Published:Updated:

பள்ளிகள் விடுமுறை, ஏசி பயன்பாடு, தடுப்பூசி தாமதம்... விளக்கங்கள் தந்த கொரோனா கருத்தரங்கம்!

கொரோனா கருத்தரங்கம்
கொரோனா கருத்தரங்கம் ( Photo: Vikatan / Priyanka )

கொரோனா பற்றிய முக்கியமான தகவல்களை சர்வதேச அளவிலுள்ள நிபுணர்களிடமிருந்து பெறும் வகையிலான சர்வதேச நிகழ்ச்சி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அது தொடர்பான அச்சம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பற்றிய முக்கியமான தகவல்களை சர்வதேச அளவிலுள்ள நிபுணர்களிடமிருந்து பெறும் வகையிலான சர்வதேச நிகழ்ச்சி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன் நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார். சர்வதேச நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் காணொளி காட்சி மூலம் நிகழ்வில் பங்கேற்றுப் பேசினார்கள்.

Dr.Sudha Sheshian and C. Vijayabaskar
Dr.Sudha Sheshian and C. Vijayabaskar
Photo: Vikatan / Priyanka

நிபுணர்கள் பேசிய முக்கியத் தகவல்களின் தொகுப்பு இங்கே...

டாக்டர் சௌம்யா சுவாமிநாதன், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி

குழந்தைகள் வைரஸைக் கடத்துவார்கள்!

கொரோனா வைரஸ் குழந்தைகளைக் குறைவான அளவே தாக்கியிருக்கிறது. உலகம் முழுவதுமுள்ள நோயாளிகளில் 1 சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே குழந்தைகள். குழந்தைகளின் உடலில் அறிகுறிகள் தென்படுவதில்லை. ஆனால், குழந்தைகளால் மற்றவர்களுக்கு வைரஸைக் கடத்த முடியும். இது நோய்ப் பரவலை அதிகரிக்கும் என்பதால்தான் இந்தச் சமயத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தடுப்பூசியை தற்போது அமெரிக்கா கண்டறிந்துள்ளது. அதை மனிதர்களிடையே பரிசோதித்த பிறகு பயன்பாட்டுக்கு அளிக்க முடிவு செய்திருக்கிறோம். இந்தியாதான் பல்வேறு உலக நாடுகளுக்குத் தடுப்பூசிகளைத் தயாரித்து வழங்கி வருகிறது. கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி நடைமுறைக்கு வந்துவிட்டால் இந்தியாவிலும் அதைத் தயாரிக்க முடியும்.

டாக்டர் ஏ.எஸ். வலன், நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தில் பணியாற்றும் பொதுசுகாதார நிபுணர் (Public health Expert)

மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு எவ்வாறு இருக்க வேண்டும்?

கொரோனா நோயாளிகளைக் கையாள்வதற்கு மருத்துவப் பணியாளர்கள் செல்வதற்கு முன்பே அவர்களுக்கு அடிப்படை பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவப் பணியாளர்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் இருந்தால் அவர்களை சிகிச்சையளிக்க அனுமதிக்கக் கூடாது. மருத்துவமனையில் நோயாளிகளின் வருகையைப் பதிவு செய்யுமிடத்தில் ஒரு ப்ளாஸ்டிக் திரை இருக்க வேண்டும். நோயாளியுடன் நேரடி தொடர்பைத் தடுக்கும் வகையில் இந்த வசதியை ஏற்படுத்த வேண்டும்.

Dr.A.S.Valan
Dr.A.S.Valan
கொரோனா பதற்றம்; `வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையில் பணியாற்ற உதவும் 5  ஆலோசனைகள்!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போது கவச ஆடை, கையுறை, கண்ணாடி, பிரத்யேக காலணி ஆகியவற்றை அணிந்திருக்க வேண்டும். நோயாளியிடமிருந்து குறைந்தது ஒரு மீட்டர் தூரத்தில் நின்றுதான் சிகிச்சையளிக்க வேண்டும். இன்ஃப்ரா ரெட் தெர்மாமீட்டரைப் பயன்படுத்தி, நோயாளியைத் தொடாமல் அவர்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்க வேண்டும்.

ஒருவேளை நோயாளியின் மூச்சுப்பாதை போன்றவற்றை அருகில் சென்று பரிசோதிக்க வேண்டியிருந்தால் மிகவும் கவனமாக போதிய தற்காப்பு நடவடிக்கைகளுடன் மட்டுமே செல்ல வேண்டும். அவசியம் ஏற்படாதவரை, சிகிச்சையளிப்பதற்கு அதிக எண்ணிக்கையில் மருத்துவப் பணியாளர்களை நியமிக்கக் கூடாது.

Health workers
Health workers

அதேபோன்று நோயாளிகளைக் காணவரும் உறவினர்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும். ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க முடியுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. அதற்கான எந்தவித ஆதாரபூர்வ தகவல்களும் இல்லை.

ஹேமலதா வரதன், ஆஸ்திரேலியா நியூகேசில் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர்

சென்ட்ரலைஸ்ட் ஏசியைப் பயன்படுத்தலாமா?

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் வார்டுகளில் சென்ட்ரலைஸ்டு ஏசி பயன்படுத்தக் கூடாது. ஆரோக்கியமான நபர்கள் இருக்குமிடத்தில் சென்ட்ரலைஸ்ட் ஏசி பயன்படுத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

Air conditioner
Air conditioner
கொரோனா பரிசோதனைக்கு முன்வருபவர்களுக்கு சோதனைகள் மறுக்கப்படுகிறதா?! FightCovid-19

அதேபோல் கொரோனா நோயாளிகளைக் கையாண்ட மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகளுடன் இருக்கும் உறவினர்கள் ஆகியோரின் உடைகளை எவ்வாறு கிருமி நீக்கம் செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலருக்கு உள்ளது. அதற்கென்று பிரத்யேக முறைகள் எதுவும் இல்லை. வழக்கம்போல் சோப்பு அல்லது சோப்புத்தூள் பயன்படுத்தி ஆடைகளைக் கையாலோ, வாஷிங் மெஷினிலோ துவைத்து வெயிலில் உலர்த்தினால் போதுமானது.

அடுத்த கட்டுரைக்கு