Published:Updated:

`5 மாநிலங்களில் இருந்து 80% பாதிப்பு; உலக அளவில் 10-வது இடம்!’ -இந்தியாவில் #Corona நிலவரம்

கொரொனா
கொரொனா

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் சுமார் 80 சதவிகிதம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலேயே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பரவல், இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வருவதாகச் சொல்லப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாள்களாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி கொரோனா தொற்றுக்கு உள்ளான சுமார் 20,000 பேருடன், உலக அளவில் இந்தியா17-வது இடத்தில் இருந்தது . ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு, நோய் குறித்த அச்சத்தை மக்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.

இந்தியா - கொரோனா
இந்தியா - கொரோனா

இன்றைய நிலவரப்படி,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,53,230 பேர். மேலும், இதுவரை 4,365 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இறந்துள்ளனர். நேற்று மட்டும் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 172 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், மகாராஷ்டிராவில் மட்டும் 97 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 84,136 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருவதோடு, 64,729 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், சிகிச்சைபெற்று வருபவர்களில் 8,944 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மக்கள் தொகையில், 10 லட்சம் பேரில் 106 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும், 3 பேர் தொற்றுக்கு உள்ளாகி இறப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், நாடு முழுவதும் இதுவரை, 32,42,160 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடானது 10 லட்சம் மக்கள் தொகையில் 2,352 பேருக்கு தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுவதைக் காட்டுகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதமானது இதுவரை இல்லாத அளவில், நேற்றைய தினம் 41.6 சதவிகிதத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலமான மகாராஷ்டிராவில், நேற்று மட்டும் 2,091 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்னிக்கை 54,758 ஆக உயர்ந்துள்ளது. மாநில தலைநகரான மும்பையில் மட்டும் 1,002 பேருக்கு நேற்று புதிதாகத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மும்பையில் மட்டும் 32,974 பேர் இதுவரை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் இன்று மட்டும் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மட்டும் 558 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் 18,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பைக்கு அடுத்தப்படியாக அதிக கொரோனா தொற்றுக்கு உள்ளானோரைக் கொண்ட நகரமாக சென்னை உருவெடுத்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

குஜராத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 404 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்றைய தினத்தில் மட்டும் 30 பேர் தொற்றுக்கு உள்ளாகி இறந்துள்ளதால், இதுவரை மாநிலம் முழுவதும் 888 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் தலைநகரான டெல்லியில், கடந்த 24 மணி நேரத்தில் 792 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 15,000 -ஐ தாண்டியுள்ளதாகவும் தெரியவருகிறது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் சுமார் 80 சதவிகிதம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலேயே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு