Published:Updated:

`இந்தியாவில் மூவருக்கு தொற்று’ -கொரோனா வைரஸால் தனிமைப்படுத்தப்படும் குடும்ப உறுப்பினர்கள்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவில், மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

‘கொரோனா வைரஸ்’ உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள பெயர். இதன் பாதிப்பு குறித்து சீன அரசு முதலில் மௌனம் காத்ததே, பிரச்னை விஸ்வரூபம் எடுக்கக் காரணமாக அமைந்தது. டிசம்பர் மாதமே சீனாவில் கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி தொடர்பாக எச்சரித்த மருத்துவருக்கு மிரட்டல்கள் விடுத்தனர், சீன அதிகாரிகள். அந்த மருத்துவரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துவிட்டார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவில், இத்தாலி பயணி உட்பட மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் ராஜஸ்தான் வந்துள்ள இத்தாலி நாட்டுப் பயணிக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

“இந்தியர்கள் யாரும் பயப்பட வேண்டாம். கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்கிறது. ஒரு மருத்துவர் என்ற முறையில் அனைவரும் தனிப்பட்ட சுகாதாரத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறேன். சீனா மட்டுமல்லாமல் இத்தாலி, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்” என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவாமல் தடுக்கும் அடிப்படை சுகாதார நடவடிக்கைகள்!- டிக்டாக்கை கையிலெடுக்கும் WHO

பெங்களூருவைச் சேர்ந்த 24-வயதான பொறியாளர் ஒருவர், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணியாற்றிவருகிறார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனை மாதிரிகள், புனேயில் உள்ள லேபுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த இளைஞர், கடந்த மாதம் துபாயில் ஹாங்காங்கைச் சேர்ந்தவர்களுடன் பணியாற்றிவந்துள்ளார். அங்கு, அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. துபாயிலிருந்து கடந்த மாதம் இண்டிகோ விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்துள்ளார். அங்கு, தன் குடும்பத்தினருடன் இருந்துள்ளார்.

அதன்பின்னர், பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு பேருந்தில் சென்றுள்ளார். இப்போது அந்த இளைஞருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறிப்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தினர், இண்டிகோ விமானத்தில் பயணித்தவர்கள், பேருந்தில் பயணித்தவர்கள், அலுவலகத்தில் பணியாற்றியவர்கள், தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநில சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய தெலங்கானாவைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட இளைஞருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், ஹைதராபாத் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அலுவரின் மேற்பார்வையில், 20 பேர் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கொரோனா
கொரோனா

கர்நாடக சுகாரத்துறை அதிகாரிகள் பேசுகையில், “ இண்டிகோ விமானத்தில் அவருடன் பயணித்த பயணிகள், பேருந்தில் அவருடன் சென்ற பயணிகள் குறித்த விவரத்தை டிராவல் ஏஜென்சிகள் மூலமாக சேகரித்துவருகிறோம். பெங்களூருவில் இருந்தபோது யாருடனெல்லாம் தொடர்பில் இருந்தார் என்ற தகவல்களைச் சேகரித்துவருகிறோம். அவர்கள் அனைவரும் 15 நாள்கள் தனிமையில் வைக்கப்பட்டு, தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் இத்தாலியிலிருந்து திரும்பியுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல், இத்தாலி நாட்டுப் பயணி ஒருவர், ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்துள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. அவருடன் வந்த மற்ற பயணிகளுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு