Published:Updated:

`12 நாளில் வென்டிலேட்டர் டு ஹோம் க்வாரன்டைன்!’ -பிளாஸ்மா தெரபி மூலம் குணமடைந்த முதல் இந்தியர்

பிளாஸ்மா
பிளாஸ்மா

பிளாஸ்மா தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட 12 நாளில் அவர் வீடு திரும்பியுள்ளார். இந்தியாவில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறையில் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமான முதல் நபர் இவரே.

இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. கொரோனா வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததே, அது ஏற்படுத்தும் விளைவுகளுக்குக் காரணம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. சில நாடுகளில் மலேரியாவுக்கு அளிக்கும் மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில் சிறிது பலன் கிடைப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். எனினும் இது முழுமையான பலன் அளிக்கக்கூடியது இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிட் -19 கொரோனா வைரஸ்
கோவிட் -19 கொரோனா வைரஸ்

இந்த நிலையில், பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை ஓரளவு கைகொடுக்கிறது என்ற கருத்து மருத்துவ உலகத்தில் பேசப்பட்டது. இந்தியாவில் ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை அளிக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளியின் உடலில் இருக்கும் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உடலில் செலுத்தும் முறைதான் பிளாஸ்மா சிகிச்சைமுறை. கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களின் உடலில் உள்ள எதிர்ப்பு புரதத்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்காரணமாக கொரோனா நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் உடலில் எதிர்ப்புசக்தி அதிகரித்து கொரோனாவுக்கு எதிராகப் போராட அவர்களது உடல் தயாராகிறது என இந்த சிசிக்கை தொடர்பாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த நிலையில் டெல்லியில் முதல் முதலாக பிளாஸ்மா தெரபி முறையில் சிகிச்சை வழங்கப்பட்ட 49 வயது நபர் தற்போது கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்த மாதம் 4 -ம் தேதி கொரோனா அறிகுறிகள் தென்படவே, மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டு இருக்கிறார். அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. அடுத்த சில நாள்களிலே அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரால் சுயமாக மூச்சு விட சிரமங்கள் ஏற்பட மருத்துவர்கள் அவருக்கு ஆக்சிஜன் அளித்தனர்.

வெண்டிலேட்டர்
வெண்டிலேட்டர்
Representational image

தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைய கடந்த 8-ம் தேதி அவருக்கு வென்டிலேட்டர் உதவி வழங்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்குக் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து பிளாஸ்மா தானமளிப்பவர்களை தேடும் பணிகள் நடைபெற்றன. கொரோனாவிலிருந்து மீண்ட ஒரு பெண் தனது பிளாஸ்மாவை தானம் கொடுக்க முன் வந்தார். மூன்று வாரங்களுக்கு முன்னர் அவருக்குக் கொரோனா நெகட்டிவ் என வந்தது. இரண்டு முறை செய்யப்பட பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வர, அந்தப் பெண் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். எனினும் தானம் வழங்கும் முன்னரும் அப்பெண்ணுக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதிலும் நெகட்டிவ் என முடிவுகள் வர அவரிடமிருந்து பிளாஸ்மா எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட 49 வயதான நபருக்குக் கடந்த 14-ம் தேதி சிகிச்சை வழங்கப்பட்டது.

`வாழ்க்கை கொடுத்தவர்கள்; ஆபத்தில் விடமாட்டார்கள்’ - கோவிட்-19 பிளாஸ்மா தானமளித்த முதல் இந்திய பெண்

இந்த சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 4 நாள்களில், அதாவது 14 -ம் தேதி முதல் அவருக்குப் பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவி நீக்கப்பட்டது. வென்டிலேட்டர் கருவி நீக்கப்பட்ட 24 மணி நேரத்தில் தாமாக உணவு எடுத்துக்கொள்ளும் நிலைக்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட இரண்டு பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வர, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்
Representational Image

இந்த நிலையில், அவர் நேற்று (26-04-2020), தொற்றிலிருந்து முழுமையாக குணமாகி, வீடு திரும்பினார். அதாவது சிகிச்சை எடுத்துக்கொண்ட 12 நாளில் அவர் வீடு திரும்பியுள்ளார். எனினும் அவர் வீட்டில் 2 வாரங்களுக்குத் தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறையில் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமான முதல் நபர் இவரே..

கொரோனாவைக் குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை... அமெரிக்காவின் முன்னெடுப்பு முயற்சி!

``கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த ஒருவர் தனது பிளாஸ்மாவை தானமளிக்க விரும்பினால், அவரிடம் இருந்து 400 மில்லி பிளாஸ்மா எடுக்கலாம். அப்படி எடுக்கப்படும் பிளாஸ்மா மூலம் கொரோனா தொற்றில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இரண்டு நபர்களுக்கு சிகிச்சை வழங்கமுடியும்” என்கிறார்கள் மருத்துவர்கள்!

அடுத்த கட்டுரைக்கு