Election bannerElection banner
Published:Updated:

96 வயது மூதாட்டிக்கு குடல் இறக்க நோய் அறுவை சிகிச்சை... சாதித்த கரூர் அரசு மருத்துவமனை!

மருத்துவர்களுடன் செல்லாத்தாள்
மருத்துவர்களுடன் செல்லாத்தாள் ( நா.ராஜமுருகன் )

அறுவை சிகிச்சைக்குப் பின், செல்லாத்தாளுக்கு தட்டை அணுக்கள் பாதிப்பு, அடிக்கடி சர்க்கரை அளவு குறைதல், தாது உப்புகள் குறைதல் ஆகிய பிரச்னைகள் சரி செய்யப்பட்டன.

மிகவும் சிக்கலான குடல் இறக்க நோயால் பாதிக்கப்பட்ட 96 வயது மூதாட்டிக்கு, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்துள்ள நிகழ்வு, மூதாட்டியின் உறவினர்களை நெகிழ வைத்திருக்கிறது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ரோடு, மூலனூரைச் சேர்ந்தவர் நடராஜன். இவரின் மனைவி செல்லாத்தாள். இவருக்கு 96 வயதாகிறது. இவருக்கு திடீரென உடம்புக்கு முடியாமல் போயிருக்கிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலையில் இவருக்கு உடல்நிலை மோசமானது. அவரை கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது, செல்லாத்தாள் வலது தொடை பகுதியில் ஏற்பட்ட அரிய வகை குடல் இறக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.

மருத்துவர்களுடன் செல்லாத்தாள்
மருத்துவர்களுடன் செல்லாத்தாள்
நா.ராஜமுருகன்

மேலும், செல்லாத்தாள் வயிற்று வலி மற்றும் வாந்தியுடன் அனுமதிக்கப்பட்டதால், குடல் இறக்கத்தில் உள்வாங்கிய குடல் பகுதியானது அழுகிய தன்மைக்குரிய அறிகுறிகளுடன் தென்பட்டது. இந்நிலையில், அவருக்கு 2 மணி நேரத்தில் அறுவை சிகிச்சைக்குரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு, அறுவை சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வகையான அறுவை சிகிச்சையை வயதானவருக்குச் செய்யும்போது, மயக்க மருந்து கொடுப்பதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அறுவைசிகிச்சை பாதிப்புகள் மிக அதிகம். இருந்தாலும், செல்லாத்தாளின் உறவினர்களின் அனுமதியோடு, மயக்க மருந்து மற்றும் அறுவை சிகிச்சையை சவாலாக எடுத்துக்கொண்டு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை உடனடியாகத் தொடங்கினர். அறுவை சிகிச்சையின்போது, செல்லாத்தாளின் அழுகிய குடல் பகுதி நீக்கப்பட்டது. அதன்பின், வெட்டிய சிறுகுடல் பகுதி இரண்டும் இணைக்கப்பட்டு, குடல் இறக்கம் பிரச்னை சரி செய்யப்பட்டது.

கரூர்: ஆம்புலன்ஸிலேயே பெண்ணுக்குப் பிரசவம்... 108 உதவியாளருக்குக் குவியும் பாராட்டுகள்!

அறுவைசிகிச்சைக்குப் பின், செல்லாத்தாளுக்கு தட்டை அணுக்கள் பாதிப்பு, அடிக்கடி சர்க்கரை அளவு குறைதல், தாது உப்பு குறைதல் ஆகிய பிரச்னைகள் அவ்வப்போது சரி செய்யப்பட்டன. பின்னர், சிகிச்சை மூலம் அவர் முழுவதும் குணமாகி, தற்போது உணவு அருந்தியதோடு, இல்லத்துக்கும் திரும்பிவிட்டார்.

இதுகுறித்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் அசோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பெரும்பாலும் வயதானவர்களுக்கு குடல் இறக்கப் பிரச்னைக்காக அறுவை சிகிச்சை செய்யும்போது, சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு. இருந்தாலும் ரிஸ்க் எடுத்து, செல்லாத்தாளுக்கு ஏற்பட்ட குடல் இறக்க பாதிப்பை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் குணமாக்கியுள்ளோம்.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
நா.ராஜமுருகன்

இந்த அறுவைசிகிச்சையில் டாக்டர்கள் தெய்வநாதன், ஏஞ்சல் வெல்லூட், பத்மா, கார்த்திகேயன் ஆகியோர் ஈடுபட்டனர். அவர்கள் சிறப்பாக அறுவைசிகிச்சை செய்து, 96 வயது மூதாட்டியைக் காப்பாற்றியுள்ளனர். இனி அவர் எந்த தொந்தரவும் இல்லாமல், நிம்மதியாக வாழலாம்" என்றார்.

அரசு மருத்துவர்களின் இதுபோன்ற சாதனைகளும் அக்கறையும்தான், அரசு மருத்துவமனை குறித்த மக்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு