Published:Updated:

`புஷ்பம்போல தடுப்பூசி போட்ட புஷ்பலதா!' - 7.5 மணி நேரத்தில் 893 பேருக்கு தடுப்பூசி போட்ட நர்ஸ்

நர்ஸ் புஷ்பலதாவை பாராட்டும் அமைச்சர் வீணா ஜார்ஜ்
நர்ஸ் புஷ்பலதாவை பாராட்டும் அமைச்சர் வீணா ஜார்ஜ்

``பெயர் தெரியாத, முகம் அறியாத சுகாதாரப் பணியாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள்தான் நம் சிஸ்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்கிறார்கள்" என கொரோனா தடுப்பூசி போட்ட நர்ஸ் புஷ்பலதாவை அமைச்சர் வீணா ஜார்ஜ் பாராட்டினார்.

கேரள மாநிலம் திருப்பூணித்துறையைச் சேர்ந்தவர் புஷ்பலதா. செங்கன்னூர் மாவட்டத் தலைமை மருத்துவமனையில் ஜூனியர் பப்ளிக் ஹெல்த் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். இவர் செங்கன்னூர் மருத்துவமனைக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணிக்குச் சென்றுள்ளார். காலை முதலே கூட்டமாக இருக்க, இடையில் உணவு சாப்பிடவும், பிற தேவைகளுக்காகவும் அரை மணி நேரம் போக மீதியுள்ள நேரம் முழுவதும் தடுப்பூசி போட்டுள்ளார். மாலை 5.30 மணிக்கு தடுப்பூசி போட்ட கணக்கை பார்த்தபோது, மொத்தம் 893 பேருக்கு அவர் தடுப்பூசி போட்டது தெரியவந்தது.

கொரோனா தடுப்பூசி போட்டு வைரலான நர்ஸ் புஷ்பலதாவுக்கு பொன்னாடை போர்த்திய அமைச்சர் வீணா ஜார்ஜ்
கொரோனா தடுப்பூசி போட்டு வைரலான நர்ஸ் புஷ்பலதாவுக்கு பொன்னாடை போர்த்திய அமைச்சர் வீணா ஜார்ஜ்
மக்கள் தொகையில் சரி பாதி பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி; அசத்தும் கேரளா!

இதுபற்றி புஷ்பலதா தன் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கூறியிருக்கிறார். அதன் பிறகுதான், அவர் ஏழரை மணி நேரத்தில் 893 பேருக்கு தடுப்பூசி போட்டதும், கேரள மாநிலத்தில் இதற்கு முன்பு இதுபோன்று யாரும் ஒரே நாளில் இத்தனை எண்ணிக்கையில் ஊசி போட்டதில்லை என்றும் தெரியவந்தது. இந்தத் தகவலை ஜெ.பி.ஹெச்.என் என்ற செவிலியர் சங்கத்தினர் வாட்ஸ்அப்பில் பகிர்ந்தனர். இதையடுத்து கேரளமே புஷ்பலதாவை கொண்டாடியது. `புஷ்பம் போல தடுப்பூசி போட்ட புஷ்பலதா' எனப் புகழப்பட்டார் நர்ஸ் புஷ்பலதா.

நர்ஸ் புஷ்பலதாவின் கணவர் கில்பர்ட் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகு புஷ்பலதாவை நர்ஸிங் படிக்க வைத்திருக்கிறார் கில்பர்ட்.

புஷ்பலதாவுக்கு 40 வயதில் நர்ஸ் பணி கிடைத்தது. வரும் நவம்பர் மாதம் அவர் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. புஷ்பலதா மேடைப் பாடகராகவும் உள்ளார். புஷ்பலதா குறித்த தகவல் வைரலாகப் பரவியதை அடுத்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேரில் சென்று புஷ்பலதாவுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தார்.

நர்ஸ் புஷ்பலதா
நர்ஸ் புஷ்பலதா

செங்கன்னூர் மாவட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்ற அமைச்சர் வீணா ஜார்ஜ் அங்கிருந்த நர்ஸ் புஷ்பலதாவிடம் சிறிது நேரம் உரையாடினார். பின்னர் அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், `` பெயர் தெரியாத, முகம் அறியாத சுகாதாரப் பணியாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள்தான் நம் சிஸ்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்கிறார்கள்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

``மிகவும் சிரமப்பட்டு, போராடிதான் இந்த வேலை கிடைத்தது. வேலை கிடைத்த பிறகு அதை ஆத்மார்த்தமாக தொடர்ந்து செய்கிறேன். தடுப்பூசி போடும் பணிகளுக்கு இடையே எனது வார்டு பணிகளையும் முடக்கம் இல்லாமல் செய்துவருகிறேன். வேலை கிடைப்பதற்கு மட்டுமல்ல, வேலை செய்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். டீம் ஒர்க்தான் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது" என நர்ஸ் புஷ்பலதா அமைச்சரிடம் தெரிவித்தார்.

``உடல்களை நதிகளில் வீசி எறியவில்லை"
கொரோனா விமர்சனங்களுக்குக் காட்டமாக பதிலளித்த பினராயி விஜயன்!

தொடர்ந்து, அமைச்சர் வீணா ஜார்ஜ் கேட்டுக்கொண்டதை அடுத்து ஒரு பாடல் பாடி கிளாப்ஸை அள்ளினார் நர்ஸ் புஷ்பலதா.

அடுத்த கட்டுரைக்கு