Election bannerElection banner
Published:Updated:

`சென்னை மக்களுக்கு நோய் எதிர்ப்புத்திறன் வந்துவிட்டதா?' செரோ ஸ்டடி சொல்லப்போவது என்ன?

Blood samples
Blood samples

ICMR-ன் கருத்துப்படி இந்தியாவில் உள்ள 80% பேர் ஏசிம்ப்டமடிக் தொற்றாளர்கள் எனில் அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தாமல், சிகிச்சை எடுத்துக்கொள்ளாமலேயே குணமாகியிருக்கும்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு முடிவு உள்ளதா இல்லையா... நாட்டில் உள்ள அனைவருக்கும் தொற்று ஏற்பட்ட பிறகுதான் இதன் கோரதாண்டவம் முடியுமா... என்று நாமெல்லாம் குழம்பிக்கொண்டிருக்கும் வேளையில், ``கோவிட்-19 சமூகப்பரவலாகி வெகுநாள்கள் ஆகிவிட்டன. நாட்டில் உள்ள முக்கால்வாசி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்துவிட்டது. ஆனால், பெரும்பாலானவர்களில் இது அறிகுறிகளை வெளிப்படுத்தாத ஏசிம்ப்டமடிக் நிலையில் இருப்பதால் கொரோனா தொற்று ஏற்படுவதே தெரிவதில்லை" என்றொரு கருத்தையும் முன்வைக்கின்றனர் மருத்துவர்களில் பலர்.

Corona
Corona

இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த தொடக்கத்திலேயே, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் மூத்த விஞ்ஞானியான மருத்துவர் ராமன் ஆர் கங்காகேதர், ``இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படாத ஏசிம்ப்டமடிக் (Asymptomatic) நிலையில் இருக்கிறார்கள். இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம்" என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஏசிம்ப்டமடிக் நிலை குறித்து ICMR வெளியிட்டிருந்த செய்தியில், ``இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் ஏசிம்ப்டமடிக். மற்ற 20% பேரில் 15% பேர் கொரோனாவுக்கான அனைத்து அறிகுறிகளுடன் உள்ளனர். மீதமுள்ள 5% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளனர்" என்று கூறப்பட்டிருந்தது.

ICMR-ன் கருத்துப்படி இந்தியாவில் உள்ள 80% பேர் ஏசிம்ப்டமடிக் தொற்றாளர்கள் எனில் அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தாமல், சிகிச்சை எடுத்துக்கொள்ளாமலேயே குணமாகியிருக்கும். எனில், நாட்டில் பெரும்பாலானவர்களின் உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியிருக்கும். இந்த உண்மையைக் கண்டறியும் முயற்சியில்தான் தற்போது சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது.

Blood Test
Blood Test

சென்னையில் வசிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், தொற்று ஏற்படாதவர்கள் எனத் தோராயமாக 12,000 மக்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ரத்த மாதிரிகளில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளனவா.. ஆன்டிபாடிகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவர் ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரா அல்லது ஏசிம்ப்டமடிக் நிலையில் இருந்தவரா என்பதன் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்துத் தொற்றுநோய் மருத்துவர் சுரேஷ் குமாரிடம் பேசினோம்.

``குறிப்பிட்ட ஓரிடத்தில் உள்ள மக்களைத் தோராயமாகத் தேர்வு செய்து அவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுக்கு, அவற்றில் குறிப்பிட்ட நோய்க்கிருமிக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளனவா என்பதைக் கண்டறியும் முறைக்கு `செரோ பிரிவேலென்ஸ் ஸ்டடி (Seroprevalence study)' என்று பெயர்.

தொற்று நோய் மருத்துவர் சுரேஷ் குமார்
தொற்று நோய் மருத்துவர் சுரேஷ் குமார்

தற்போது கொரோனாவுக்கு எதிரான ஆராய்ச்சிகளில் பல நாடுகளில் Seroprevalence study மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் சில மாதங்களுக்கு முன்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் சமூகப்பரவல் ஏற்பட்டுவிட்டதா என்பதைக் கண்டறியும் நோக்கத்தில் செய்யப்பட்ட இந்த ஆய்வில் குறைந்த சதவிகிதத்தினரின் ரத்த மாதிரிகளில் மட்டுமே கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் கண்டறியப்பட்டன. இதன் காரணமாகவே இந்தியாவில் சமூகப் பரவல் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வில் சோதிக்கப்படும் ரத்த மாதிரிகளில் 40 - 50 சதவிகிதத்தினருக்கு ஆன்டிபாடிகள் கண்டறியப்பட்டால் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுக் குணமாகிவிட்டது என்று அர்த்தம். பெரும்பாலானோர் கொரோனாவுக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாமலேயே தொற்று ஏற்பட்டு ஏசிம்ப்டமடிக் நிலையிலேயே குணமடைந்திருப்பார்கள். மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத்திறன் அவர்களின் உடலில் உருவாகியிருக்கும். இந்த ஆய்வையும் அடிப்படையாகக் கொண்டுதான் லாக்டௌன் உள்ளிட்ட நடைமுறைகளில் அரசு தளர்வுகள் கொண்டுவருவதைப் பற்றி முடிவெடுக்கும்" என்றார்.

சானிட்டைசர்
சானிட்டைசர்
pixabay

கொரோனா பரவல் தொடர்ந்துகொண்டிருக்கும் கடந்த ஐந்து மாதங்களில் நோய் பரவும் எண்ணிக்கையில் ஏராளமான ஏற்ற இறக்கங்களைக் கண்டிருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் கொரோனா நோய்ப் பரவலின் எண்ணிக்கை இனி, இதற்கு முன்பு ஏற்பட்டதைப்போல் உச்ச நிலையை அடையாது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர் சுரேஷ் குமாரிடம் கேட்டபோது, ``அப்படி உறுதியாகக் கூறிவிட முடியாது. லாக்டௌனில் ஏற்படும் தளர்வுகள், சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மக்களிடம் ஏற்படும் அலட்சியத்தைப் பொறுத்து இந்த எண்ணிக்கை திடீரென்று உயரலாம். தமிழகத்தில் நாம் இப்போது சந்தித்துக்கொண்டிருப்பது கொரோனாவின் முதல் அலைதான். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முழுவதுமாகக் குணமடைந்து, மேலும் பரவல் ஏற்படாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆன பின்பு, மீண்டும் கொரோனாவின் இரண்டாம் அலை உருவாகும், அதில் முதல் அலையில் ஏற்பட்டதைவிட நோய் பரவல் மற்றும் தாக்கத்தின் விளைவு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு