Published:Updated:

``கொரோனா தடுப்பூசிக் கொள்கையில் வெளிப்படைத் தன்மை தேவை!” - பத்திரிகையாளர் கரண் தபார்

COVID-19 vaccine
COVID-19 vaccine ( AP Photo / Manish Swarup )

கோவிட் செயற்குழுவில் உள்ள நிபுணர்கள் 10 ஆண்டுகளுக்குக் குழுவில் நடக்கும் விவாதங்களை வெளியில் பேசமாட்டோம் என்று உறுதியளிக்க அரசால் வற்புறுத்தப்பட்டதாக கரண் தபார் தெரிவிக்கிறார்.

சமீபத்தில் `ஹிந்துஸ்தான் டைம்ஸ்' ஆங்கில நாளேட்டில் பத்திரிகையாளர் கரண் தபார் இந்தியாவின் தடுப்பூசிக் கொள்கையை விமர்சித்து கட்டுரையொன்றை எழுதியுள்ளார்.

இங்கிலாந்து அரசின் நிறுவனமான `பி.ஹெச்.இ (PHE- Public Health England)', அந்நாட்டில் பயன்படுத்தப்படும் கோவிட் தடுப்பூசிகளின் செயல்திறன், விளைவுகள் குறித்து வாராவாரம் தொடர்ந்து விரிவான அறிக்கைகளை வெளியிடுகிறது. சமீபத்திய அறிக்கையிலுள்ள தரவுகள்தான், கரண் தபார் இந்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையை விமர்சிக்கக் காரணம்.

அப்படி என்னதான் உள்ளது அந்த அறிக்கையில்? கரண் தபார் முன்வைக்கும் விமர்சனங்கள் என்ன?

பி.ஹெச்.இ வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிகுறிகள் கொண்ட கொரோனா நோய்த்தொற்று, நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது, இறப்பு, நோய்த்தொற்று ஏற்படுதல், தொற்றைக் கடத்துதல் ஆகியவற்றிலிருந்து, ஃபைசர் (Pfizer-BioNTech) மற்றும் ஆஸ்ட்ராஜெனிகா (Oxford-AstraZeneca) ஆகிய தடுப்பூசிகள் எந்த அளவுக்கு பாதுகாப்பை அளிக்கின்றன என்பது குறித்து தரவுகளுடன் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கரண் தபார்
கரண் தபார்
Screenshot from The Wire / Facebook

அறிகுறிகளைக் கொண்ட கொரோனா நோய்த் தொற்றைப் பொருத்தவரை, இரண்டு தடுப்பூசிகளுமே முதல் டோஸுக்குப் பிறகு, இந்தியாவில் அதிகம் பரவும் B.1.617.2 வகை வைரஸுக்கு எதிராக வெறும் 33% மட்டுமே செயல்திறன் கொண்டவையாக உள்ளன. எனவே, அதிகம் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இந்த முடிவுகள் சரியெனில், இந்தியாவின் தடுப்பூசிக் கொள்கையில் மாற்றம் தேவை என்கிறார் கரண் தபார்.

அதாவது, மே 13-ம் தேதியிலிருந்து தடுப்பூசிகளின் இரு டோஸ்களுக்கான கால இடைவெளியை அரசு 12 - 16 வாரங்களாக மாற்றியுள்ளது. ஒரு டோஸுக்குப் பிறகு வெறும் 33% மட்டுமே பாதுகாப்பு கிடைக்கும் என்பதால், பிரிட்டனில் உள்ளதுபோல குறைந்தது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளவர்களுக்காவது இரண்டு டோஸ்களுக்கு இடையிலான கால அளவைக் குறைக்க வேண்டும் என்கிறார் அவர்.

அதேபோல், B.1.617.2 வகை கொரோனா வைரஸைப் பொருத்தவரை, அறிகுறிகளுடன் கூடிய தொற்றில், இரு டோஸ்களுக்குப் பிறகு ஃபைசர் 88% செயல்திறன் கொண்டதாகவும், ஆஸ்ட்ராஜெனிகா வெறும் 60% செயல்திறன் கொண்டதாகவும் உள்ளது என்றும், அதனால், ஃபைசரை இந்தியாவில் விரைவாக அறிமுகப்படுத்த அரசு யோசிக்க வேண்டாமா என்றும் கரண் தபார் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆனால், இங்கிலாந்து அரசின் நிறுவனமான பி.ஹெச்.இ தொடர்ந்து, B.1.617.2 வகை வைரஸால் பாதிக்கப்பட்ட 2,934 பேரிடம் நடத்திய ஆய்வில், இரு டோஸ்களுக்குப் பிறகு ஆஸ்ட்ராஜெனிகா 80% செயல்திறன் கொண்டதாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இரு டோஸ்களுக்குப் பிறகு ஃபைசர் மற்றும் ஆஸ்ட்ராஜெனிகா ஆகியவற்றுக்கிடையில் வெறும் 8% வித்தியாசம்தான் உள்ளது.

A health worker prepares a Pfizer coronavirus vaccine
A health worker prepares a Pfizer coronavirus vaccine
AP Photo/Alvaro Barrientos

அமெரிக்காவின் ஃபைசர் தடுப்பூசியைப் பொருத்தவரை, பாதிப்புகளுக்கு அந்த நிறுவனம் பொறுப்பில்லை, அரசே சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளும் (indemnity) என்று இந்திய அரசு ஒப்புக்கொண்டால், உடனடியாகக் கிட்டத்தட்ட 5 - 6 கோடி தடுப்பூசிகளை இந்தியாவிற்கு விற்க அந்த நிறுவனம் தயாராக உள்ளது எனவும், அரசு ஓரளவிற்காகவது இறங்கிவரும் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இறப்பு, பக்கவாதம் உள்ளிட்ட தீவிர பக்கவிளைவுகளைத் தவிர்த்து, பிற பக்கவிளைவுகளுக்கு அரசு பொறுப்பு எடுத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிக செயல்திறன் கொண்டுள்ளதால், மற்ற நாடுகளைப்போல இந்தியாவும் ஃபைசரின் வேண்டுகோளை அரசு ஏற்கலாம் என்கிறார் கரண் தபார்.

மேலும், அவர் சில முக்கிய கேள்விகளை முன் வைக்கிறார். அதாவது, `இந்தியாவில் இதுவரை முதல் டோஸாக கிட்டத்தட்ட 20 கோடி தடுப்பூசிகளும், இரண்டாவது டோஸாக கிட்டத்தட்ட 5 கோடி தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. இதில் 90%, `கோவிஷீல்ட்' என்ற பெயரில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி. இது B.1.617.2 வகை கொரோனா வைரஸை எதிர்கொள்வதில் எந்த அளவுக்கு செயல்திறன் கொண்டதாக உள்ளது என நாமல்லவா ஆய்வுகள் மேற்கொண்டு உலகுக்கு அறிவித்திருக்க வேண்டும்? அரசோ, நம்முடைய தடுப்பூசி மற்றும் வைராலஜி நிபுணர்களோ இது குறித்து ஏன் அக்கறை காட்டவில்லை என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கோவிட்-19 தடுப்பூசி
கோவிட்-19 தடுப்பூசி

இறுதியாக, கோவின் செயலி வடிவமைக்கப்படும்போது, தடுப்பூசிக்கும், நோய்த்தொற்றுக்கும் உள்ள தொடர்பையும் கண்காணிக்க வேண்டும் என்று நிபுணர்கள் சொன்னதை அரசு புறந்தள்ளியது எனவும், இதனால் ஆஸ்ட்ராஜெனிகாவின் செயல்திறனை நம்மால் கண்காணிக்க முடியவில்லை என்றும், கோவிட் செயற்குழுவில் உள்ள நிபுணர்கள் 10 ஆண்டுகளுக்குக் குழுவில் நடக்கும் விவாதங்களை வெளியில் பேசமாட்டோம் என்று உறுதியளிக்க வற்புறுத்தப்பட்டதாகவும் கரண் தபார் தெரிவிக்கிறார்.

`` `அமெரிக்காவின் Center for Disease Control மற்றும் பிரிட்டனின் Joint Committee on Vaccination and Immunisation போன்ற தடுப்பூசிகளைக் கண்காணிக்கும் அரசு அமைப்புகள், தங்கள் விவாதங்களைப் பொதுவெளியில் வைக்கும்போது, இந்திய அரசு ஏன் நம் நிபுணர்களை 10 வருடங்கள் மௌனம் காக்கச் சொல்கிறது? அவர்கள் என்ன தேச ரகசியங்களையா விவாதிக்கிறார்கள்? மக்கள் அவசியம் தெரிந்துகொள்ள உரிமையுள்ள விஷயங்களையல்லவா விவாதிக்கிறார்கள்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார் கரண் தபார்.

அவரின் கேள்விகள் நியாயம்தானே? அரசு என்ன செய்யப் போகிறது?

அடுத்த கட்டுரைக்கு