடியும் அந்தப் பிரச்னை என்னை பாதிக்காமலிருக்க உடற்பயிற்சி, யோகா செய்கிறேன். அது என் மனசை பலப்படுத்துது. ஆனா, நம் சமூகத்துல உடல்நலத்துக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மனநலத்துக்குக் கொடுக்கப்படறதில்லை.
அக்‌ஷரா கவுடா
Akshara Gowda
Akshara Gowda

நம்ம சமூகத்துல ஆண்கள் அழக்கூடாதுன்னு சொல்லியே வளர்க்கப்படுறாங்க. அதனால மனசுல உள்ள கவலைகளை வெளிக்காட்ட முடியாம தவிக்கிறாங்க. இதனால் மனச்சோர்வு அடைந்து, வாழ்வை வெறுக்கும் நிலைக்கு பல ஆண்கள் ஆளாகுறாங்க.

டிப்ரஷன்றது ஒரு கொடிய நோய்னு நினைச்சு பயப்படத் தேவையில்ல. இது குணப்படுத்தக்கூடிய பிரச்னை. நானே அதற்குச் சிறந்த உதாரணம். பிரச்னையிலிருந்து மீண்டு என்னுடைய பழைய சந்தோஷமான வாழ்க்கைக்குத் திரும்பிட்டேன். படங்கள்ல நடிக்கிறேன். என் வாழ்க்கை இப்போ சந்தோஷமா போயிட்டிருக்கு" என்று தம்ஸ் அப் காட்டி சிரிக்கிறார் அக்‌ஷரா கவுடா.

சோகம் வேறு; மன அழுத்தம் வேறு' - ஸ்ட்ரெஸ் அனுபவம் பகிரும் தீபிகா படுகோன்! #NoMoreStress

பொதுவாக, புற்றுநோய் போன்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள்தாம், தாங்கள் மீண்டு வந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதுண்டு. அவை பலருக்கும் உத்வேகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும். தற்போது மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கும் இதுபோன்ற அனுபவப் பகிர்வுகள் அவசியமாகின்றன. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் தான் மனச்சோர்வு பாதிப்பிலிருந்து மீண்டதாக வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.

பின் செல்ல