Election bannerElection banner
Published:Updated:

இந்த ஊரடங்கு நாள்களில் தனிமனிதனாக என்னென்ன செய்யலாம்?

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

21 நாள்கள் ஊரடங்கு. பொறுப்புள்ள குடிமகன்களாக நாம் செய்ய வேண்டியது என்ன?

'வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது' என்று கெத்தாக அறிவித்துக்கொண்டிருந்த தமிழக அரசுக்குப் பேரிடியாக வந்து சேர்ந்திருக்கிறது அந்தச் செய்தி!

'கொரோனா பாதிப்பு அறிகுறிகளோடு '12-வது நபராக' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் வெளிநாட்டுக்குச் சென்று வந்தவர் அல்ல' என்ற பகீர் உண்மைதான் அது.

ஆம்.... கொரோனா வைரஸ், தன் கோர முகத்தை இப்போதுதான் பட்டவர்த்தனமாக வெளிக்காட்ட ஆரம்பித்திருக்கிறது. கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை அரசும் மருத்துவத்துறையும் ஊடகம் வழியே தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அந்த விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் எந்தளவு சென்றடைந்திருக்கின்றன..? சென்னை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரப் பேருந்து நிலையங்களில், தங்கள் ஊர்களுக்குச் செல்ல மக்கள் முண்டியடித்துக்கொண்டு பயணப்படும் காட்சிகள் பகீர் கிளப்புகிறது.

`ஹலோ.. நான் கமிஷனர் ஆபீஸிலிருந்து பேசுகிறேன்!' 
- முதல்வர் வீட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞர்
கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்

இருமல், தும்மல் எனக் காற்று மூலமாகவே கொரோனா தொற்றுப் பரவும் ஆபத்து உள்ளது எனும்போது இப்படி ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில், ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடும்போது நோய்த் தொற்றின் தீவிரம் எப்படியிருக்கும் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் மக்கள் தாமாக சிலவற்றைக் கடைப்பிடிக்காவிட்டால் இன்னும் நோயின் தாக்கம் அதிகரிக்கத்தான் செய்யும்.

மழை, வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கும் இப்போதைய கொரோனா பாதிப்புக்கும் முக்கிய வேறுபாடு ஒன்று உண்டு. அது ஏனைய பேரிடர்களிலிருந்து பொதுமக்களைக் காப்பதென்பது முழுக்க முழுக்க அரசின் கடமையாக இருக்கிறது. ஆனால், கொரோனா பேரிடரைப் பொறுத்தவரை, இந்நோய்த் தாக்குதலிலிருந்து தப்பித்து தற்காத்துக்கொள்வதென்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்குமான பொறுப்பாக இருக்கிறது.

குடும்பத்தில்...

* அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருக்காது. ஆகவே வாங்கிக் குவித்து அதற்கு தட்டுப்பாடு ஏற்படுத்திவிடாதீர்கள்.

* நிறைய பேர் இருக்கும் கூட்டுக்குடும்பம் என்றால் வீட்டில் இருக்கும்போதும் ஒருவருக்கொருவர் இடைவெளிவிட்டே அமருங்கள்.

* மருந்து, பால், காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு வெளியில் செல்வதென்றால் வீட்டில் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் மட்டுமே செல்லுங்கள். வயதானவர்களை அனுப்பாதீர்கள். இந்த 21 நாள்களும் அந்த ஒருவர் மட்டுமே செல்வது நன்மை பயக்கும். அப்படிச் சென்று வந்த நபர் வீட்டினுள் வந்ததும் கை, கால்களைக் கழுவுதல், முகம் கழுவுதல் என்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

* ஒரே பை, ஒரே வாகனம் என்று இந்த நாள்களில் ஒன்றையே திரும்பத் திரும்பப் பயன்படுத்துங்கள். அதைக் கிருமிநாசினிகள் தெளித்து வைத்துக்கொள்ளலாம்.

* கடைகளுக்குச் செல்ல நேர்ந்தால் பிறரிடமிருந்து விலகியே நில்லுங்கள். தேவையானவை என்ன என்பதை பட்டியல் இட்டுச் சென்று அவற்றை மட்டும் உடனே வாங்கிவிட்டுத் திரும்புங்கள்.

* திட்டமிடுங்கள். திட்டமிட்டால் இரண்டு மூன்று நாள்களுக்கு ஒருமுறை இந்த அத்தியாவசியப் பொருள்களை வாங்கலாம்.

* குடும்பத்துடன் தரமான நேரத்தைப் பயன்படுத்துங்கள். முதல் வாரத்தைவிட அடுத்தடுத்த வாரங்கள் கடுமையாக இருக்கலாம். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருங்கள்.

`2 நாள்களில் 2,000 தமிழர்கள் வெளியேற்றம்!' - கேரள அத்துமீறலால் பதற்றத்தில் வாளையார்
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சமூகத்தில்...

திருப்பூரைச் சேர்ந்த தன்னார்வலர் முரளிகுமாரிடம் பேசினோம்.

“தனி மனிதப் பொறுப்பைவிடவும் சமூகப் பொறுப்பு இம்மாதிரி சூழல்களில் அதிகம். எங்கள் குழுவின் சார்பில் அவரவர்கள் இருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள அத்திவாசியப் பொருள்கள் விற்கும் கடைகளில் சென்று சோஷியல் டிஸ்டன்சிங்கை வலியுறுத்தி விளக்கியதோடு 3 அடிக்கு ஒருவர் நிற்கும் வண்ணம் மார்க் செய்தோம்.

திருப்பூர்
திருப்பூர்

காலையில் இதைச் செய்துவிட்டு வரும்வழியிலேயே மக்கள் அதைப் பின்பற்றி நிற்பதைப் பார்த்தேன். கிராமங்களில், நகரங்களில் இருக்கும் இளைஞர்கள் இதை முன்னெடுத்துச் செய்யலாம்.

உங்கள் வீட்டுக்கு அருகில் வயதானவர்கள் இருந்தால் அவர்களுக்குத் தேவையானதைக் கேட்டு வாங்கி வாசலில் வைத்து அவர்களுக்கு உதவலாம். 10, 15 வீடு என்று குடியிருப்பில் இருப்பவர்கள் ஒட்டுமொத்தமாக எல்லாருக்கும் ஒருவர் மட்டும் சென்று வரலாம்.

வாட்ஸப் குழுக்களில் உரையாடும்போது தினமும் அனைவரும் வீட்டில்தான் இருக்கிறார்கள் என்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.

சிறுதொழில் செய்யும் நண்பர்களுக்கு இந்த நாள்களில் வருமானத்துக்கு வழி இல்லை என்றால் நண்பர்களாக சேர்ந்து உதவலாம். பண ரீதியாக இல்லாவிட்டாலும் அவர்களுக்கு தைரியமூட்டலாம்

முக்கியமாக, பதற்றமடையத் தேவையில்லை என்று நண்பர்கள், உறவினர்களுக்கு சொல்லிக்கொண்டிருங்கள்” என்றார் அவர்.

இவை தவிர உடல் பாகங்களை சோப்புத் தண்ணீரில் நன்கு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் அணிந்திருந்த உடைகளைக் களைந்துவிட்டு, புதிய உடைக்கு மாறிக்கொள்வது கூடுதல் நலம். ஏனெனில், துணி உள்ளிட்ட பொருள்களிலும்கூட கொரோனா வைரஸ் தங்கியிருக்கும் அபாயம் உண்டு.

மாநில, மாவட்ட எல்லைகளை மூடும் அரசின் அறிவிப்பு என்பது, நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும், ஏற்பட்டுவிட்ட நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்குமான வழிமுறைதான். ஆனால், விடுமுறையை சொந்த ஊரில் கழிக்கலாம் என்ற எண்ணத்தில் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதென்பது, நோய்த் தொற்றை விரும்பிப் பெற்றுக்கொள்வதும் விநியோகம் செய்வதுமாக மாறிவிடும் அபாயம் கொண்டது. அதனால்தான் நோய்த் தடுப்புக்காக அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையின்போதும் 'மக்கள் ஒத்துழைப்பு தாருங்கள்... தாருங்கள்' எனத் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.

அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

எனவே, அத்தியாவசியமற்ற தேவைகளைத் தவிருங்கள்; தேவையற்றத் தொடர்புகள் ஏற்படாவண்ணம் தடுத்துவிடுங்கள்; தனித்திருக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!

பொதுமக்களின் உயிர்காக்க தங்கள் இன்னுயிரையும் துச்சமென மதித்து, மருத்துவம், சுகாதாரம், பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகளைச் சேர்ந்தோர் கொரோனாவுக்கு எதிராகப் போராடிவரும்போது... தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள ஒவ்வொரு தனிமனிதரும் 'தனிமைப்படுத்துதலை' ஏற்படுத்திக்கொள்வதென்பது முடியாத காரியமல்ல.... இது காலத்தின் கட்டாயம்!

கொரோனாவால் நிலைகுலையும் இந்தியப் பொருளாதாரம்...  நிபுணர்களின் கருத்தும் கணிப்பும்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு