Published:Updated:

தீபாவளி: தீக்காயங்களுக்கு உடனடி முதலுதவிகள் என்னென்ன?!

தீபாவளி

கட்டாயம் கண்களை கசக்கக்கூடாது. இது பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி விடக்கூடும். எரிச்சலைக் குறைக்க ஐஸ் கட்டிகளையோ, ஐஸ் தண்ணீரையோ கண்களில் ஊற்றக்கூடாது. மருந்தகங்களில் சென்று சொட்டு மருந்துகளை வாங்கிப் போட்டு நேரத்தை கடத்தினால் பார்வையையே இழக்க வேண்டியிருக்கும்.

தீபாவளி: தீக்காயங்களுக்கு உடனடி முதலுதவிகள் என்னென்ன?!

கட்டாயம் கண்களை கசக்கக்கூடாது. இது பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி விடக்கூடும். எரிச்சலைக் குறைக்க ஐஸ் கட்டிகளையோ, ஐஸ் தண்ணீரையோ கண்களில் ஊற்றக்கூடாது. மருந்தகங்களில் சென்று சொட்டு மருந்துகளை வாங்கிப் போட்டு நேரத்தை கடத்தினால் பார்வையையே இழக்க வேண்டியிருக்கும்.

Published:Updated:
தீபாவளி

தீபாவளியை பாதுகாப்பான முறையில் கொண்டாடவே நாமெல்லாம் விரும்புகிறோம். இருப்பினும் பட்டாசுகளை வெடிக்கும் போது சில நேரங்களில் தீக்காயங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. பட்டாசு, மத்தாப்பு போன்றவற்றை வைக்கும்போது ஏற்படும் தீக்காயங்களுக்கான முதலுதவி குறித்து இங்கே..

1. கண்களில் ஏற்படும் காயங்கள்

வெடி அல்லது மத்தாப்பின் பொறி பறந்து வந்து கண்களுக்குள் விழுந்துவிட்டால் என்ன செய்வது?

செய்யக்கூடாதவை: கட்டாயம் கண்களை கசக்கக்கூடாது. இது பிரச்னையை இன்னும் பெரிதாக்கிவிடக்கூடும். எரிச்சலைக் குறைக்க ஐஸ் கட்டிகளையோ, ஐஸ் தண்ணீரையோ கண்களில் ஊற்றக்கூடாது. மருந்தகத்தில் சொட்டு மருந்துகளை வாங்கிப் போட்டு நேரத்தை கடத்தினால் பிரச்னையின் தீவிரம் அதிகரிக்கும்.

செய்ய வேண்டியவை: சாதாரண வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரில் கண்களை நன்றாகக் கழுவ வேண்டும். சுத்தமான துணியைக் கொண்டு கண்களை மூடி விட வேண்டும். பாதிக்கப்பட்டவரை ஆசுவாசப்படுத்தி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண் மருத்துவரிடம் (Ophthalmologist) செல்ல வேண்டும்.

டாக்டர் அ. முகமது ஹக்கீம்
டாக்டர் அ. முகமது ஹக்கீம்

2. சாதாரண தீப்புண்

மத்தாப்பு கங்கினை தெரியாமல் தொடுவதால், அல்லது மத்தாப்பில் இருந்து வரும் சிதறல்கள் படுவதால் ஏற்படும் காயங்கள், தோலில் சிறு கொப்புளங்களை உருவாக்கும்.

செய்யக்கூடாதவை: கட்டாயம் அந்த புண்ணில் பேனா மையை ஊற்றுவதோ, காப்பி பொடி அப்புவதோ, தைலத்தை ஊற்றுவதோ தவறு. கட்டாயம் ஐஸ் கட்டியோ ஐஸ் தண்ணீரோ ஊற்றக்கூடாது. ஏற்பட்ட சிறு கொப்புளங்களை உடைத்தல் கூடாது.

செய்ய வேண்டியவை: குழாயில் இருந்து அல்லது குவளையில் இருந்து சாதாரண வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரை எடுத்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தொடர்ந்து அந்தக் காயம் மீது ஊற்ற வேண்டும். சில்வர் சல்ஃபாடயசின் எனும் களிம்பை வாங்கி அந்தக் காயம் ஏற்பட்ட பகுதியில் தடவ வேண்டும்.

கட்டாயம் வேறு எண்ணெய்களையோ, மாவு போன்றவற்றையோ அந்தக் காயத்தில் தடவுதல் கூடாது. அது கிருமித்தொற்றை ஏற்படுத்தி விடும். காயத்தை மூடுவதற்கு, புண்ணோடு எளிதில் ஒட்டாத Cling wrap துணியை பயன்படுத்தலாம்.

துணியால் ஆன பேண்டெய்டுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அருகில் இருக்கும் மருத்துவரை சந்திக்க வேண்டும். டெடானஸ் தடுப்பூசி போட்டு அவர் பரிந்துரைக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளை தொடர்ந்து எடுக்கக் காயம் குணமாகும்

மருத்துவர் ராகவி
மருத்துவர் ராகவி

3. பெரும் தீக்காயங்கள்

இந்த வகை காயங்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும். காயமுற்ற இடம் வீங்கி விடும். கடும் வலியை ஏற்படுத்தும்.

செய்யக்கூடாதவை: கட்டாயம் பேனா மை , தேங்காய் எண்ணெய் போன்றவற்றை ஊற்றக்கூடாது. அதேபோல் ஐஸ் கட்டி மற்றும் ஐஸ் தண்ணீர் ஊற்றக்கூடாது. எக்காரணம் கொண்டும் கொப்புளத்தை உடைக்கக்கூடாது

செய்ய வேண்டியவை: உடனே குழாய் நீரில் காயம் பட்ட இடத்தை நன்றாக பத்து நிமிடங்கள் காட்ட வேண்டும். முடிந்தால் சில்வர் சல்ஃபா களிம்பை அப்ளை செய்து காயம் பட்ட இடத்தை மூடி உடனே மருத்துவமனைக்கு விரைந்து செல்ல வேண்டும் . அசுத்தமான துணி அல்லது துணி பேண்டெய்டுகளைக் கொண்டு காயத்தை கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

பாதுகாப்பாக வெடிக்க சில வழிமுறைகள்

* கட்டாயம் பெரியோர் கண்காணிப்பின்றி குழந்தைகளை பட்டாசு, மத்தாப்பு வெடிக்க அனுமதிக்கக்கூடாது.

* ஒரு வாளித் தண்ணீர் கட்டாயம் பட்டாசு வெடிக்கும் இடத்தின் அருகில் இருக்க வேண்டும்.

* வெடித்த மத்தாப்புகளை முறையாக தண்ணீர் இருக்கும் வாளியில் போட்டு அணைக்க வேண்டும்.

* தளர்வான ஆடைகள், துணிகளை அணிந்து மத்தாப்பு வைக்கக்கூடாது. தீப்பற்றும் வாய்ப்பு அதிகரிக்கும்.

* கைகளில் பட்டாசுகளை வெடிப்பது ஆபத்தானது.

* வெடிக்காத வெடிக்கு அருகில் செல்லக்கூடாது. அதன் மீது தண்ணீரை ஊற்றி அணைத்து விட வேண்டும்.

பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க

* குடிசை பகுதிகளில், ராக்கெட் போன்ற பறந்து செல்லும் வெடிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* காலணிகளை அணிந்து கொண்டு பட்டாசு, மத்தாப்பு வைக்க வேண்டும்.

* பட்டாசுகளை வெடித்து முடித்த பின் அந்த இடத்தில் முழுவதும் தண்ணீர் ஊற்றி மிச்ச மீதி எரியும் கங்குகளை அணைக்க வேண்டும்.

* துணியில் நெருப்பு பட்டாலோ, பட்டாசு பட்டாலோ உடனடியாக துணியில் பிடித்த நெருப்பை அணைக்க அவர்களை ரோல் செய்ய வேண்டும். நெருப்பினை அணைப்பதில் தான் முதல் கவனம் செலுத்த வேண்டும். அடுத்ததாக, பாதிக்கப்பட்டவர் உடம்பிலிருந்து துணியை பிடித்து இழுக்கவோ, பிய்த்து எடுக்கவோ கூடாது. தண்ணீர் ஊற்றிய பின்னரே, துணியை மெதுவாக எடுக்க வேண்டும்.

* பாதுகாப்பான முறையில் தீபாவளித் திருநாளை கொண்டாடுவதே முக்கியமானது. அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்!

மருத்துவ தகவல்கள்: டாக்டர் அ. முகமது ஹக்கீம், அவசர சிகிச்சை நிபுணர், மருத்துவர் ராகவி