Published:Updated:

கொரோனா தடுப்பூசி காப்புரிமை பரவலாக்கம்... ஏழை நாடுகளை காக்குமா இந்த முயற்சி?

US President Joe Biden
US President Joe Biden ( AP Photo / Patrick Semansky )

அமெரிக்காவை ஆளும் ஜோ பைடன் அரசாங்கமும் இந்தியாவின் இந்தக் கோரிக்கையை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பல அலைகளாக அடித்துப் பரவி உயிர்களை கொள்ளை கொண்டு செல்கிறது. இத்தகைய கொடிய நோய்க்கு எதிராக அறிவியலின் துணை கொண்டு விஞ்ஞானிகளும் ஆராய்ச்சித்துறை மருத்துவர்களும் இணைந்து கண்டறிந்துள்ள முக்கியமான பலம் பொருந்திய ஆயுதங்களாகப் பார்க்கப்படுபவை... தடுப்பூசிகள்.

தற்போது உலகம் முழுவதும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலே ஆன தடுப்பூசிகள் மட்டுமே, முறையாகப் பாதுகாப்பு மற்றும் திறனைச் சோதிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளில் தேறி, மக்களிடம் புழக்கத்துக்கு வந்திருக்கின்றன. இந்நேரத்தில் பொருளாதார நிலையில் மேம்பட்ட நாடுகளான ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் தடுப்பூசி இயக்கம் சிறப்பாக நடந்து வருகிறது.

Pfizer vaccine for COVID-19
Pfizer vaccine for COVID-19
AP Photo / Jessica Hill

ஆனால் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்பிரிக்க கண்ட நாடுகள் போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் மற்றும் பின்தங்கிய நாடுகளில் கடும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இன்னும் ஆப்பிரிக்க கண்டத்தின் பல நாடுகளில் ஒரு டோஸ் தடுப்பூசிகூட போடப்படாத நிலை உள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி விநியோகம் என்பது உலகளவில் சமன்பாட்டில் இல்லை. மேலும், பணம் படைத்த நாடுகள் தங்களின் தேவைக்கும் மீறி அதிகமான அளவு டோஸ்களை தங்களுக்கு முன்கூட்டிய ஆர்டர் கொடுத்துள்ளன. இது தடுப்பூசி கம்பெனிகள் வளரும் நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி விநியோகிப்பதைத் தடுக்கிறது.

உலக வர்த்தக கூட்டமைப்பு (World Trade Organisation) என்ற அமைப்பில் உலக நாடுகளில் பெரும்பான்மையினர் அங்கத்தினராக உள்ளனர். அந்தக் கூட்டமைப்பின் விதிகளின்படி தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்த அறிவுசார் உரிமம், தடுப்பூசியைக் கண்டறியும் நிறுவனத்திடம் மட்டுமே இருக்கும். இதை வேறு நிறுவனமோ அரசாங்கமோ உரிமை கோர முடியாது.

இதற்கான காரணமாகக் கூறப்படுவது யாதெனில், தடுப்பூசியைக் கண்டறிந்த நிறுவனம் அந்தத் தடுப்பூசியின் ஆராய்ச்சிக்காகவும் உருவாக்கத்துக்காகவும் பல்லாயிரம் கோடிகளைச் செலவு செய்கிறது. தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உருவாக்கம் என்பது நிறுவனத்துக்கு அதிக ரிஸ்க் உள்ளது. காரணம் இத்தனை சிரமப்பட்டு பெரும் பொருளாதாரத்தை செலவழித்து உருவாக்கப்படும் தடுப்பூசி, மூன்றாம் கட்டப் பரிசோதனையில் தேறாமல் போனால் அதற்குரிய நஷ்டத்தை அந்த நிறுவனம் மட்டுமே ஏற்க வேண்டியுள்ளது.

An example of the Pfizer COVID-19 vaccine vial
An example of the Pfizer COVID-19 vaccine vial
AP Photo/Andrew Harnik, Pool
தடுப்பூசி விலையில் ஏன் இவ்வளவு மாறுபாடு? ‘பாரத் பயோடெக்’ தலைவர் கிருஷ்ணா எல்லா Exclusive பேட்டி

எனவே, இத்தனை ரிஸ்க் எடுக்கும் நிறுவனத்துக்கு அறிவுசார் உரிமம் வழங்கப்படுவது நியாயம் என்று அதை ஆதரிக்கும் மக்கள் கூறுகின்றனர். ஆயினும், கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்தே இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா, இன்னும் ஏனைய நூறு வளரும் மற்றும் ஏழை நாடுகள் இணைந்து உலக வர்த்தக கூட்டமைப்புக்கு, இந்தப் பெருந்தொற்று முடியும்வரை மட்டுமேனும் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோக உரிமையை பரவலாக்கம் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர்.

தற்போது அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவை ஆளும் ஜோ பைடன் அரசாங்கமும் இந்தியாவின் இந்தக் கோரிக்கையை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

நிச்சயம் உலக வர்த்தக கூட்டமைப்பில் இந்தப் பிரச்னை குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில், அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக இந்த அறிவுசார் உரிமத்தைப் பரவலாக்கம் செய்வதற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் என்பது நமக்கெல்லாம் நற்செய்தி ஆகும்.

உலக வர்த்தக கூட்டமைப்பால், இந்தப் பெருந்தொற்று முடியும் வரை, தடுப்பூசி நிறுவனங்களின் இந்த உரிமம் பரவலாக்கப்படும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுமானால் இந்தியாவில்கூட தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் ஃபைசர்/மாடர்னா தடுப்பூசிகளை இந்திய மக்களின் பொருளாதாரத்துக்கு ஏற்றவாறு குறைவான செலவில் தயாரிக்க முடியும். இதனால் ஏழை நாடுகள் பலவும் பலனடையும்.

டாக்டர் A.B.ஃபரூக் அப்துல்லா
டாக்டர் A.B.ஃபரூக் அப்துல்லா

கொள்ளை நோய் அறிவியலாளர்கள் பலரின் கருத்துப்படி, இந்த கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசிகளை இந்த வருடத்துக்குள் பெரும்பான்மையினருக்குச் செலுத்தாமல் விட்டால் இந்த வைரஸ் தீவிரமான உருமாற்றம் அடைந்து, தற்போது வேக்சின்களால் கிடைத்த எதிர்ப்பு சக்தியையே உடைக்கும் நிலை உருவாகிவிடும்.

எனவே, உலகத்தின் பெரும்பான்மை மக்களுக்கு உடனடியாகத் தடுப்பூசி வழங்கிட இத்தகைய அணுகுமுறை மாற்றங்கள் காலத்தின் கட்டாயமாகின்றன. விரைவில் உலக வர்த்தக கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை ஏற்று மூன்றாம் உலக நாடுகளுக்கும் தடுப்பூசியைக் குறைவான விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும். இதுவே மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட அனைத்து அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு