Published:Updated:

`தொற்று குறைவான மாநிலங்களில் திடீர் உயர்வு; டாப் 10-ல் பீகார்’ -அதிர்ச்சி தரும் கொரோனா அப்டேட்

இந்தியா - கொரோனா
இந்தியா - கொரோனா

இந்தியாவில் தற்போது பாதிப்பு குறைந்த மாநிலங்களில் இருந்து எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கின்றது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் தொடர்ந்து கவலை அளிக்கும்விதமாக இருக்கின்றன. கொரோனா பரவலின் ஆரம்பக்கட்டத்தில் மிகக்குறைவான எண்ணிக்கையில் பாதிப்பு இருக்கும்போதே இந்தியாவில் மத்திய அரசால் லாக்டெளன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் இதன் வேகம் பெருமளவு கட்டுப்படுத்தபட்டது.

கொரோனா
கொரோனா

மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து குறைவான அளவிலே பாதிப்புகள் பதிவாயின. இந்தியாவில் பதிவாகும் பெரும்பான்மையான பதிவுகள் இந்த மாநிலங்களை சுற்றியேதான் இருந்து வருகின்றன. இந்தியாவில் தற்போது லாக்டெளன் 4.0 அமலில் இருக்கிறது. இதில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தினமும் புதிய தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண ரயில்கள் சேவை விரைவில் இயங்க உள்ளது. உள்நாட்டு விமான சேவையும் தொடங்கவுள்ளது. கூடவே கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருவது மக்களை கவலை அடைய வைத்துள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்த எண்ணிக்கை தொடர்ந்து கவலை அளிக்கும்விதமாக அதிகரித்து வரும் சூழலில், புதிய சவாலாக, கடந்த காலங்களில் மிகக் குறைவான அளவில் கொரோனா பாதிப்புகள் பதிவான சில மாநிலங்களில் தற்போது எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது டபுளிங் ரேட் எனப்படும் இரட்டிப்பு வேகம் இந்த மாநிலங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளன. அஸ்ஸாம், இமாசல பிரதேசம், பீகார், கேரளம் என பல மாநிலங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

உதாரணத்துக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் இதுவரை 259 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வரை இந்த எண்ணிக்கை 203 ஆக இருந்தது. இந்தியாவில் மார்ச் மாதமே கொரோனா பரவத் தொடங்கிய நிலையில், மே மாதம் 21-ம் தேதி வரை 203 பேர்தான் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், நேற்று மட்டும் 56 புதிய பாதிப்புகள். கேரளாவில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருமளவில் கட்டுப்படுத்தபட்டது. எனினும் தற்போது அங்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேருக்கு நேற்று ஒரேநாளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீகார் மாநிலமும் அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. கடந்த 21-ம் தேதி 380 பேரும் நேற்று (22-5-2020) 179 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,166 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பீகார் மாநிலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் டாப் 10-க்குள் நுழைந்து இருக்கிறது. 44,582 பாதிப்புகளுடன் முதலிடத்தில் மகாராஷ்டிராவும், 14,753 பாதிப்புகளுடன் தமிழகம் 2-ம் இடத்திலும், குஜராத் (13,273), டெல்லி (12,319) ஆகிய மாநிலங்கள் முறையே 3 மற்றும் 4 ஆகிய இடங்களில் இருக்கிறது. ராஜஸ்தான் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

இந்தியாவில் தற்போது தினமும் 6,000-க்கும் அதிகமான மக்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், இதில் இந்த 5 மாநிலங்களில் இருந்து மட்டும் சராசரியாக 5,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

கொரோனா
கொரோனா

ஆனால், தற்போது பாதிப்பு குறைந்த மாநிலங்களில் இருந்து எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை தரும் நிலையில் அதற்கான காரணங்கள் குறித்து கேள்வி எழுந்தது. நாடு முழுவதும் லாக்டெளன் காரணமாக பணி செய்யும் இடங்களில் சிக்கிய தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தற்போது சொந்த ஊர்களுக்குத் திரும்புவதும், இந்த மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணமான சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக அதிக பாதிப்புகள் கொண்ட 11 நகரங்களில் இருந்து பீகாருக்குத் திரும்பும் மக்களை கட்டாய க்வாரன்டீனில் தனிமைப்படுத்துகிறார்கள். மற்ற ஊர்களில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறிகள் இல்லாதபட்சத்தில் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தியுள்ளனர். மற்ற மாநிலங்களிலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்க லாக் டெளன் 4.0 -ல் மக்கள் சொந்த ஊர் திரும்புவதே காரணமாகச் சொல்லப்படுகிறது.

`80 ஹாட்ஸ்பாட்... ஆனால், புதிதாக கொரோனாத் தொற்று யாருக்குமில்லை!’ - நம்பிக்கையளிக்கும் கேரளா
கேரளா
கேரளா
Twitter

கேரளாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலோனார் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள்தான் என்கிறது புள்ளிவிவரக் கணக்கு. இதன் காரணமாக, உள்நாட்டு விமானச் சேவையைப் பயன்படுத்தி கேரளா வருபவர்களுக்கும் 14 நாள்கள் க்வாரன்டீன் என மாநில அரசு அறிவித்திருக்கிறது. தளர்வுகள் இருக்கும் பகுதியில் மக்கள் தொடர்ந்து சொந்த ஊர்களுக்குப் பயணமாகி வருவதால் அடுத்த சில நாள்களுக்கும் இந்த மாநிலங்களில் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்றாலும் தொடர்ந்து முறையாக கண்காணித்து பாதிப்பு இருப்பவர்களை உரிய நேரத்தில் க்வாரன்டீன் செய்துவிட்டால் பெரும் வெடிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்குமா அல்லது போகப் போக குறையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

News Input: Indianexpress

அடுத்த கட்டுரைக்கு