பெங்களூரில் உள்ள வசந்த் நகரை சேர்ந்தவர் வினோத்குமார். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், மனைவி நிஷா மற்றும் மகள் அஹானாவுடன் வசித்து வருகிறார். எம்.பி.ஏ பட்டதாரியான இவர், பெங்களூரில் உள்ள கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஜூலை மாதம், அவர்களது குடியிருப்பின் உரிமையாளர், வீட்டில் பெயின்ட் அடிப்பதுடன் கூடவே பூச்சிகளுக்கு மருந்து வைக்கும் பணியும் நடைபெறும் எனத் தெரிவித்ததால், வினோத்குமார் குடும்பத்துடன் ஜூலை 29 -ம் தேதி தன்னுடைய சொந்த ஊரான கேரளாவின் கண்ணூருக்குச் சென்றார்.

இதனிடையே, வீட்டில் மேற்கொண்ட துப்புரவு பணி முடிந்ததால், ஆகஸ்ட் 1-ம் தேதி காலை 5.30 மணியளவில், பெங்களூருவுக்கு திரும்பியுள்ளனர் வினோத்குமார் குடும்பத்தினர். காலை 7.30 அளவில் வீட்டில் இருந்த தண்ணீர் பயன்படுத்தி காபி போட்டுக் குடித்த இவர்கள், அதன்பின் தூங்கியுள்ளனர்.
பகல் 11.30 மணியளவில், மூச்சுத்திணறல் காரணமாக தூக்கத்தில் இருந்து அனைவரும் எழுந்துள்ளனர். தொடர்ந்து ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், முதலில் வினோத்குமாரையும், அவரின் மகளையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து விரைந்து வந்து நிஷாவையும் மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 8 வயதான குழந்தை அஹானா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், 'வீட்டில் பூச்சிகளை சுத்தப்படுத்த பயன்படுத்திய பூச்சிக்கொல்லியின் வாயுவை சுவாசித்ததும், பூச்சிக்கொல்லி கலந்து மாசடைந்த தண்ணீரில் தயாரித்த காபியை பருகியதும் குழந்தை இறப்பிற்கு காரணமாக இருக்கலாம்’ என்று தெரிவித்தனர்.

குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வீட்டில் எந்த பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினோத்குமாரும் அவர் மனைவியும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், குழந்தை இறந்தது குறித்து தாய்க்கு இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வினோத்தின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில், அலட்சியத்தால் மரணம் விளைவித்ததற்காக, இந்திய தண்டனைச் சட்டம் 304A-ன் கீழ் வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.