Published:Updated:

`ஊரடங்கில் அதிகரித்த ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனி, மது, புகையிலை நுகர்வு!’ -கனடா ஆய்வில் அதிர்ச்சி

கனடா
கனடா ( Ryan Remiorz )

கனடா மக்கள், ஆரோக்கியத்துக்கு எதிரான நொறுக்குத் தீனிகளை (Junk Foods) அதிக அளவு உணவாக எடுத்துக்கொள்வதாகவும், அவர்களின் மது மற்றும் புகைப்பழக்கம் வழக்கத்தைவிட அதிகரித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

கனடாவில், கொரோனா வைரஸின் காரணமாக அசாதாரண சுகாதாரச் சூழல் நிலவிவரும் வேளையில், அந்நாட்டு அரசாங்கம் நடத்திய ஆய்வு ஒன்று, கனடா மக்கள் ஆரோக்கியத்துக்கு எதிரான நொறுக்குத் தீனிகளை (Junk Foods) அதிக அளவு உணவாக எடுத்துக்கொள்வதாகவும், அவர்களின் மது மற்றும் புகைப்பழக்கம் வழக்கத்தைவிட அதிகரித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

நொறுக்குத் தீனிகள்
நொறுக்குத் தீனிகள்

கோவிட்-19 கொரோனா வைரஸுக்கு எதிராக, சுமார் 75 நாள்களாக கனடா முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் அவர்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களில் முக்கியமானது, பொழுதுபோக்குக்கு உண்ணும் ஆரோக்கியத்துக்கு எதிரான நொறுக்குத் தீனிகள், மற்றும் மது, புகைப்பழக்கம். இவை யாவும் வழக்கத்தைவிட இந்த லாக்டௌனில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கனடாவின் தலைமைப் பொது சுகாதார அதிகாரி தெரசா டாம், நாட்டு மக்களை ஆரோக்கியமான உணவுத் தேர்வுக்குத் திரும்புமாறு வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒரு மாத காலத்தில், ஆரோக்கியமில்லாத நொறுக்குத் தீனிகள் மற்றும் இனிப்பு வகைகளின் நுகர்வு கணிசமான அளவு அதிகரித்துள்ளது குறித்து, 'ஸ்டேட்கான்' என்ற அமைப்பு, புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 3-ம் தேதிக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளோடு ஒப்பிடும்போது, ஆரோக்கியமில்லாத நொறுக்குத் தீனிகளை உண்பவர்கள் இப்போது 35% அதிகரித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இது மது, புகைப் பழக்கத்துக்கும் பொருந்தும். ஐந்து கனடா மக்களில் ஒருவர் என்ற விகிதத்தில் அளவுக்கு அதிகமான மது அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும், புகைப்பழக்கம் 3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்று தெரசா டாம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மேலும் அந்த ஆய்வு, கனடாவில் ஐந்தில் ஒருவர் தன் மிதமான உணர்வுகளைக் கடுமையான பதற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளதாகக் கண்டறிந்துள்ளதோடு, அவர்களின் வருத்தத்துக்கான காரணமாக நிதி நெருக்கடிகளும் சந்தை சிக்கல்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் தொடர்பான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கனடா மக்கள் விழிப்புடனே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில், தற்போதுவரை கொரோனா வைரஸால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிப்படைந்திருப்பதும், ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு