Election bannerElection banner
Published:Updated:

இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் தட்டுப்பாடு... முதல் டோஸ் போட்டவர்கள் எவ்வளவு நாட்கள் காத்திருக்கலாம்?

COVID-19 vaccine
COVID-19 vaccine ( AP Photo/Anupam Nath )

இந்தியாவில் கொரோனா தொற்றுப்பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றுப்பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க, தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. மத்திய அரசு தடுப்பூசி விநியோகத்தை சரியாக செய்யாததால், பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. தடுப்பூசி தட்டுப்பாட்டால் முதல் டோஸ்கூட எடுத்துக்கொள்ள முடியாதவர்களும் இருக்கின்றனர். முதல் டோஸ் எடுத்துக்கொண்ட பலர் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளமுடியாத நிலையில் இருக்கின்றனர்.

இதனால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், நம் நாட்டின் தேவை போகத்தான் மற்ற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகள் தற்போது முன்வைக்கப்படுகின்றன. இது குறித்த சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறார் தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்.

Corona Vaccine
Corona Vaccine
Ted S. Warren via AP

``பல இடங்களில் கொரோனா இரண்டாவது டோஸுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசிக்காகக் காத்திருக்கின்றனர். இப்படி எத்தனை நாள்கள் காத்திருக்கலாம், எத்தனை நாள்கள் வரை தள்ளிப்போடலாம்?"

``முதல் தவணை கோவிட் தடுப்பூசி எடுத்தவர்கள் மூன்று மாத காலம் வரை இரண்டாம் தவணை கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் காலத்தைத்  தள்ளிப்போடலாம். அதைப்போல, முதல் தவணை கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியை நான்கு வாரங்கள் கழித்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஆறு வாரங்கள் வரை பொறுத்திருந்து எடுத்துக்கொண்டாலும் நல்லதே. அதே வேளை நான்கைந்து மாதங்கள் வரை பொறுத்திருந்து போட்டுக்கொண்டால் தடுப்பூசியின் செயல்திறன் உடலில் இருக்காது. கோவிஷீல்டு தடுப்பூசியைப் பொறுத்தவரை முதல் தவணைக்கும் இரண்டாவது தவணைக்கும் இடையே 6 முதல் 8 வார இடைவெளி இருக்கலாம். இரண்டாவது கொரோனா அலையில் அதிகமானோர் பாதிக்கப்படுவதால் முன்பைவிட தடுப்பூசிகள் எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இதுதான் திடீர் தட்டுப்பாட்டின் காரணம். மற்ற பல நாடுகளில் இருக்கும் அளவுக்கு மோசமான தடுப்பூசி தட்டுப்பாட்டை இந்தியா சந்தித்து வரவில்லை.

``கொரோனா பாசிட்டிவ் வந்து குணமாகியிருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்குமே. அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா?"

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்
தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

``கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுக் குணமடைபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது உண்மையே. அதனால் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற பொதுவான கருத்து இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதால் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது என்பதும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதும் தவறான கருத்து. மீண்டும் தொற்று ஏற்பட்டால் அதிலிருந்து  மீண்டுவரத் தடுப்பூசி எடுத்துக்கொள்வதே சிறப்பான தடுப்பாகச் செயல்படுகிறது.

கோவிட் பாசிட்டிவ் வந்து குணமானவர்கள் சிகிச்சை முடிந்து ஒரு மாதத்துக்குப் பின் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்திருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி முன்பைவிட இவர்களுக்கு அதிகரித்திருக்கும். ஆறு மாதங்கள் வரை தாமதித்தும் கூட இவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்."

``முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் கோவிஷீல்டு / கோவாக்சின் இரண்டில் எதை எடுத்துக்கொண்டோம் என மறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? ஒருவேளை வேறு தடுப்பூசி போட்டுவிட்டால் என்னாகும்?"

``முதல் தவணையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கோவிஷீல்டு எடுத்துக்கொண்டாரா அல்லது கோவாக்சின் எடுத்துக்கொண்டாரா என்பதன் தரவுகள் சரியான முறையில் சேமிக்கப்பட்டு வருகின்றன. முதல் தவணையாக எந்தத் தடுப்பூசி எடுத்துக்கொண்டோம் எனும் குழப்பம் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு இருந்தாலும் முந்தைய தரவுகளை ஆராய்ந்த பிறகே மக்களுக்குத் தடுப்பூசி அளித்து வருகின்றனர் மருத்துவர்கள்.

Corona Vaccine | கொரோனா தடுப்பூசி
Corona Vaccine | கொரோனா தடுப்பூசி
via AP

அதனால் இரண்டாம் தவணை தடுப்பூசியை மாற்றிப்போட நேருமோ எனப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. மாற்றிப்போட்டால் என்ன நேரிடும் என்பதற்கான சான்றுகள் இதுவரை இல்லை" என்கிறார் தொற்று நோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு