Published:Updated:

`கொரோனாவுக்கு இந்த மருந்தை வழங்கலாம்... ஆனால்?!' - புதிய அறிவிப்பை வெளியிட்ட ஐ.சி.எம்.ஆர்

கொரோனா மருந்து
கொரோனா மருந்து

லோபினாவிர் (Lopinavir) மற்றும் ரிட்டொனாவிர் (Ritonavir) ஆகிய இரண்டு மருந்துகள் இணைந்த கூட்டுமருந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று குறித்த பதற்றம் அதிகம் இருப்பதற்கு முக்கியக் காரணம் அதை எதிர்த்துப் போராடக்கூடிய மருந்தோ வராமல் தடுக்க தடுப்பூசியோ இல்லாததே. இது குறித்து உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஹெச்.ஐ.வி நோய்க்கான மருந்தாகப் பயன்படுத்தப்படும் லோபினாவிர் (Lopinavir) மற்றும் ரிட்டொனாவிர் ( Ritonavir) ஆகிய இரண்டு மருந்துகள் இணைந்த கூட்டுமருந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஐ.சி.எம்.ஆர்
ஐ.சி.எம்.ஆர்

இந்த மருந்துகள் 2002, 2012-ம் ஆண்டுகளில் தாக்கிய கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த நோய்களான SARS COV, MERS COV ஆகிய நோய்களை எதிர்த்துப் போராட பயன்படுத்தப்பட்டுள்ளன. புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் இந்த மருந்துகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நம்பிக்கையூட்டும் முடிவுகள் வந்திருப்பதால், இம்மருந்தைக் கூட்டு மருந்தாகக் கோவிட் -19 சிகிச்சைக்குப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

`சார்ஸ் தந்த அனுபவம்.. ஸ்கேன் ரிப்போர்ட்!’ -கொரோனாவுக்கு எதிராக முதல் வாளினை வீசிய பெண் மருத்துவர்

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, இந்தக் கூட்டு மருந்தை நோய் பாதிப்பு மிதமான நிலையிருப்பவர்களுக்குப் பயன்படுத்தலாம். அதாவது ஒரு நிமிடத்துக்கு 22 முறை சுவாசிப்பவர்கள், ஆக்ஸிஜன் செறிவடையும் தன்மை 94-ன் கீழ் உள்ளவர்களுக்குக் கொடுக்கலாம். புதிதாக ஏதோ ஓர் உறுப்பு செயலிழந்த கொரோனா நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
Pixabay

மேலும் இந்த மருந்துகளை அளிக்கும் முன்பு நோயாளியிடம் இருந்து ஒப்புதல் படிவம் பெற வேண்டும். நோயாளிகள் சிகிச்சையில் இருக்கும்போது அவர்களைக் கண்காணித்து, அறிகுறிகள், ஆய்வு முடிவுகள் மருந்தின் பாதுகாப்பு குறித்துத் தெரியப்படுத்த வேண்டும். இம்மருந்து எப்படிச் செயலாற்றுகிறது என்பதை அறியும்பட்சத்தில் வருங்காலத்தில் கோவிட்-19 சிகிச்சையை வரையறை செய்ய உதவியாக இருக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கூறியுள்ளது.

கொரோனா: தடுப்பூசி முயற்சியில் தமிழகம்!

ஏற்கெனவே வேறு நோய்க்குப் பயன்படுத்தப்பட்ட மருந்தை கோவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்துவதன் மூலம் புதிய மருந்து தயாரிப்பதற்கான ஆராய்ச்சி நேரத்தை, பணச் செலவைக் குறைக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் - 19 கொரோனா
கோவிட் - 19 கொரோனா

பிளாஸ்மா சிகிச்சையின் செயல்திறன், பாதுகாப்புத் தன்மை குறித்த இரண்டாம்கட்ட ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு