கொரோனா ஏற்பாடுகள்... இந்தியாவில் இந்த 5 மாநிலங்களின் நிலை என்ன? #Corona

மாநில அரசுகள் தீவிரமாகப் பல நடவடிக்கைகளை எடுப்பதுடன் மக்களுக்கான போர்க்கால நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை அறிவிக்கின்றன. இந்தக் கட்டுரை இந்தியாவில் சில மாநிலங்கள் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்பதை விளக்குகிறது.
Covid -19 கொரோனா வைரஸ் ஒரு மாதத்திற்கும் மேலாக உலகையே ஆட்டுவித்தாலும் இந்தியா இப்போதுதான் நேரடியாக முழு வீச்சில் அதன் பாதிப்பை உணரத் தொடங்கியிருக்கின்றது. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில்தான், நாட்டு மக்களிடம் உரையாற்றி கொரோனா அச்சுறுத்தல் பற்றியும், மக்கள் எவ்வாறு தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விளக்கமளித்தார். மார்ச் 22 அன்று மக்கள் ஊரடங்கை அறிவித்து, வரும் காலங்களில் இந்தியா முழுவதும் சட்டப்படியான 144 ஊரடங்கு உத்தரவு வர வாய்ப்பிருப்பதையும் சுட்டிக் காட்டினார். பணிக்கு வராத மக்களுக்கு முதலாளிகள் சம்பளப் பிடித்தம் செய்ய வேண்டாம் என்ற வேண்டுகோள் வைத்து, அரசு சார்பாக நிதி மேலாண்மைக்குச் சிறப்பு கமிட்டி அமைக்கப்படும் என்ற அறிவிப்போடு அவரது உரை முடிவடைந்தது.

இவை தவிர மத்திய அரசு, மார்ச் 31 வரை வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூடுதலாக மாநில அரசுகளும் தீவிரமாகப் பல நடவடிக்கைகளை எடுப்பதுடன், மக்களுக்கான போர்க்கால நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை அறிவிக்கின்றன. இந்தக் கட்டுரை இந்தியாவில் எந்தெந்த மாநிலங்கள் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்பதை விளக்குகிறது.
இந்தியாவில் தற்போதுவரை 415 பேர் covid -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதுவரை இதனால் டெல்லி, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் மற்றும் மகாராஷ்டிராவில் இருவர் என 6 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். மேலும் நேற்றுவரை மாநிலம் வாரியாக covid -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பட்டியல் பின்வருமாறு:

இந்நிலையில், 130 கோடி பேர் உள்ள இந்திய நாட்டில் நோய் கண்டறிதல், சிகிச்சை இவற்றைக் காட்டிலும், தற்காத்துக் கொள்வது மட்டுமே சரியான தீர்வாக அமைய முடியும். பெரும்பாலான மாநிலங்கள் அதற்காகத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.
மகாராஷ்டிரா
மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலம். முதல்வர் உத்தவ் தாக்கரே, மக்கள் நடமாடுவதைத் தவிர்க்குமாறு தொலைக்காட்சி நேரலையில் பேசியிருக்கிறார். மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் மருந்துக் கடைகள், மளிகைக் கடைகள், பால் கடைகள், வங்கிகள் தவிர்த்து மற்ற அனைத்துக் கடைகளும், தனியார் அலுவலகங்களும் 31 மார்ச் இரவு முதல் முழுவதுமாக அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவர்கள், சுகாதார அலுவலர்களைப் பாதிக்கும் என்ற காரணத்தினால் அங்கு ரயில் மற்றும் பஸ் சேவைகள் நிறுத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அலுவலகங்களில் வெறும் 25 % பேர் மட்டுமே வேலை செய்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. தலைநகர் மும்பையில் மக்களுக்கு நேரடியாக உணவு விநியோகிக்கும் டப்பாவாலாக்கள், மார்ச் 31 வரை இயங்குவதில்லை என ஒருமித்த முடிவை எடுத்துள்ளனர். அரசு அலுவலகங்களில் AC பயன்படுத்தவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, கொரோனா உறுதிசெய்யப்படும் நோயாளிகளுக்கு, கைகளில் ரப்பர் ஸ்டாம்ப் அடித்து அனுப்பப்படும் வழக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

கேரளா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது கேரளாவில்தான். கேரளாவில் சுமார் 50 சதவிகிதம் பேர் இந்த நோய்த்தோற்றால் பாதிப்படையலாம் என்று விளக்கும் ஒரு ஆய்வறிக்கையின் அடிப்படையில், கேரளா போர்க்கால அடிப்படையில், covid -19 நோய்த் தொற்றைச் சமாளிக்கத் தயாராகி வருகிறது. முதல்வர் பினராயி விஜயன் இதற்கென பிரத்யேகமாக ஒரு நிபுணர் குழுவை நியமித்து உள்ளார்.
கேரளாவில் உள்ள கல்வி நிலையங்கள் அவசரக் கால மருத்துவ மையங்களாக மாற்றப்பட உள்ளன. `contact tracing' மூலமாக நோய்த் தொற்று இருக்கலாம் என அடையாளப்படுத்தப்பட்ட ஏறத்தாழ 25,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு (28 நாள்கள்) தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட நபர் எங்கெல்லாம் சென்றார் என்ற பயணப்பாதை தயார் செய்யப்பட்டு, அங்கெல்லாம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களின் மனநலன் காக்க, அவர்களுக்கு உதவும் ஹெல்ப்லைன் நம்பர்கள் பகிரப்பட்டுள்ளன. மக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தினம் மாலை முதல்வர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, கள நிலவரத்தை மக்களுடன் பகிர்கிறார்.

மேலும், கொரோனா தாக்கத்திலிருந்து மீள, மருத்துவக் காப்பீடு, கடன் உதவி, பென்ஷன் திட்டம், இலவச உணவு தானியங்கள் விழுங்குவது, குறைந்த விலை உணவகங்கள், வரி விலக்கு போன்றவற்றிற்காக ரூபாய் 20,000 கோடியை அறிவித்துள்ளது கேரளா அரசு. தண்ணீர், மின்சாரக் கட்டணங்கள் கட்டுவதற்கு ஒரு மாத காலம் நீட்டிப்பு வழங்கியுள்ளது.
மேலும், சுமார் 40 சதவிகிதம் இணையச் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. சானிடைசர் தயாரிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட்ட மதிய உணவு வீட்டிலேயே டெலிவரி செய்யப்படுகிறது. சிறைச்சாலைகளில் மாஸ்க் தயாரிக்கப்படுகின்றன. உதவிக்குத் தன்னார்வலர்கள் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இப்படி கேரளா அதிகம் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், சிறப்பாகவே அதைச் சமாளிக்கத் தயாராகி உள்ளது.
உத்தரப்பிரதேசம்
நோய்த்தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட நோயாளிகள், கண்காணிப்பில் அல்லது தனிமைப்படுத்தப்பட்டதிலிருந்து தப்பிச்செல்வது நிகழலாம் என்பதால் தற்போது உ.பி அரசு அவர்களுக்கு கைகளில் ரப்பர் ஸ்டாம்ப் வைக்கும் பழக்கத்தைத் தொடங்கியுள்ளது. மதுபானக்கடைகள் மூடப்படவேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்கள் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களுக்குச் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. தேர்வு நடக்காத பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் சினிமா அரங்குகள், மால் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் கிராமங்கள் தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறைகளை விளக்க விழிப்புணர்வு பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 800 மருத்துவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்
மார்ச் மாதம் 31 வரை, எந்தக் காரணங்களுக்காகவும் மக்கள் பொது இடங்களில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அசோக் கெலோட், மாவட்ட நீதிபதிகள் உட்பட உரிய அதிகாரிகளுக்கு 144 தடை உத்தரவைப் பிறப்பிக்க அதிகாரம் வழங்கியுள்ள நிலையில், அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வெளிநாட்டுப் பயணம் செய்த அனைவரும் வீடுகளில் தனிமைபடுத்தப் பட்டு 14 நாள்கள் கண்காணிப்பில் உள்ளனர். பாதிப்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபரின் contact tracing செய்யப்படுகின்றது. அவர்களின் road map எனப்படும் பயணப்பாதை கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமன்றி, கொரோனா நோய்த் தொற்று இருக்கிறதா எனக் கண்டறியும் புதிய ஆய்வகங்களை முக்கிய நகரங்களில் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒடிஷா
மேற்கண்ட மற்ற மாநிலங்களைப் போல அல்லாமல், ஒடிஷா மிகக் குறைவான அளவே covid 19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒடிஷா மாநில அரசு கையாண்ட ஒரு யுக்தியே முக்கியக் காரணம். நோய்த்தொற்று உள்ளவர்களைக் கண்டறிவதுதான் மற்ற மாநிலங்களின் பெரிய சவாலாக இருந்தது. அப்படிக் கண்காணிப்பில் இருப்பவர்கள் தப்பிச் செல்வது, வெளிநாட்டிற்குப் பயணம் செய்ததை மறைத்தது ஆகியவை இந்தியாவில் பல மாநிலங்களில் covid 19 வைரஸ் பரவ முக்கியக் காரணமாக இருந்தது.

இதைச் சமாளிக்க ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் வித்தியாசமான ஓர் அறிவிப்பை வெளியிட்டார். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துவிட்டு, வேறு மாநிலங்கள் வழியாக ஒடிஷா வருகிறவர்கள் தாமாக முன்வந்து அரசாங்கத்திடம் தங்கள் விவரங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும், அப்படிப் பதிவு செய்துகொண்டால் அவர்கள் தனிமைபடுத்தப்பட்டுக் கண்காணிப்பில் வைக்கப்படுவதோடு, அவர்களுக்கு 15,000 ரூபாய் சன்மானமும் வழங்கப்படும் என்றும், ஒருவேளை அவர்கள் பயணம் செய்வதை மறைத்தால் அரசு கண்டறிந்து அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரத்தில் சுமார் 100 பேர் தாமாக முன்வந்து பதிவு செய்துள்ளனர். பாதிப்பு இருக்கக் கூடியவர்கள் இப்படி தாமாகவே முன்வந்து பதிவு செய்வது தொடர, மிக எளிதாக நோய் பரவாமல் தடுத்து வருகிறது ஒடிஷா.
டெல்லி
இந்தியத் தலைநகரில் பெரும்பாலான செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்களைச் சந்தித்து முன்னேற்பாடுகளைச் செய்துள்ளார். அவசிய அவசர சேவைகள் தவிர மற்ற அனைத்து அரசு அலுவல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து மால்களும் மூடப்பட்டுள்ளன, உணவுத்தேவைக்கான கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அனைத்துத் தனியார் நிறுவனங்களும் வீட்டிலிருந்து வேலையைத் தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பொதுத்தேர்வுகள் யாவும் மார்ச் 31-க்குப் பிறகு தள்ளிவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்குப்பின், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளைக்கூட, அம்மாநில ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே செய்யலாம் என்றும் டெல்லி அரசு கூறியுள்ளது. பொது இடங்கள் அனைத்துமே, சுகாதாரப் பணியாளர்கள் மூலமாக, கிருமிநாசினி கொண்டு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்பட்டுவருகின்றன.
மேலும், மேற்கு வங்கத்தில் ஆறு மாதங்களுக்கு மக்களுக்கு ரேஷன் பொருள்கள் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவைமட்டுமன்றி இந்தியா முழுக்க எல்லா மாநிலங்களும், மக்களின் நடமாட்டத்தை வெகுவாகக் குறைந்துள்ளன. இந்தியா பயப்படத் தேவையில்லை என்று சொல்லும் அதே நேரத்தில் அஜாக்கிரதையாக இருப்பதும் மிகவும் தவறு; அரசுகள் இதை உணர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. குடிமக்கள் பொறுப்புடன் அதற்கு ஒத்துழைப்பு தரவேண்டியது அவசியம். அப்படிச் செய்தால் மட்டுமே நமக்கு, `இதுவும் கடந்து போகும்!'