`பிடித்த வேலையில் சேர முடியாததால் ஏற்படும் மன அழுத்தம்’ - எப்படிச் சரிசெய்வது?' #NoMoreStress

நீங்கள் வேலைக்குச் சேர விரும்பும் நிறுவனத்தில் முதலில் வேலை காலியாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
எனக்குப் பிடித்த துறையில், பிரபலமான நிறுவனத்தில் வேலையில் சேர விரும்பினேன். ஆனால், பலமுறை முயன்றும் அந்த நிறுவனத்தில் வேலை கிடைக்கவில்லை. அது எனக்கு மன அழுத்தத்தைத் தருகிறது. அதிலிருந்து விடுபட என்ன செய்வது?' என்று அசோக் என்ற வாசகர் Mentalhealth@vikatan.com என்கிற மின்னஞ்சல் வழியாகக் கேட்டிருந்தார்.

வாசகரின் இந்தக் கேள்வியை மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்தின் முன் வைத்தோம்.
''ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். அதை நோக்கி முயல்வது இயல்பான ஒன்றுதான். பிடித்த வேலையில், பிடித்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர நினைப்பது இலக்கு என்றால், 'அதில் சேர என்ன தேவை?', 'கிடைக்காமல் போவதற்குத் தடையாக இருப்பது என்ன?' என்று முதலில் யோசிக்க வேண்டும். அதற்கான காரணிகளைக் கண்டறிந்து அதற்கேற்ப உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.
காரணிகள் எனும்போது உள்புறக் காரணிகள், வெளிப்புறக் காரணிகள் என இரண்டு வகைப்படுத்தலாம். வெளிப்புறக் காரணிகளைப் பொறுத்தவரை, நீங்கள் வேலைக்குச் சேர விரும்பும் நிறுவனத்தில் முதலில் வேலை காலியாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அங்கே வேலைக்கான வாய்ப்பு இருக்கிறது என்பது தெரியவந்தால் உங்கள் முயற்சியைத் தொடருங்கள்.

காலியாக இருக்கும் அந்தப் பணியிடத்துக்கு உங்களைப் போலவே பலர் முயற்சி செய்வார்கள். எனவே, அவர்களைவிட நீங்கள் எந்தவிதத்தில் தனித்துவமானவர், மற்றவர்களைத் தவிர்த்து உங்களைத் தேர்ந்தெடுக்குமளவுக்கு உங்களிடம் தனித்திறமை இருக்கிறதா என்பதையெல்லாம் சுயபரிசோதனை செய்து பாருங்கள். தொடர்ந்து முயற்சி செய்தும் கிடைக்கவில்லையே என விரக்தியடைவதற்குப் பதிலாக உங்கள் திறமையை மேம்படுத்திக்கொண்டால் நிச்சயம் நீங்கள் விரும்பும் இலக்கை விரைவில் அடைவீர்கள்'' என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.