Published:Updated:

`நாடு திரும்பிய கேரளா மாணவருக்கு கொரோனா பாதிப்பு!' -அதிகாரபூர்வமாக அறிவித்த மத்திய சுகாதாரத்துறை

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் ( pixabay )

சீனாவின் வுகான் பல்கலைக்கழகத்திலிருந்து திரும்பிய கேரளா மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்பட்டு வருகிற கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் ஒருவருக்குப் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது. கேரள மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தற்போது சீனாவை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் சீனாவைக் கடந்தும் பல நாடுகளில் பரவிவரும் நிலையில் தங்கள் மக்களை இதிலிருந்து காப்பாற்ற ஒவ்வொரு நாடும் தீவிரமாகப் போராடி வருகிறது. மேலும், கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிகம் வாய்ப்புள்ள 30 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று பிரிட்டன் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இந்தியாவின் அஸ்ஸாம், டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் சீனாவில் வுகான் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தனர். இந்த மாணவர்களும் சீனாவில் வசித்து வந்த இந்திய மக்களும் கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்நிலையில், இந்தியாவில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு வந்த நிலையில் சீனாவிலிருந்து கேரளா திரும்பிய 806 நபர்களில் 10 பேரை மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கண்காணித்து வருவதாகக் கேரள சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.

`கொரோனா வைரஸ் போராட்டத்தில் முக்கிய திருப்புமுனை!'- சாதித்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

இதில் சீனாவின் வுகான் பல்கலைக்கழகத்திலிருந்து திரும்பிய கேரளா மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தத் தகவலை மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தனது இணையத்தின் வாயிலாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Pixabay

கிட்டத்தட்ட தாய்லாந்தில் 7 பேருக்கும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூரில் தலா 4 பேருக்கும் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, மலேசியா, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் தலா 3 பேருக்கும் வியட்நாமில் இருவருக்கும் நேபாளத்தில் ஒரு நபருக்கும் எனச் சீனா தவிர, பிற உலக நாடுகளில் 33 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின் செல்ல