Published:Updated:

கொரோனா சோஷியல் டிஸ்டன்ஸிங்... சென்னை குப்பங்களில் நிலைமை என்ன? #SpotVisit

காசிமேடு பகுதியில்...
காசிமேடு பகுதியில்...

நெரிசல்மிக்க இடங்களில் வசிக்கும் மக்களிடம் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு போய்ச் சேர்ந்திருக்கிறதா என்பதே கேள்விக்குறி.

திரும்பும் திசை எங்கும் ஒலிக்கிற வார்த்தையாகிவிட்டது கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை கூட்டிக்கொண்டே செல்லும் இந்த வைரஸைக் கண்டு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளும், உலக அளவில் சுகாதாரத்தில் முன்னேறிய ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளும் அஞ்சி நிற்கின்றன.

Corona Virus
Corona Virus

இந்த நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவலை எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவருவது எனத் தீவிரம் காட்டிவரும் சூழலில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-க்கு மேல் என்ற சுகாதார அமைச்சகத்தின் தகவல் நடுங்கச்செய்கிறது.

இந்நிலையில், மக்கள்தொகை பெருக்கத்தில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் இந்தியாவில், சுகாதார வசதிகள் முறையாக கிடைக்கப்பெறாத இடங்கள் ஏராளம். நெரிசல்மிக்க இடங்களில் வசிக்கும் மக்களிடம் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு போய்ச் சேர்ந்திருக்கிறதா என்பதே கேள்விக்குறி.

மாட்டான் குப்பத்தில்...
மாட்டான் குப்பத்தில்...

உலக சுகாதார அமைப்பும், மத்திய மாநில அரசுகளும் அறிவுறுத்தி வரும் சோஷியல் டிஸ்டன்சிங் முயற்சி, உழைக்கும் மக்கள் செறிந்து வாழக்கூடிய பகுதிகளில் சாத்தியப்படுமா என்பதை அறியவும், சோஷியல் டிஸ்டன்சிங் இவர்களின் வாழ்வாதாரத்தில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறியவும் சென்னையில் சில இடங்களுக்கு விசிட் செய்தோம்.

திருவல்லிக்கேணிக்கு அருகில் உள்ள மாட்டான் குப்பத்தைச் சேர்ந்த மூர்த்தியிடம் பேசினோம்.

``அரசாங்கம் இதுவரைக்கும் எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் எடுங்கன்னு எங்கள வந்து பாக்கல. இதோ, இங்க இருக்குற ரேசன் கடையில மட்டும் குப்பையைக் கூட்டி, மருந்து அடிச்சிட்டுப் போனாங்க. டி.வி-யில எல்லாரும் தூரமா இருந்துட்டா வைரஸ் பரவாதுனு சொல்றாங்க. நாங்க எல்லாரும் ஒண்ணா பழகுறோம். நைட்டு பீச்சுல ஒண்ணா தூங்கப்போறோம். இப்போகூட, தெரு முனையில நேரத்தைக் கழிக்க விளையாடிக்கிட்டுதான் இருக்கோம். பீச்சுல சங்குக் கடை வெச்சிருக்கேன். பீச்சுக்கு யாரும் வராததால வியாபாரம் இல்ல. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வைரஸ் பஞ்சாயத்துனு தெரியல. ஆனா ஒண்ணு, எங்க குழந்தைகள நெனைச்சாதான் பயமா இருக்கு" என்றார்.

மாட்டான் குப்பத்தில்...
மாட்டான் குப்பத்தில்...

அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி, ``முடிஞ்ச அளவுக்கு டி.வி-யில சொல்ற மாதிரி குழந்தைகளும் நாங்களும் கையை சோப்பு போட்டுக் கழுவி, பாதுகாப்பா இருக்கோம். எல்லாரையும் வெளியே வர வேண்டாம்னு அரசாங்கம் சொல்லுது. கைகழுவக்கூட லாரி தண்ணிய எதிர்பார்த்துதான் காத்துட்டு இருக்கோம். தண்ணீர் பிடிக்குற சமயம் தெருவுல இருக்குற எல்லாருமே ஒண்ணாதான் இருப்போம். இந்த சமயத்துல நாங்க எப்படி வெளியில வந்து பேசிக்காம இருக்க முடியும். இன்னைக்கு வேலைக்கு போனாதான் இன்னைக்கான சோறு எங்களுக்கு கெடைக்கும். ரொம்பக்கஷ்டமான சூழல்லதான் இருக்கோம்" என்றார்.

தலைமைச் செயலகத்திற்கு மிக அருகாமையில் அமைந்திருக்கும் பகுதியான சத்யா நகர், அடிப்படை வசதிகள் அறவே இல்லாத ஓர் இடம். கழிவறை, குடிநீர், கழிவுநீரை வெளியேற்ற வசதியின்மை என இவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேறாத நிலையில், கொரோனா அலெர்ட் அங்கே போய்ச் சேர்ந்திருக்கிறதா என அறிய நேரில் சென்றோம். அங்கே அமர்ந்திருந்தவர்களிடம் பேச்சுக்கொடுத்தோம்.

சத்யா நகர் வாசிகள்
சத்யா நகர் வாசிகள்

``எந்த அரசு அதிகாரியும் எங்கள வந்து பாக்கல. கொரோனா வைரஸ் பத்தின செய்திகள் எல்லாத்தையும் டி.வி-யில கேட்டுதான் தெரிஞ்சிக்குறோம். அதுல சொல்ற மாதிரி, எங்கள எப்படிப் பாதுகாப்பா வெச்சுக்கணும்னு கவனமா இருக்கோம். குழந்தைகள அதிகப் படியா கவனமா பாத்துக்கிட்டாலும், மக்கள் அதிகமா வாழுற பகுதிங்குறதுனால மற்ற குழந்தைகளோட விளையாடுறதைத் தடுக்க முடியல. எங்க ஏரியாவை விட்டு வெளியில எங்கேயும் போறது இல்ல. மதிய நேரத்துல இந்த மாதிரி மரத்தடியில உட்கார்ந்து பேசி பொழுதைப் போக்குவோம். பீச்சுல கடை போடுவோம். கொரோனா பயத்துனால பீச்சுக்கு யாரும் வரமாட்டேங்கிறாங்க. வியாபாரம் இல்ல. எங்க பாதுகாப்பும் முக்கியமாச்சே. அதனால நாங்களும் பீச்சுக்குப் போறத விட்டுட்டோம்" என ஆளாளுக்கு வருத்தப்பட்டனர்.

அதே பகுதியைச் சார்ந்த திருநங்கை செல்வ நாயகி, ``கொரோனா பயத்துனால வாழ்வாதாரம் கஷ்டமாதான் இருக்கு. கண்ணுக்குத் தெரியுற யானை வெறிப்புடிச்சி ஓடி வந்தா, ஒண்ணு மறைஞ்சுக்கலாம், இல்ல வெரட்டி அடிச்சிரலாம். இது கண்ணுக்குத் தெரியாத கிருமி. என்ன செய்யுறதுனு தெரியல'' என்றார்.

North Chennai
North Chennai

வடசென்னையின் முக்கிய மீனவக் குடியிருப்புகளில் ஒன்றான காசிமேடு கொரோனா அலெர்ட்டுடன் இருக்கிறதா என விசாரிக்கச் சென்றோம். மரத்தடி நிழலில் குழுக்களாக உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்த பெண்களிடம் பேசினோம். ``கொரோனா வைரஸ் வந்துருச்சினு சொல்றாங்க. ஆனா தமிழ்நாட்டுக்கு இன்னும் வரல (Note: இதுவரை 6 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.) மீன் வியாபாரம் பண்றோம். எல்லாரையும் வெளிய வரக்கூடாதுனு சொல்றாங்க. அதனால மீன் வியாபாரம் கொஞ்சம் சுமாராதான் இருக்கு. மீன் வாங்க வர்றவங்ககிட்ட இருந்து எங்களுக்கு கொரோனா வைரஸ் பரவிரும்னு நாங்க பயந்தா, இன்னைக்கு பொழப்புக்கு என்ன பண்ணுறது. எல்லாரையும் கூட்டமா உட்காராம தள்ளித் தள்ளி உட்காரச் சொல்றாங்க. வெளியில இருந்து யாரும் புதுசா வந்தாங்கனா கொஞ்சம் தள்ளி நின்னு பேசுவோம். அரசாங்கத்துல இருந்து யாரும் எங்கள வந்து பாக்கல. ஞாயிற்றுக்கிழமை மோடி எல்லாரையும் வெளிய வரக் கூடாதுனு சொல்லி இருக்காரு. முடிஞ்ச அளவுக்கு வராம இருப்போம்" என்றனர்.

குழுக்களாக அமர்ந்து வலைகளைப் பின்னிக்கொண்டிருந்த மீனவர்கள் சிலரிடம் பேசினோம்.

``நாங்க கடலுக்குப் போறவங்க. எங்க உயிர் எப்போ வேணும்னாலும் போகக்கூடியது. நாங்க இந்த வைரஸுக்கு எல்லாம் பயப்படல. நாங்க எல்லாரும் எப்போதும் இந்த மாதிரி கூட்டமாதான் இருப்போம். ஞாயிற்றுக்கிழமை , மோடி யாரையும் வெளிய போகக்கூடாதுனு சொல்லி இருக்காரு. எங்களுக்கு வாழ்க்கை ஓடணும்னா நாங்க தொழிலுக்குப் போய்தான் ஆகணும். எங்க சங்கம் என்ன முடிவு எடுக்குதோ அதுபடி நடப்போம்" என்றனர்.

காசிமேடு பகுதியில்...
காசிமேடு பகுதியில்...

சமூகப் பரவலைத் தடுப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை, தனியார் நிறுவன ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தல், அங்காடிகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தற்காலிகமாக மூடச் சொல்லி உத்தரவு என அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கூட்டமில்லாத ரயில் நிலையங்கள்... வெறிச்சோடிய மெரினா கடற்கரை... கொரோனாவும் சென்னையும்..! #SpotVisit

உழைக்கும் மக்கள் நெரிசலாக வாழும் பகுதிகளில் சமூகப் பரவல் என்பது எளிதில் ஏற்பட்டு நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மோடி அறிவித்துள்ள ஒரு நாள் சுய ஊரடங்கு முயற்சி எல்லா மக்களிடமும் முழு வெற்றியைப் பெறுமா என்பதை எளிய மக்களின் இத்தகைய இருப்பிடங்களையும் அவர்களின் நிலைமையையும் வைத்தே கணித்துவிட முடியும்.

அடுத்த கட்டுரைக்கு