Published:Updated:

குழந்தைகளுக்குக் கொரோனா தாக்கம் குறைவு... ஏன்? காரணங்கள்! #StayInsideStaySafe

வைரஸ்
வைரஸ்

குழந்தைகளுக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை. ஆனால், குழந்தைகள் மூலம் வைரஸ் மற்றவர்களுக்குப் பரவும்' என்றிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க வேகமாகப் பரவி வரும் நிலையில், மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் கொரோனா வைரஸ் வயதானவர்கள், எதிர்ப்புசக்தி குறைந்தவர்களைத்தான் பெரும்பாலும் பாதிக்கும் என்று கூறப்படுவதால் வயதானவர்கள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர். இந்நிலையில், 'குழந்தைகள்..?' என்ற கேள்வி உலகம் முழுக்க இருக்கிறது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 'அனைத்து வயதுக் குழந்தைகளையும் கொரோனா வைரஸ் பாதிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால், அதன் சதவிகிதம் மிகக் குறைவே. குழந்தைகளுக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை. ஆனால், குழந்தைகள் மூலம் வைரஸ் மற்றவர்களுக்குப் பரவும்' என்றிருக்கிறார்கள்.

corona
corona

குறிப்பிட்ட ஆராய்ச்சியில், சீனாவில் கோவிட் - 19 மூலம் பாதிக்கப்பட்ட 2,143 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் ஒரு வயதுக் குழந்தை முதல் 18 வயது இளைஞர்வரை அடக்கம். இந்த ஆராய்ச்சியில் பங்குபெற்ற குழந்தைகளின் சராசரி வயது 7.

இந்தக் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அறிகுறிகளை மிதம், இடைப்பட்ட நிலை, தீவிரம், அதிதீவிரம் என்று வகைப்படுத்தினர் ஆராய்ச்சியாளர்கள். அந்த ஆய்வு, 'அனைத்து வயதுக் குழந்தைகளையும் கோவிட் - 19 தாக்கவல்லது. பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. எனினும், கோவிட் -19 மூலம் பெரியவர்களுக்கு வரும் பாதிப்பைவிட குழந்தைகளுக்கு வரும் பாதிப்பு குறைவாகவே உள்ளது.

குழந்தைகள்
குழந்தைகள்

குழந்தைகளில் 5.9 % பேரே தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பெரியவர்களில் 18.5 % பேர் தீவிர பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். கொரோனா இரு பால் குழந்தைகளையும் பாதிப்பதாகத் தெரிந்தாலும், ஆண் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும், குழந்தைகளின் வயது குறையக் குறைய நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது' என்று முடிவுகளைத் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் அதிகம் தாக்கப்படாததற்கான காரணங்களாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவது, அவர்கள் வீட்டில் வைக்கப்பட்டு பெற்றோரால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறார்கள்; அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பிலிருந்து விடுபடுகிறார்கள்' என்பது.

மருத்துவர் சோம சேகர்
மருத்துவர் சோம சேகர்

கோவிட் -19 நோய்க்காரணியான SARS-COV_2 வைரஸ் நம் செல்களுக்குள் நுழைய Angiotension converting Enzyme 2(ACE- 2) என்ற ரிசப்டார்கள் (ஏற்பிகள்) அவசியம். குழந்தைகளுக்கு இந்த ACE- 2 ரிசப்டார்கள் முழுமையாக முதிர்ச்சி அடையாத நிலையில் இருக்கும் என்பதால், குழந்தைகளுக்கு வைரஸ் தாக்கம் தீவிரமாவதில்லை. மேலும், குழந்தைகள் குளிர்காலத்தில் சளித் தொந்தரவு போன்ற மூச்சுப் பாதைப் பிரச்னைகளுக்கு அடிக்கடி ஆளாவதால், வைரஸை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகள் அவர்கள் ரத்தத்தில் ஏற்கெனவே அதிகமாக இருக்கும். அது அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. பொதுவாக, குழந்தைகளுக்கு எதிர்ப்பாற்றல் தன்மை வளர்ந்துகொண்டே இருக்கும். ஆக புது வைரஸ் வந்தால் அதை எதிர்த்துச் செயல்படும் வேகம் பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும். மேற்கூறிய காரணங்களால் குழந்தைகளுக்குக் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் சோம சேகர் கூறுகையில், "கொரோனா வைரஸ் அனைத்து வயதினரையும் தாக்கக்கூடியது. பச்சிளம் குழந்தைகளை அதிக கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருக்கும் என்பதால் நோயின் தாக்கம் குறைவாக இருக்கும். வளர்ந்த குழந்தைகள் குறைவாகத் தாக்கப்படக் காரணம், அவர்கள் வீட்டில் பத்திரமாகத் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதே.

பயிற்சியில் குழந்தைகள்
பயிற்சியில் குழந்தைகள்
Photo credit: RANGAPRASAD

குழந்தைகளுக்கு வெளியுலகில் நெருங்கிய தொடர்பு (intense contact) இல்லை என்பதே முக்கியக் காரணம். வெளியே சென்று வரும் பெற்றோர்களும் குழந்தைகளைக் கொஞ்சும் முன் கைகளை நன்கு கழுவி, பொறுப்புணர்வுடன் செயல்படுகின்றனர். வெளியுலகில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொண்டால் கொரோனா நம்மை அணுகாது’’ என்றார்.

``கொரோனாவால் வீட்டில் தனிமை... உருவாகும் மனஅழுத்தம்!"- எதிர்கொள்வது எப்படி? #FightCovid19
அடுத்த கட்டுரைக்கு