Published:Updated:

`கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு மட்டும் போதுமா?' - மருத்துவர்கள் விளக்கம்

ஊரடங்கு
ஊரடங்கு

ஆரம்பகட்டத்தில், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும், அறிகுறிகளுடன் இருந்தவர்களுக்கும் மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கொரோனா நோய்ப்பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஊரடங்கு மட்டுமே நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தாது, பரிசோதனைகளும் அதிக எண்ணிக்கையில் செய்யப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ICMR) வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

Testing Corona
Testing Corona

இதுகுறித்து மருத்துவ செயற்பாட்டாளரும் மருத்துவருமான காசியிடம் பேசினோம். " இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களில் 40% பேருக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கணிக்க முடியவில்லை. இதனால், கொரோனா சமூகப் பரவலாக மாறிவிட்டதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

`கொரோனா வார்டில் 7வது உயிரிழப்பு; 3 பேருக்கு நோய்த் தொற்று இல்லை!’ - கன்னியாகுமரி அப்டேட்

ஐசிஎம்ஆரின் முன்னாள் இயக்குநரும், தற்போது உலக சுகாதார மையத்தின் உறுப்பினராகவும் உள்ள மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், 'ஊரடங்கு மட்டும் நோயைத் தடுக்காது. ஊரடங்குடன், அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குப் பரிசோதனை மேற்கொள்வதும் அவசியம். அதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்று எங்கிருந்து வந்துள்ளது, அவர்களால் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அறிய முடியும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

டாக்டர் காசி
டாக்டர் காசி

பரிசோதனைகளை அதிக எண்ணிக்கையில் செய்யும்போதுதான், கொரோனா சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்று கண்டறிய முடியும். ஆக, ஐசிஎம்ஆர் கூறியிருக்கும் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே. தற்போது நிறைய பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல், ஊரடங்கை நீட்டிப்பதும் தேவையான ஒன்றுதான். அதற்காக, ஊரடங்கை அடுத்தடுத்து நீட்டித்துக்கொண்டே இருக்காமல், அடுத்த கட்டமாக, அதிக பாதிப்பு உள்ள பகுதிகளை மட்டும் தனிமைப்படுத்திவிட்டு, மற்ற பகுதிகளை ஊரடங்கிலிருந்து தளர்த்தலாம். விவசாயம், சிறு, குறு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் எனச் சிறிய அளவில் இயங்க ஆரம்பிக்கலாம். போக்குவரத்தும் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.

தற்போது நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பவர்களுக்கு, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னரே அது ஏற்பட்டிருக்க வேண்டும். ஆக, நாம் பரிசோதனைகளை அதிக எண்ணிக்கையில் மேற்கொண்டால் மட்டுமே சமூகப் பரவலில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைக் கண்டறிய முடியும்'' என்று கூறினார் டாக்டர் காசி.

Corona test
Corona test

டெல்லியில் உள்ள மத்திய அரசு ஆராய்ச்சியாளரான த.வி.வெங்கடேஷ்வரனுடன் இதுகுறித்துப் பேசுகையில், ''முதலில் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பரிசோதிக்கப்பட்டனர். தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்பு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இவை மூன்றுமே நோய்த் தடுப்புக்குத் தேவையான நடவடிக்கைகள்தான். அதேபோல், பரிசோதனை பரவலாக மேற்கொள்ளப்படுவதும் மிக அவசியம். ஊரடங்கும் பரிசோதனையும் இணையாக நடத்தப்படவேண்டியவை.

`செல்ஃபியால் துப்பு துலங்கிய பைக் திருட்டு' - கொலைவழக்கில் சிக்கிய சென்னைக் கல்லூரி மாணவர்

ஆரம்பகட்டத்தில், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும், அறிகுறிகளுடன் இருந்தவர்களுக்கும் மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 'ஆனால், அனைத்து மக்களுக்கும் பரிசோதனை செய்திருக்க வேண்டும்' என்ற வாதத்தில் அர்த்தமில்லை. பரிசோதனைக் கருவிகள் குறைவாக இருந்த முதல் கட்டத்தில், தேவை இருப்பவர்களுக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்தியதே சரி. அதுவே தற்போதைய சூழலில், பரிசோதனையைப் பரவலாக்க வேண்டும் என்பது சரியான காலகட்டத்தில் எடுக்கப்படும் அவசியமான நடவடிக்கையாக இருக்கும்.

த.வி.வெங்கடேஷ்வரன்
த.வி.வெங்கடேஷ்வரன்

ஊரடங்கு நீட்டிக்கப்படுவது ஒரு மருத்துவ நடவடிக்கை. ஊரடங்கை ஒரேடியாகத் தளர்த்தினால் அது பயனற்றுப் போய்விடும். ஆக, படிப்படியாக முறையாகச் செயல்பட வேண்டும். கேரளாவின் ஆராய்ச்சி முடிவுகளில், மூன்று வாரங்கள் ஒரு பகுதியில் புதிய தொற்று ஏற்படவில்லை என்றாலோ, அங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலோ, அந்தப் பகுதிக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளுடன் குறைந்த தூரப் பயணங்களைப் படிப்படியாக அனுமதிக்கலாம். நெடுந்தூரப் பயணங்கள், பெரிய அளவில் மக்கள் கூடுவது போன்றவற்றை அனுமதிக்க இது நேரமல்ல. அதற்குக் கால அவகாசம் தேவை.

Swab test
Swab test

நாம், 1918-ம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பேனிஷ் ஃபுளூவிலிருந்து பாடம் படிக்க வேண்டும். அப்போது, இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 30 கோடி. அதில் 1.7 கோடி பேர் அந்நோயால் இறந்துள்ளனர். உலக அளவில் ஐந்து கோடி பேர் இறந்தனர். தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி. ஆக, இம்மாதிரியான கொள்ளை நோய்களுக்குக் கட்டுப்பாடுகள், பரிசோதனைகள் எல்லாமே தீவிரமாகச் செயல்படுத்தப்படவேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து, மக்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்று கூறினார் வெங்கடேஷ்வரன் .

அடுத்த கட்டுரைக்கு