Published:Updated:

கொரோனா நாள்கள்... வீட்டுக்குள் யாரை, எவற்றை அனுமதிக்கலாம்? - மருத்துவர் அறிவுரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
யாருக்கு வீட்டுக்குள் அனுமதி
யாருக்கு வீட்டுக்குள் அனுமதி

``யாரையுமே அனுமதிக்கக் கூடாது என்பதுதான் உண்மை. வேறு வழி இல்லை என்கிற பட்சத்தில் யாரை, எவற்றை, எப்படி அனுமதிக்கலாம் என்பது பற்றி சிலவற்றை சொல்கிறேன்.

கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகம் இருப்பதால், மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு வருபவர்கள் மற்றும் வீட்டுப் பணிகளைச் செய்யும் பணியாளர்கள், நண்பர்கள் என நம் வீட்டுக்குள் யாரை அனுமதிக்கலாம், யாரை அனுமதிக்கக் கூடாது என்பது பற்றி `தெனாலி' கமல்ஹாசன் அளவுக்கு இங்கு பலருக்கும் அச்சம் நிலவி வருகிறது.

home
home

இந்த நாள்களில், நம் வீட்டுக்குள் யாரை அனுமதிக்கலாம், யாரை அனுமதிக்கக் கூடாது என்பது குறித்து, பொது மருத்துவர் சுந்தரராமனிடம் கேட்டோம்.

``யாரையுமே அனுமதிக்கக் கூடாது என்பதுதான் உண்மை. வேறு வழி இல்லை என்கிற பட்சத்தில் யாரை, எவற்றை, எப்படி அனுமதிக்கலாம் என்பது பற்றி சிலவற்றை சொல்கிறேன்.

கொரோனா வைரஸ் எங்கு, எப்படி இருக்கிறது என்பதை நாம் அறிய முடியாது. மைக்ரோஸ்கோப் உதவியாலும் அதைப் பார்க்க முடியாது. எலெக்ட்ரோ மைக்ராஸ்கோப்பின் உதவியால் மட்டும்தான் பார்க்க முடியும். அப்படி இருக்கும்போது அது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதால்தான் இப்படித் தனித்திருக்கக் கூடிய சூழ்நிலையை நடைமுறைப்படுத்தி உள்ளார்கள்.

Dr.Sundhararaman
Dr.Sundhararaman

யாருக்கு இந்த நோய் இருக்கும், யாருக்கு இந்த நோய் இருக்காது என்பதை நம்மால் யூகிக்க முடியாது. அதனால்தான் தனித்து இருக்கும்படி கூறுகிறார்கள்.

கொரோனா வைரஸ் காற்றின் மூலமாகப் பரவாது என்றாலும், இடங்கள், பொருள்கள், துணிகள் எனப் பரப்புகள் மூலமாகப் பரவி வருகிறது. ஸ்டீல், அட்டைப்பெட்டி, தாமிரம், துணி என்று இவற்றிலெல்லாம் பல மணி நேரங்கள் முதல் நாள்கள்வரை கோவிட்-19 வாழும். ஒருவேளை கொரோனா வைரஸ் இருக்கும் அப்படி ஒரு பரப்பில் நாம் கைவைத்துவிட்டு, கையை மூக்கு, வாய், கண் என்று கொண்டுசென்றால், தொற்று நம்மைப் பற்றிக்கொள்ளும். அதனால்தான் அடிக்கடி கைகழுவ அறிவுறுத்தப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரும்பு கேட், மாடிப்படி, கைப்பிடி, காலிங்பெல் ஸ்விட்ச் போன்றவற்றைத் தொட்டால்கூட நம் கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். எவர்சில்வர் பாத்திரங்களின் கைப்பிடிகளில் இரண்டு நாள்கள்கூட இருக்கும் என்று கூறப்படுகிறது.

corona
corona

வீட்டுக்கு யாராவது வருகிறார்கள் என்றால், அவர்கள் வெளியே கோவிட் - 19 இருந்த ஒரு பொருளைத் தொட்டுவிட்டு, அதே கைகளால் நம் கதவுக் கைப்பிடியைத் தொட்டுவிட்டு வீட்டுக்குள் வந்தால், அதே கைப்பிடியைப் பிறகு நாம் தொட நேர்ந்தால்... நம்மையும் தொற்றிக்கொள்ளும் கோவிட் - 19. அதனால்தான் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள் என்று கூறுகிறார்கள். நீங்களும் யார் வீட்டுக்கும் போகாதீர்கள். உங்கள் வீட்டுக்கும் யாரையும் அழைக்காதீர்கள் என்று சொல்வதற்கான காரணம் அதுதான்.

வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் வந்தால், வீட்டின் வெளிப்புறம் இருக்கும் பைப்பில் கை, கால்களை சோப்பு கொண்டு நன்றாகக் கழுவிய பின் வீட்டுக்குள் வர அறிவுறுத்துங்கள். கூடுமானவரை காலிங் பெல் ஸ்விட்ச், கதவின் கைப்பிடிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

வேலை செய்யும் பணியாளர் வீட்டுக்குள் வந்ததும் மீண்டும் சானிட்டைஸர் கொடுத்து, கைகளைச் சுத்தம் செய்யச்சொல்லுங்கள். வீடு சுத்தம் செய்வதற்கும், சமைப்பதற்கும், துணிகளைத் துவைப்பதற்கும் மூன்று பணியாளர்களை வைத்திருப்பவர்கள், மூவரையுமே இதைக் கடைப்பிடிக்க வையுங்கள்.

பால் பாக்கெட் கொண்டு வருபவர், பால் பாக்கெட்டை பைகளில் போட்டுவிட்டுச் சென்றாலும், நம் கைகளில் கொடுத்தாலும், அந்தப் பால் பாக்கெட்டுகளை நேராக எடுத்துச் சென்று குழாயில் கழுவிவிடுங்கள். பிறகு கையையும் சுத்தமாகக் கழுவிவிட்டு, பால் பாக்கெட்டை எடுத்துப் பயன்படுத்தவும்.

home
home

கேஸ் சிலிண்டர் (சமையல் எரிவாயு) கொண்டு வருபவரை, வீட்டுக்கு வெளியே அவர் கைகளைக் கழுவ வைக்கவும். பின்னர் சிலிண்டரில் கைகள் பற்றித் தூக்கும் வளையத்தையும் தண்ணீரால் சுத்தம் செய்யவும். பின்னர் அந்த நபரை சிலிண்டரை வீட்டுக்குள் எடுத்துவரச் சொல்லலாம். சிலிண்டரை நீங்களே வீட்டுக்குள் எடுத்துச் சென்றால், நீங்களும் மேற்கூறியவற்றைப் பின்பற்றவும்.

கார்ட் போர்டு அட்டையில் பேக் செய்யப்பட்டுவரும் ஆன்லைன் பொருள்களைப் பிரித்தெடுத்த பின்னர், கைகளை நன்கு கழுவிவிடவும். கூடுமானவரை, இருக்கும் பொருள்களை வைத்தே இந்த நாள்களைக் கடப்பது நல்லது.

சுயசுத்தம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். நம்மையும் நாம் இருக்கும் இடத்தையும் மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Social Distence
Social Distence

காய்கறிகள், பழங்கள் வாங்கிய கையோடு ஒருமுறை அவற்றைக் கழுவிவிட்டு வைக்கவும். ஃபிரிட்ஜ், உணவு ஷெல்ஃப்களில் பொருள்களை வைக்கும் முன்னர், ஒருமுறை கைகழுவிவிடவும்.

லாக்டவுன் நாள்களில் வீட்டை விட்டு வெளியேறுவது குற்றம் என்று பார்க்கப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் நீங்கள் யார் வீட்டுக்காவது செல்ல நேர்ந்தாலோ, உங்கள் வீட்டுக்கு யாரும் வந்தாலோ, செருப்பை வெளியே விடுவதும், கைகால்களைச் சுத்தம் செய்த பின்னரே உள்ளே வருவதும் முக்கியம். உங்களின் வீட்டுக்கு வருகிற எவருக்கும் வெளிப்படைத்தன்மையும் உண்மைத் தன்மையும் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

Hospital
Hospital

இந்த இரண்டும் உள்ளவர்களை மட்டுமே நீங்கள் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் போன்றவை உங்களுக்கு இருந்தால், எந்தச் சூழ்நிலையிலும் எங்கும் செல்லாதீர்கள். அறிகுறிகள் தீவிரமானால், மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் செல்லுங்கள். இந்த அறிகுறிகள் இருப்பவர்களை உங்கள் வீட்டுக்குள் அனுமதிக்கவும் வேண்டாம். `குழந்தைகள், பெரியவர்கள் இருக்கும் வீடு...' என்று தயங்காமல் அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். புரிந்துகொள்வார்கள்'' என்றார் டாக்டர் சுந்தரராமன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு