Published:Updated:

இறுதிச்சடங்கு, சவக்குழி, கிருமிநாசினி... கொரோனாவால் இறந்தவரின் சடலத்தைக் கையாள்வது எப்படி?

death
death ( Representational image )

முன்னெச்சரிக்கைக்காக, இறந்தவர்களைக் குளிப்பாட்டவோ, தொடவோ, கட்டிப்பிடித்து அழவோ கூடாதென அறிவுறுத்தப்படுகிறது. மற்றபடி மதச்சடங்குகளான புனிதத் தண்ணீர் தெளிப்பது, பூஜைகள் மேற்கொள்வது போன்றவற்றை ஒரு மீட்டர் தொலைவிலிருந்து செய்யலாம்.

கொரோனாவுக்கு எதிரான போரில்... நேரம் மறந்து, குடும்பம், உறவுகளை மறந்து, தன்னையே மறந்து 24 மணி நேரமும் களத்தில் நிற்கிறார்கள் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும். அவர்களும் மனிதர்கள்தானே... அவர்களுக்கும் நோய் தாக்கும்தானே... அதீத கவனத்துடன் இருந்தாலும் அதையும் மீறி மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படுகிறது.

Corona safety measures
Corona safety measures

சிலர் உயிரிழக்கிறார்கள். கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான சர்ச்சைகளை, கடந்த சில நாள்களாகப் பார்த்துவருகிறோம். மருத்துவர்களுக்கு மட்டுமன்றி, கொரோனா தொற்றால் உயிரிழக்கும் எல்லோருக்கும் இதே நிலைதான். இறந்த உடல்களின்மூலம் கொரோனா பரவாது என்று மருத்துவர்கள் எத்தனை முறை சொன்னாலும், மக்கள் கேட்கத் தயாராக இல்லை. இது தொடர்பாக, மக்களின் அச்சத்துக்குக் காரணமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார், தொற்று நோய் மருத்துவர் சுரேஷ்குமார்.

பயங்கரவாதிகளுக்கு `கொரோனா'... பாகிஸ்தானின் சதித் திட்டம்! -ஜம்மு-காஷ்மீர் டிஜிபி அதிர்ச்சி

*இறந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?

மூச்சுப்பாதையைப் பாதிக்கும் எந்த வைரஸும் இறந்தவர்கள் மூலம் பரவாது. கொரோனா, இன்ஃப்ளூயென்ஸா வைரஸும் இதிலடங்கும். ஒரு மனிதன் இறந்த பின்பு, இருமவோ, தும்மவோ போவதில்லை. அதனால் இறந்தவர்கள் மூலம் கொரோனா பரவும் என்ற பயத்தை மக்கள் கைவிட வேண்டும்.

தொற்று நோய் மருத்துவர் சுரேஷ்குமார்.
தொற்று நோய் மருத்துவர் சுரேஷ்குமார்.

* இறந்தவரின் உடல் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது?

இறந்தவர்களின் உடம்பில் இருந்து எந்தக் கசிவும் வெளியேறக் கூடாது என்பதால், மூக்கு மற்றும் வாய்ப் பகுதிகள் பஞ்சால் மூடப்படுகின்றன. பின்பு, உடலைச் சுத்தப்படுத்த 10 சதவிகிதம் ஹைப்போ குளோரைடு திரவத்துடன் 70 சதவிகிதம் ஆல்கஹால் கொண்ட சானிடைஸர் திரவம் உடல்மீது தெளிக்கப்படும். அதன் பின்னர் துணியால் மூடப்பட்டு, மீண்டும் கிருமிநாசினி தெளித்த பின்பு, நெகிழிப் பையால் மூடப்பட்டு, ஜிப் போட்ட உறைக்குள் வைக்கப்படுகிறது.

*இறந்தவர்களுக்கு மதச்சடங்குகள் செய்யலாமா?

முன்னெச்சரிக்கைக்காக, இறந்தவர்களைக் குளிப்பாட்டவோ தொடவோ, கட்டிப்பிடித்து அழவோ கூடாதென அறிவுறுத்தப்படுகிறது. மற்றபடி மதச்சடங்குகளான புனிதத் தண்ணீர் தெளிப்பது, பூஜைகள் மேற்கொள்வது போன்றவற்றை ஒரு மீட்டர் தொலைவிலிருந்து செய்யலாம்.

Death
Death
Representational image

*இறந்தவரின் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்கலாமா?

தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் உறவினர்களுக்கு, அறிகுறிகள் எதுவும் இல்லை என்றால், இறுதிச்சடங்கில் சமூக இடைவெளியைப் பின்பற்றி பங்குபெறலாம். இறந்தவரின் முகத்தைக் காண அனுமதிக்கலாம்.

* இறந்தவர்களைப் புதைக்கும் குழியை ஆழமாகத் தோண்ட வேண்டுமா?

அப்படி இல்லை. சிலர், 12 அடிக்கு குழி தோண்ட வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், உலக சுகாதார நிறுவனம் அப்படிக் கூறவில்லை. அதனால் சாதாரணமாகத் தோண்டும் அளவே போதுமானது.

Corona Virus
Corona Virus

* எவ்வளவு நேரத்திற்குள் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும்?

பதப்படுத்தப்படாத உடல்கள் 12 மணி நேரத்திற்குள் புதைக்கப்பட வேண்டும். அதிகபட்சமாக 24 மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம்.

* இறந்தவரின் உடலைக் கையாள்பவர்கள், எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

கைகளுக்கு உறை, முகக்கவசம், முகத்தடுப்பு, ஏப்ரான் ஆகியன தேவை. முழுமையான தற்காப்பு உடையணிய ( PPE ) வேண்டும் என்று அவசியமில்லை.

Mask
Mask

* கொரோனாவால் இறத்தவர்களின் உடல் மூலம் நோய் பரவும் என பயப்படும் பொதுமக்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

கொரோனா வைரஸால் இறந்தவர்கள்மூலம் நோய் பரவாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இறந்தவர் யாராக இருந்தாலும், அவருக்கு உரிய மரியாதை செலுத்துவது அவசியம். அவருக்கு தொற்று ஏற்பட்டது அவரின் தவறு அல்ல. தொற்றுடன் உயிரோடு இருப்பவர்கள் மூலம் தொற்று ஏற்படுமோ என்று பயந்தால் அதில் நியாயம் இருக்கிறது. இறந்தவர்களை அவமரியாதை செய்வது அநியாயம். எனவே, கொரோனாவால் இறந்தவர்கள் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை

`கேங் மோதல்; ஒரே குழியில் புதைக்கப்பட்ட 3 பேர் ’ - 10 மாதங்களுக்குப் பிறகு சிக்கிய கொள்ளையர்கள்

* முன்னோர்களின் காலத்தில் கொள்ளைநோய்களால் மக்கள் இறந்தபோது, சடலங்களை எப்படிக் கையாண்டார்கள்?

சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.
சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.

இதற்கு விளக்கமளிக்கிறார், சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.

"ஸ்பானிஷ் ஃப்ளூவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோது, அவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே குழியில் புதைக்கப்பட்டனர். இறந்தவரின் முகங்களைப் புகைப்படம் எடுத்து, அவற்றை உறவினர்களிடம் காட்டினர். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தபோது, அவர்களுக்கு அரிசி மாவு படுக்கை ஏற்படுத்தப்பட்டு, அதற்குமேல் பஞ்சு பரப்பப்பட்டு, அதற்குமேல் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டது. உடலின் மேல் வேப்பிலைகள் தூவப்பட்டு, அவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. அரிசி மாவும் பஞ்சும் உடலிலிருந்து வரும் கசிவுகளை இழுத்துக்கொள்வதால், மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு