Election bannerElection banner
Published:Updated:

`கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலையின் வீரியம் குறைவு!' - ஐ.சி.எம்.ஆர் சொல்வது என்ன?

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்

``தற்போதைய அலையில், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் ஆக்சிஜனின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் மூட்டு வலி, சோர்வு, தசை வலி, வாசனை இழப்பு, தொண்டை புண் போன்ற அறிகுறிகள் முதல் அலையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு."

'இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலை, முதல் அலையுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவே கடுமையானது. முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் இறப்பு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை' என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை மருத்துவர் பால்ராம் பார்கவா, கொரோனா இரண்டாம் அலையின் வீரியம் குறித்தும் அதனால் ஏற்படுகிற இழப்புகள் குறித்தும் விளக்கமளித்தார். மேலும் அவர், `ஆர்டி-பிசிஆர் (RT- PCR) சோதனையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஜீன்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்பதால், உருமாறிய கொரோனா வைரஸை கண்டறிய அது தவறாது' என்றார்.

corona virus
corona virus
Pixabay

கடந்த திங்கள்கிழமை அன்று பேசிய அவர் மேலும் கூறுகையில், ``இந்தியாவில் இரண்டாவது கொரோனா வைரஸ் அலை, முந்தைய கொரோனா வைரஸைவிட குறைந்த அளவே கடுமையானது. ஆனால், தற்போதைய அலையில் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் ஆக்சிஜனின் தேவை அதிகரித்துள்ளது'' என்றார். ``மூட்டு வலி, சோர்வு, தசை வலி, வாசனை இழப்பு, தொண்டைப் புண் போன்ற அறிகுறிகள் முதல் அலையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்று மிக உறுதியாகக் கூறுகிறேன். இருப்பினும், மூச்சுத் திணறல் இந்த அலையில் அதிகமாக உள்ளது'' என்று குறிப்பிட்டார்.

வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் உள்ள முக்கிய ஓட்டைகளை சுட்டிக்காட்டிய டாக்டர் பார்கவா, `நாங்கள் மிகப்பெரிய அளவிலான விழிப்புணர்வு கொண்டிருந்தோம். ஆனால், கொரோனாவின் இரண்டாவது அலை, முதல் அலையைவிட மாறுபட்ட விளைவுகளைக் கொண்டுள்ளதைப் பார்க்கிறோம். இதற்குக் காரணம், உருமாறிய கொரோனா அதிக அளவில் பரவும் தன்மை கொண்டதாக இருப்பதா என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை' என்றும் கூறினார்.

COVID-19
COVID-19

ஆர்டி-பி.சி.ஆர் சோதனை என்பது உடலில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மரபணுக்களை அளவிடும் சோதனை என்றும், சோதனையின் மூலம் உருமாறிய கொரோனாவையும் கண்டறிய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். `நாங்கள் பயன்படுத்தும் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மரபணுக்களை அளவிடுகின்றது. அது ஒருபோதும் ரிசல்ட்டை தவறவிடாது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்' என்றார்.

இரண்டு அலைகளிலும் கொரோனா தொடர்பான முக்கியமான அம்சம் ஒன்றையும் அவர் சுட்டிக்காட்டினார். `இரண்டு அலைகளிலும், பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 70% பேர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்' என்று கூறினார் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை மருத்துவர் பால்ராம் பார்கவா.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில், இந்தியாவில் கடந்த ஐந்து நாள்களில் மட்டும் தினமும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் நோய்த்தொற்றுகள் அறிவிக்கப்படுகின்றன. இதனால் நாட்டின் சுகாதாரத்துறை திணறி வருகிறது.

corona
corona

இந்தியாவில் கொரோனா வைரஸ், 15 நாள்களில் சுமார் 25 லட்சம் மக்களுக்குப் பரவியுள்ளது. இதனால் நாட்டில் பாதிக்கப் பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1.5 கோடியைத் தாண்டியுள்ளது. சிகிச்சையில் உள்ள கேஸ்கள் 19 லட்சத்தை தாண்டிவிட்டன என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு