Published:Updated:

தனிமையையே நாடும் மனம்...எப்போதும் எதிர்மறை எண்ணம்! - மீள்வது எப்படி? #NoMoreStress

பெ.மதலை ஆரோன்

மனஅழுத்தத்திலிருந்து வெளிவர உடல்நலம் மீதும் மனநலம் மீதும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். தினமும் சிறிது நேரம் மனதுக்கு அமைதியைத் தரும் உடற்பயிற்சிகளையும் யோகாவும் செய்ய வேண்டும்.

Stress
Stress

'வேலை செய்யும் இடத்திலும் குடும்பத்திலும் என்னைச் சுற்றி பலர் இருந்தாலும் நான் தனிமையை மட்டுமே விரும்புகிறேன். வீட்டிலும் இருண்ட அறையிலேயே இருக்க விரும்புகிறேன். எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே தோன்றுகின்றன.

NO MORE STRESS
NO MORE STRESS

'எனக்கென தனித்திறமை எதுவும் இல்லை' என்று பயப்படுகிறேன். இதிலிருந்து எப்படி மீண்டு வருவது?' என்ற கேள்வியை Mentalhealth@vikatan.com என்கிற மின்னஞ்சல் வாயிலாக சுகுமார் என்ற வாசகர் கேட்டிருந்தார்.

அவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் மனநல மருத்துவர் ஆர்.வசந்த்.

மனநல மருத்துவர் ஆர்.வசந்த்.
மனநல மருத்துவர் ஆர்.வசந்த்.

''இவை அனைத்துமே மனஅழுத்தத்துக்கான அறிகுறிகள். மனஅழுத்தம் ஏற்பட்டால், எப்போதும் சோர்வான நிலையில் இருப்பது, எந்த விஷயத்திலும் நாட்டம் இல்லாமல் இருப்பது,

மனஅழுத்தம்
மனஅழுத்தம்
heart.org

வேலையை சரியாகச் செய்யமுடியாமல் தவிப்பது, தனிமையை விரும்புவது, தைரியம், உற்சாகம் இல்லாமல் இருப்பது, பிடித்த விஷயங்கள் அனைத்தையும் நிராகரிப்பது, குறைவான அல்லது அதிகமான தூக்கத்தை விரும்புவது, பசியின்மை, அதீத பசி போன்ற அறிகுறிகள் தோன்றும்.

'என்னுடைய வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை. நான் வாழ்ந்து கொண்டிருப்பதே தவறு. இருண்டு போன எதிர்காலம் மட்டுமே உள்ளது' என்பது போன்ற எண்ணங்கள் மட்டுமே மனதில் தோன்றிக் கொண்டிருக்கும். மனஅழுத்தத்தின் காரணத்தினால்தான் தனக்கு தனித்திறமை எதுவும் இல்லை என்கிற பயமும் ஏற்படுகிறது.

மனதளவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நீண்ட நாள்களாக இருக்கிறதா சிறிது காலமாகத்தான் இருக்கிறதா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சில நாள்களாகப் பிரச்னை நீடித்தால் முதலில் சரியான மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைப் பெற வேண்டும். அப்போது தான் மனதளவில் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்ய வேண்டும் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள முடியும்.

மனஅழுத்தத்திலிருந்து வெளிவர உடல்நலம் மீதும் மனநலம் மீதும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். தினமும் சிறிது நேரம் மனதுக்கு அமைதியைத் தரும் உடற்பயிற்சிகளையும் யோகாவும் செய்ய வேண்டும். பிடித்த ஒரு பொழுதுபோக்கை கட்டமைத்துக்கொள்ள வேண்டும். தனிமையைப் போக்கப் பாடல்கள் கேட்பதைத் தவிர்ப்பது சிறந்தது. 'தனிமையாக இருக்கிறேன்' என்று ஒருநாள் முழுவதும் பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருந்தால் மனதளவில் மீண்டும் பாதிப்பு ஏற்படும். குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் பாடல்கள் கேட்கலாம். அதுவும் மனதை அமைதிப்படுத்தும் பாடல்களாக மட்டுமே இருக்க வேண்டும்" என்கிறார் வசந்த்.