Published:Updated:

போதை மாஃபியா: திவ்யாவுக்கு நேர்ந்தது உங்கள் வீட்டிலும் இப்போது நடந்து கொண்டிருக்கலாம்; உஷார்! - 1

இதுவா போதை என்பதில் தொடங்கி, இப்படியெல்லாமும் நடக்குமா என்பதுவரை போதையின் பாதையை, அதில் காத்திருக்கும் ஆபத்துகளை உங்களுக்கு இந்தத் தொடர் வெளிச்சம்போட்டுக் காட்டும். | நான் அடிமை இல்லை! - போதை மீட்பு விழிப்புணர்வுத் தொடர் - 1

சமூக விரோதிகளும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரும் மனநலப் பிரச்னைகள் உள்ளவர்களும்தாம் ஒரு காலத்தில் போதைப் பழக்கத்துக்கு ஆளாகிக்கொண்டிருந்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன் நமக்குத் தெரிந்தவர்களின் குடும்பங்களில் கேள்விப்படுகிற விஷயமாக மாறி, இன்று அது நம் வீடுவரை நெருங்கியிருக்கிறது. யாருக்குத் தெரியும்..? உங்கள் வீட்டிலேயேகூட போதைக்கு அடிமையான நபர் இருக்கக்கூடும்.

விமான நிலையங்களிலும் கன்டெய்னர் லாரிகளிலும் கடத்தப்பட்ட போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்படுகிற செய்திகளை அவ்வப்போது ஊடகங்களில் பார்க்கிறோம், அறிகிறோம். இனியும் அவற்றைப் பரபரப்பான, க்ரைம் செய்திகளாக நினைத்துக் கடந்துவிட முடியாது. நமக்குச் சம்பந்தமில்லாத விஷயமாக அலட்சியப்படுத்திவிட முடியாது. காரணம்... போதை எனும் அரக்கன், எந்த நிமிடமும் உங்கள் வீட்டுக்குள்ளும் நுழையலாம், உங்களை ஆக்கிரமித்து, ஆட்டிப்படைக்கலாம். அழிவை நோக்கி அழைத்துச் செல்லலாம். அதற்குள் விழித்துக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கவே இந்தத் தொடர்.

Narcotic Drugs
Narcotic Drugs
Photo by Colin Davis on Unsplash

இதுவா போதை என்பதில் தொடங்கி, இப்படியெல்லாமும் நடக்குமா என்பதுவரை போதையின் பாதையை, அதில் காத்திருக்கும் ஆபத்துகளை உங்களுக்கு இந்தத் தொடர் வெளிச்சம்போட்டுக் காட்டும்.

விலகி இருப்பதும் விழித்துக்கொள்வதும் இனி உங்கள் கைகளில்...

நான் அடிமை இல்லை! - 1

திவ்யாவின் மரணத்துக்கு வந்தவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினார்களோ இல்லையோ, அவள் அம்மாவைக் கரித்துக்கொட்டினார்கள். போன் பேசிக்கொண்டே ரயில்வே டிராக்கைக் கடந்ததால்தான் ரயில் வந்ததைக்கூட கவனிக்காமல் திவ்யா விபத்துக்குள்ளானதாகவும், வளர்ப்பு சரியில்லை என்றும் அத்தனை பேரும் பேசினார்கள், ஏசினார்கள்.

இந்தத் தலைமுறை இளைஞர்களிடமிருந்து திவ்யா வேறுபட்டவள் இல்லை. 24 மணி நேரமும் செல்போனுடன் வாழவே பழகியிருந்தாள். ஆனால், அவளது விபத்துக்கும் மரணத்துக்கும் காரணம் அதுவா?

Drug Addiction (Representational Image)
Drug Addiction (Representational Image)
Photo by Ramille Soares on Unsplash

``என்னைச் சந்திக்க வந்தபோது கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார் திவ்யாவின் அம்மா சந்தியா. திவ்யாவின் தோழி சஞ்சனாதான் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினாள். ஒரே மகளைப் பறிகொடுத்த துக்கம் ஒரு பக்கமும், அந்த ஒரு மகளையும் சரியாக வளர்க்கவில்லை, செல்போனுக்கு அடிமையாக்கியிருக்கிறாள் என்ற குற்ற உணர்வு இன்னொரு பக்கமுமாக, கிட்டத்தட்ட பைத்தியமாகவே மாறியிருந்தார் சந்தியா. அந்தத் துக்கத்திலிருந்தும் குற்ற உணர்விலிருந்தும் அவரை மீட்டெடுக்க பல மாத சிகிச்சைகள் தேவைப்படும் என்ற நிலையில் அதற்கு ஆயத்தமானேன். பரிசோதனைகள், கவுன்சலிங் எல்லாம் முடிந்த பிறகு, சஞ்சனாவை அழைத்தேன். என்னிடம் தனியே பேச வேண்டும் என்றாள் சஞ்சனா.

``டாக்டர்... என்னைக் காட்டிக்கொடுத்துட மாட்டீங்கன்னு சத்தியம் பண்ணினா ஓர் உண்மையை உங்ககிட்ட சொல்வேன்...'' என சத்தியம் வாங்கிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எல்லாரும் சொல்ற மாதிரி செல்போன் பார்த்துக்கிட்டே டிராக்கை கிராஸ் பண்ணதால திவ்யா சாகலை. அவளுக்குப் பிரச்னையே வேற... அவளுக்கு போதை மருந்துப் பழக்கம் இருந்தது. ஒருமுறை ஃப்ரெண்டு வீட்டுக்கு பார்ட்டிக்கு போயிருந்தபோது அங்கே வந்திருந்த பசங்க யாரோ அவளுக்கு போதை மருந்தை அறிமுகப்படுத்தியிருக்காங்க. அதுவரை எது நடந்தாலும் என்கிட்ட மறைக்காம சொல்லிட்டிருந்தவ, அதுக்கப்புறம் என்கிட்டருந்து விலக ஆரம்பிச்சா. அவளுடைய நடவடிக்கைகள்ல நிறைய வித்தியாசங்கள்... ஒருமுறை சந்தேகப்பட்டு அவளைக் கண்டிச்சேன், திட்டினேன். `இந்த விஷயத்தை எங்க வீட்டுல சொன்னா, நான் தற்கொலை பண்ணிக்குவேன்'னு கையில பிளேடு வெச்சுக்கிட்டு மிரட்டினா. இனிமே நான் இப்படிப் பண்ண மாட்டேன்னு அவ கெஞ்சினதை நம்பி, நானும் அவங்கம்மா, அப்பாகிட்ட சொல்லாம விட்டுட்டேன். மிரட்டின மாதிரி தற்கொலை பண்ணிக்குவாளோங்கிற பயம் வேற... ரெண்டு பேருமே இந்த வருஷம் ப்ளஸ் டூ. அதனால முன்ன மாதிரி என்னால அவளை அடிக்கடி மீட் பண்ண முடியலை.

மருத்துவர் சுபா சார்லஸ்
மருத்துவர் சுபா சார்லஸ்

அப்பப்ப போன்ல பேசிட்டிருந்தேன். எல்லாத்தையும் விட்டுட்டேன், நார்மலா இருக்கேன்... ஆனா, இந்தப் படிப்பு மட்டும் பிடிக்கலை'னு சொல்வா. `கற்பனை உலகத்துலயே இருக்காம்மா... எது பேசினாலும் காதுல வாங்குறதில்லை. படிப்பு பயத்துல அவ உண்டு, அவ ரூம் உண்டுன்னு இருக்கா'னு அவங்கம்மாவும் அப்பாவும் புலம்புவாங்க. சரி... எக்ஸாம் டென்ஷன்ல இருக்கா போலனு நானும் விட்டுட்டேன். ஆனா, அதெல்லாமே அவளுடைய டிரக் அடிக்ஷன்னு அப்புறம்தான் தெரிஞ்சது. அவ சாகறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி அவளை மீட் பண்ணினேன். என்கிட்ட சரியா பேசலை. விரக்தியா இருந்தா. ரொம்ப வற்புறுத்திக் கேட்டபோதுதான் அவ இன்னும் போதைப் பழக்கத்தை விடலைனு தெரிஞ்சது. லாக்டௌன்ல போதை மருந்து கிடைக்காத விரக்தியும் சேர்ந்து ரொம்பவே அப்செட்டா இருந்தா. அவங்கம்மாவும் அப்பாவும் வெளியூர்ல இருந்தாங்க. வந்ததும் என்ன ஆனாலும் இந்த விஷயத்தைச் சொல்லிடறதுனு முடிவோட இருந்தேன்... ஆனா... அதுக்குள்ள... அன்னிக்குகூட அவ போதை மருந்து யூஸ் பண்ணிட்டுதான் ரயில்வே டிராக்கை கிராஸ் பண்ணியிருக்கா. போதையில அவளுக்கு டிரெயின் சத்தம் கேட்கலை. அடிச்சிட்டுப் போயிடுச்சு... இனியும் இந்த விஷயத்தை அவங்கம்மா, அப்பாகிட்ட சொல்லி அவங்களை இன்னும் குற்ற உணர்வுக்குள்ளாக்கணுமானு தோணுது... அதனாலதான் அவ ட்ரெயின் ஆக்சிடன்ட்டுல இறந்ததாகவே இருக்கட்டும்னு விட்டுட்டேன். திவ்யாவோட சாவுல தெரிஞ்சோ, தெரியாமலோ எனக்கும் பங்கிருக்கு. அன்னிக்கே சொல்லியிருந்தா காப்பாத்தியிருக்கலாமோ...'' என்று கதறினாள் சஞ்சனா.

`நடந்தது நடந்ததாவே இருக்கட்டும். திவ்யாவோட தொடர்பிலுள்ள மற்ற நண்பர்களையாவது காப்பாத்த முயற்சி செய்வோம். அவங்க பேரன்ட்ஸை அலர்ட் பண்ணுவோம்...' என சமாதானப்படுத்தி அவளையும் சந்தியாவையும் அனுப்பி வைத்தேன்'' என்கிறார் சந்தியாவுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்தான்.

இன்னும்...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போதையின் வலைக்குள் எப்படிச் சிக்குகிறார்கள்..?

Narcotic Drugs
Narcotic Drugs
Photo by Daniel Norin on Unsplash
Covid Questions: தடுப்பூசிக்குப் பிறகு உடலுறவில் திருப்தியில்லை; என் அச்சம் சரியா?

திவ்யா போன்ற சிறுமிகள் போதை வலைக்குள் எப்படி விழுகிறார்கள், அவர்களை ஏன் பெற்றோரால் கண்டுபிடிக்க முடிவதில்லை, எங்கிருந்து அவர்களுக்கு போதைப்பொருள் கிடைக்கிறது, போதையிலிருந்து மீள்வது எப்படி, அதற்கான சிகிச்சைகள் என்ன, அப்படி மீண்டவர்களும் போதையின் பிடியில் மீண்டும் விழுவது ஏன் என இந்தப் பிரச்னையில் நாம் அறியா பக்கங்கள் பல இருக்கின்றன. வரும் அத்தியாயங்களில் ஒவ்வொன்றாகக் காண்போம்.

வாரந்தோறும் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு விகடன் இணையதளத்தில் இந்தத் தொடர் வெளியாகவிருக்கிறது.

- மீட்போம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு