Published:Updated:

உள்ளூரில் 400, இறக்குமதியில் 1,500... கரூர், திருப்பூரின் PPE-ஐ கவனிக்குமா அரசு?!

தரமான PPE
தரமான PPE

மற்ற துணிகளின் தயாரிப்புகளை நிறுத்திவிட்டு, முழுக்க முழுக்க PPE சூட்டுகளின் தயாரிப்பில்தான் கரூர் மற்றும் திருப்பூர் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் தற்போது இயங்கிக்கொண்டிருக்கின்றன.

கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப்படுவது பாதுகாப்புக் கவசம் Personal Protective Equipment(PPE). ஆனால், அவை தமிழ்நாட்டில் தரமானவையாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தமிழகத்தில் போதிய அளவு PPE உடைகள் இல்லை என்றும், அவற்றுக்கான சரியான விலை நிர்ணயிக்கவில்லை என்கிற புகாரும் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், PPE கவச உபயோகம் மற்றும் அதன் பயன்பாடு குறித்து பொது மற்றும் நீரிழிவு நோய் மருத்துவருமான நிரேஷ் கண்ணனிடம் பேசினோம்.

PPE
PPE

"PPE என்பது முழுக்க முழுக்க 'யூஸ் அண்ட் த்ரோ (Use and Throw)' என்று சொல்லக்கூடிய ஒரு முறை மட்டுமே உபயோகிக்கும் பாதுகாப்புக் கவசம். இதை அனைத்து மருத்துவர்களும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டிய அரசு நெறிமுறைகள் எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. அதன்படி பாதுகாப்புக் கவசத்தை மூன்று படிநிலைகளாகப் பிரித்து உபயோகப்படுத்த வேண்டும்.

யாருக்கு எந்தப் பாதுகாப்பு கவசம்?

கொரோனா பாதிப்பில்லாமல் சர்க்கரைநோய், ரத்த அழுத்தப் பரிசோதனை செய்யவரும் போது நோயாளிகளுக்கான பிரிவில் வேலைபார்க்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும் லேட்டெக்ஸ்(Latex) கையுறை இவ்விரண்டை அணிந்திருந்தாலே போதுமானது. கொரோனாவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பார்க்கப்படும் நோயாளிகளிடம், கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது சிறந்தது. இவர்களைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள் நிச்சயம் N95 மாஸ்க் மற்றும் கையுறை உபயோகப்படுத்த வேண்டும்.

Doctor Niresh Kannan
Doctor Niresh Kannan

கொரோனா வார்டில் பணிபுரியும் பணியாளர்கள் நிச்சயம் முறையான PPE உடை அணிந்திருக்க வேண்டும். இந்த PPE கிட்டில் ஜாக்கெட், பேன்ட், மாஸ்க், கையுறை, காலுறை மற்றும் ஒளி மட்டுமே புகும் தலைக்கவசம் உள்ளிட்டவை இருக்கும். இதை அணிந்த பிறகு ஆறு மணிநேரத்துக்கு அகற்றக் கூடாது. ஒருமுறை உபயோகித்த பிறகு, அதனை உடனே முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

PPE வகைகள் மற்றும் உற்பத்தி!

Non-woven... அதாவது அடர்த்தியான OHP ஷீட் போன்ற மெட்டீரியலால்தான் PPE சூட் தயாரிக்கப்படுகிறது. மற்ற துணிகளின் தயாரிப்புகளை நிறுத்திவிட்டு, முழுக்க முழுக்க PPE சூட்டுகளின் தயாரிப்பில்தான் கரூர் மற்றும் திருப்பூர் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் தற்போது இயங்கிக்கொண்டிருக்கின்றன. இங்கிருந்துதான் மற்ற மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றன. உள்ளூரில் தயாரிக்கப்படும் சூட்டுகள் பாதுகாப்பானவையாகவே இருக்கின்றன. PPE உடைகளை அப்புறப்படுத்துவதில் கவனக்குறைவு ஏற்பட்டால் மட்டுமே நோய்த்தொற்று அவர்களுக்குப் பரவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, கவனம் தேவை" என்று எச்சரிக்கிறார் நிரேஷ்.

இப்படித் தரமான PPE சூட்டுகள் இருந்தும், அவை தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் போய்ச் சேரவில்லை என்பதுதான் நிதர்சனம். நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களும் பிற மருத்துவப் பணியாளர்களும் போதிய பாதுகாப்பு கவசங்கள் இன்றி தவித்துக்கொண்டிருக்கின்றனர். சர்ஜிக்கல் மாஸ்க் முதல் PPE சூட் வரை அனைத்திலும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சாந்தியிடம் பேசினோம்.

`ஆபத்தானது... ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கு மட்டுமே அனுமதி’ - பிளாஸ்மா சிகிச்சை குறித்து மத்திய அரசு

"போதிய அளவு PPE உடைகள் அரசிடம் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஆனால், மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கொரோனா வார்டு முதல் ஆரம்ப சுகாதார மருத்துவமனை வரை, இங்கு பணிபுரியும் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு கவசங்கள் போய்ச் சேரவில்லை. அரசிடம் பொருள்கள் இருந்தால் ஏன் இவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை?

வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்யும் பணியாளர்களுக்கு மாஸ்க் கொடுக்கப்படவில்லை. பெரும்பாலானவர்கள் தங்களின் கைக்குட்டைகளைத்தான் பயன்படுத்துகின்றனர். சுமார் 50,000 பேர் இதுபோல் களப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு என்ன பாதுகாப்பு வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்திருக்கிறது? தரமான பாதுகாப்புக் கவசங்கள் மருத்துவர்கள், நர்ஸ், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் போய் சேர்ந்திருக்கிறதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. அதற்கான சான்று எதுவும் இல்லை.

Fruit Shop
Fruit Shop
AP Photo / Aijaz Rahi

மருத்துவத் துறை மட்டுமல்லாது, காவல்துறை, சுகாதாரத்துறை, ஊடகத்துறை, மின்சார வாரியம், பால் மற்றும் மளிகைப் பொருள்கள் விற்பவர்கள் என இந்த லாக்டௌன் நாள்களிலும் லட்சக்கணக்கானோர் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு முதலில் எந்தவிதமான பரிசோதனையும் நடைபெறவில்லை. யார் இவர்களைக் கண்காணிக்கிறார்கள் என்பதும் கேள்விக்குறியே.

அப்படியே பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்திருந்தாலும், அவை அனைவருக்கும் சென்றிருக்கின்றனவா என்பதை யாரும் கண்காணிக்கவில்லை. கொடுக்கப்பட்ட பொருள்களும் தரமாக இல்லை. முக்கியமாக, தரமான N95 மாஸ்க், மற்றும் PPE 'ஹாஸ்மெட் சூட் (Hazmat suit)' தமிழ்நாட்டில் அனைவருக்கும் வழங்கப்படவில்லை. மருத்துவம் பார்க்கும்போது ரத்தம், உமிழ்நீர் போன்றவை தெறித்தால் அவற்றைத் தடுக்கும் அளவுக்கு PPE சூட் இருக்க வேண்டும். ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட சூட்டுகள் அந்தத் தரத்தில் இல்லை. இதனால், நோய்ப் பரவலுக்கு அதிக வாய்ப்புண்டு. மேலும், பல இடங்களில் தரமான பாதுகாப்புக் கவசங்கள் இருந்தும் பயன்பாட்டிற்கில்லாமல் அவை அலமாரியில் பூட்டிய நிலையில் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையும் சொற்ப அளவே. ஏன் இந்த அலட்சியம்?

Doctor Shanti
Doctor Shanti

உள்ளூரில் 400 ரூபாய்க்குக் கிடைக்கும் PPE சூட்டை மத்திய அரசாங்கம் 1,500 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது. அதிலும், சீனாவில் ஒன்றரை கோடி யூனிட் ஆர்டர் செய்திருக்கிறது. உள்ளூரிலேயே தரமான கவசப் பொருள்களைத் தயார் செய்யலாம். ஏற்கெனவே திருப்பூர் மற்றும் மற்ற இடங்களில் தயாரிக்கப்படுகிற பொருள்களும் போக்குவரத்து துண்டித்திருப்பதால் எல்லா மாவட்டங்களுக்கும் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற தடைகளை அரசாங்கம் பார்த்துச் சரிசெய்தாலே போதுமானது. இறக்குமதி செய்யப்படுபவற்றைவிட தமிழகத்திலேயே தரமான கவச உடைகள் தயாரிக்கப்படுகின்றன. போக்குவரத்து முடக்கத்தால் அவை உற்பத்திப் பகுதிகளிலேயே முடங்கியுள்ளன. அவற்றை தேவையை நோக்கிக் கொண்டு சேர்க்கும் முறையை அரசு இன்றும் முன்னெடுக்கவில்லை.

இரண்டாவது, இன்குபேஷன் காலத்துக்குப் பிறகும் ஏராளமானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், நிச்சயம் நடைமுறையில் எங்கோ தவறு நடந்துகொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். தமிழ்நாட்டில் தீவிரத்தன்மை குறைவாக இருக்கிறதே தவிர, பரவும் தன்மை அதிகமாகத்தான் இருக்கிறது என்பதைப் புரிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது சிறந்தது" என்கிறார் மருத்துவர் சாந்தி.

அடுத்த கட்டுரைக்கு