Published:Updated:

தாழ்வு மனப்பான்மை, ஏக்கம்; பதின்ம வயதுப் பெண்களின் மனநலனை எப்படியெல்லாம் பாதிக்கிறது இன்ஸ்டாகிராம்?

கடந்த மூன்று ஆண்டுகளாக ஃபேஸ்புக் தன் புகைப்பட பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராம் அதன் பயனர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராய்ந்தது. முடிவில், இன்ஸ்டாகிராம் இளம் வயதினருக்குத் தீங்கு விளைவிப்பதாக உள்ளது என்று கண்டறிந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இன்ஸ்டாகிராம் பயன்பாடு பதின்ம வயதுப் பெண்களின் மனநிலையை மிக மோசமாக, எதிர்மறையாகப் பாதிக்கிறது என ஃபேஸ்புக் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பல பெண்களை, பல காரணங்களால் மனநல ஆலோசனை பெற வேண்டிய நிலைக்கு இன்ஸ்டாகிராம் தள்ளியிருக்கிறது.

உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், உடல் கவர்ச்சிக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பதின்ம பருவப் பெண்கள் பலருக்கும் உடல் கவர்ச்சி, ஒரு வெறி போல தொற்றிக்கொள்வதால் தங்களைக் கவர்ச்சி அற்றவர்களாகக் கருதி, தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறார்கள்.

Instagram (Representational Image)
Instagram (Representational Image)
Image by USA-Reiseblogger from Pixabay

கடந்த மூன்று ஆண்டுகளாக ஃபேஸ்புக் தன் புகைப்பட பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராம் அதன் பயனர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராய்ந்தது. முடிவில், இன்ஸ்டாகிராம் இளம் வயதினருக்குத் தீங்கு விளைவிப்பதாக உள்ளது என்று கண்டறிந்துள்ளது.

12, 13 வயதிலேயே இன்ஸ்டாகிராமில் நுழையும் பெண்கள் ஒரு நாளின் பல மணி நேரத்தை அங்கேயே கழிக்கின்றனர். அதில் பெரும்பாலும், கவர்ச்சியான உடற்கட்டு மற்றும் செல்வாக்கான வாழ்க்கை முறை உடைய நபர்களைப் பற்றிப் பார்ப்பதால், தன்னிலை குறித்த ஏக்கம் அவர்களிடம் அவர்களையும் அறியாமல் விதைக்கப்படுகிறது. எனவே, பதின்ம வயதுச் சிறுமிகளின் பயன்பாட்டைப் பொறுத்தவரை, இன்ஸ்டாகிராம் ஆபத்தானதாக உள்ளது என இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

ஆனால், இந்த அறிக்கையை இதுவரை வெளியிடாமல் ஃபேஸ்புக் நிறுவனம் ரகசியம் காத்து வந்தது. இந்நிலையில்தான் The Wall Street Journal இதை அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்த ஆய்வில் 32% பதின்ம வயதுப் பெண்கள் தங்கள் உடல் குறித்து தாழ்வான அபிப்ராயம் கொள்ள இன்ஸ்டாகிராம் தூண்டுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களைக் கொண்டுள்ள பெண்களுடன் தங்களை ஒப்பிட்டு, தங்கள் மீதான சுய மதிப்பை பதின்ம வயதுப் பெண்கள் இழக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பதின்ம வயதினர் அதனால் தங்களுக்கு பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஏற்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

அதிக இளைஞர்களைத் தங்கள் பயனர்களாக உள்ளிழுப்பதன் மூலம், ஓர் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள் வரை கல்லா கட்டுகிறது இன்ஸ்டாகிராம். அதன் பயனர்களில் 40% பேர் 22 வயதுக்கும் குறைந்தவர்கள். ஒரு நாளில் அமெரிக்காவில் மட்டும் 22 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் லாக்-இன் செய்கின்றனர். ஃபேஸ்புக்கைவிட 50% அதிக நேரம் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தப்படுகிறது.

Instagram (Representational Images)
Instagram (Representational Images)
Image by Wokandapix from Pixabay
'தாலிபன்களுக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் தடை'- மார்க் அறிவித்தன் பின்னணி என்ன?!

ஃபேஸ்புக் நிறுவனம் அதன் பதின்ம வயதுப் பயனர்களின் பிரச்னையைத் தீர்க்க முடிவு செய்தாலும், அதன் ஆராய்ச்சி முடிவுகளை பொதுவெளியில் வெளியிட மறுக்கிறது. கல்வியாளர்களுக்கும் சட்டநிபுணர்களுக்கும்கூட அந்த ஆய்வறிக்கை அளிக்கப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசேரி, ``இன்ஸ்டாகிராம் இளைஞர்கள் வாழ்வை பெரிய அளவில் பாதிப்பதில்லை; இந்தக் குற்றச்சாட்டுகள் பரவலாகக் காணப்படுவதுமில்லை" என்று கூறியுள்ளார். ஆனால், தங்கள் உடல் மற்றும் சமூக ஒப்பீடு நடவடிக்கைகளில் எதிர்மறை எண்ணங்களை இளம் பெண்கள் பெற இன்ஸ்டாகிராம் காரணியாக உள்ளது. இன்டாகிராமில் எடிட் செய்யப்பட்டும், ஃபில்டர்களாலும் மிகைப்படுத்திக் காட்டப்படும் செலிப்ரிட்டி மற்றும் இன்ஃப்ளூயர்ஸர் பெண்களின் உடற்கட்டமைப்புடன், குறிப்பாக மார்புடன் பதின்ம பருவப் பெண்கள் தங்களை ஒப்பிட்டு, தங்கள் உடலமைப்பு மோசமாக உள்ளதாகக் கருதுவதுடன், தங்கள் உடலையும் அவ்வாறு மாற்றிக்கொண்டு அதிக ஃபாலோயர்களைப் பெற முனைகின்றனர்.

Instagram
Instagram
Photo by Brett Jordan from Pexels
அதீத டயட் அக்கறையும் ஆபத்தில் முடியலாம்... எப்படி? - மனநல மருத்துவர் சொல்றார்... கேளுங்க!

உடல் மட்டும் அல்லாது, அவர்களின் வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு மனச்சோர்வு அடைகின்றனர். இன்ஸ்டாகிராமில் உள்ள பிரபலங்களின் வாழ்க்கை முறையைப் பார்த்து ஏக்கம் கொள்கின்றனர்.

தங்களின் படங்களும் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என ஃபில்டர்கள் உபயோகிப்பது, போட்டோஷாப் செய்த புகைப்படத்தைப் பதிவிடுவது எனப் பதின்ம வயதினரின் செயல்பாடுகள் மாறுவதால், அவர்கள் தங்களின் சுயத்தை வெறுக்கத் தொடங்குகின்றனர். இதனால் மனநலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்கும் நபர்களின் உடற்கட்டு போன்ற உடலமைப்பைப் பெற உணவைத் தவிர்ப்பது, ஆரோக்கியமற்ற, அவசியமற்ற டயட் மேற்கொள்வது எனத் தங்கள் பிள்ளைகள் அவர்களை வருத்திக்கொள்வதாகப் பெற்றோர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இன்ஸ்டாகிராம் போன்ற மற்ற சமூக வலைதளங்களும் ஒப்பீடு மனோபாவத்தை வளர்க்கின்றன. ஆனால், ஏன் இன்ஸ்டாகிராம் மீது மட்டும் முதன்மையாகக் குற்றம் சாட்டப்படுகிறது? காரணம், டிக்டாக் போன்ற வீடியோ செயலிகளும், ஸ்நாப் சேட் போன்ற போட்டோ செயலிகளும் திறமையையும், முகத்தையும் முதன்மைப்படுத்துவதாக இருக்கின்றன. ஆனால் இன்ஸ்டாகிராமில், இவற்றுடன் உடலுக்கு அதிக முக்கியத்துவமும், ஆடம்பர வாழ்க்கை முறையும் முன்னிலைப்படுத்தப்படுவதால் இன்ஸ்டாகிராம் தீங்கு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இன்ஸ்டாகிராமில், பொதுவாக வாழ்க்கையின் மகிழ்வான தருணங்கள் மட்டுமே பதிவிடப்படுகின்றன. மேலும், அதன் எக்ஸ்ப்ளோர் பக்கம் பயனர்களின் மனநலனுக்குத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை எளிதாகக் கடத்துகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

Girl child
Girl child
Pixabay
மேடம் ஷகிலா - 35: பேஸ்புக் ஸ்டோரி, இன்ஸ்டாகிராம் ரீல் கன்டென்ட்டுகளாகிய திருமணங்கள்… காரணம் பெண்களா?

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பதின்ம வயதினர் அதைத் தவிர்க்க எண்ணினாலும், தங்களின் இருப்பைப் பதிவு செய்வதற்காகவாவது அதை உபயோகிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஒரு செயலிக்கு தாங்கள் அடிமையாகி இருக்கிறோம் என்பதை உணர்ந்தாலும் அதிலிருந்து மீண்டு வர இயலாதவர்களாக உள்ளனர். நாள் முழுவதும் மொபைலில் மூழ்கிக் கிடக்கும் சிறுவர்களின் ஸ்க்ரீன் டைமில் பெரும்பகுதியை இன்ஸ்டாகிராம் தின்றுவிடுகிறது. அதிலும் மற்றவர்களை, குறிப்பாக பிரபலங்களின் வாழ்க்கை முறையைப் பார்த்து ஏக்கமே அவர்களிடம் மிஞ்சுகிறது.

விரைவில் சிறுவர்களுக்கான இன்ஸ்டாகிராமை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிடத் திட்டமிட்டிருந்த நிலையில்தான், இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இனியேனும் இதுபோன்ற ஆய்வு முடிவுகளை மூடி மறைக்காமல், பயனர்களின் நலன் கருதி மார்க் ஸூக்கர்பெர்க் நேர்மையாக செயல்படவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு