Published:Updated:

கண் பாதுகாப்பில் நீங்கள் செய்யும் தவறுகளை அறிவீர்களா?|கண்கள் பத்திரம்- 29

சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க சன் கிளாஸ் அணிவது அவசியம். புறஊதாக் கதிர்களின் தாக்கத்தால் இளம் வயதிலேயே கண்புரை, மாகுலர் சிதைவு போன்றவவை உண்டாகலாம்.

கண் பாதுகாப்பில் நீங்கள் செய்யும் தவறுகளை அறிவீர்களா?|கண்கள் பத்திரம்- 29

சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க சன் கிளாஸ் அணிவது அவசியம். புறஊதாக் கதிர்களின் தாக்கத்தால் இளம் வயதிலேயே கண்புரை, மாகுலர் சிதைவு போன்றவவை உண்டாகலாம்.

Published:Updated:

கண்களைப் பாதுகாப்பதில் ஒவ்வொருவருக்கும் அதீத கவனம் தேவை. ஆனால் பலரும் சாதாரண அறிகுறிகள் என அலட்சியப்படுத்தும் பல விஷயங்கள் பிற்காலத்தில் பார்வையிழப்பு வரை வழிவகுப்பதை அறிவதில்லை. அப்படி பலரும் செய்யும் அலட்சியம் பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

அறிகுறிகளை அலட்சியம் செய்வது...

கண்களில் அரிப்பு அல்லது எரிச்சல், சிவந்துபோவது, கண்ணீர் வடிவது போன்றவை ஒவ்வாமைக்கான அறிகுறிகளாக இருக்கலாம். கண்களில் கசிவு, வலி, வெளிச்சத்தைப் பார்க்கும்போது கூச்சம், மங்கலான பார்வை போன்ற எந்த அசாதாரண அறிகுறி இருந்தாலும், உடனடியாக உங்கள் கண் மருத்துவரைப் பார்ப்பது முக்கியம். தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கண்கள் சேதமாகலாம். உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நீங்கள் அந்தத் தொற்றைப் பரப்பலாம்.

வசுமதி வேதாந்தம்
வசுமதி வேதாந்தம்

கண்களின் காயங்களை அலட்சியப்படுத்துவது

கண்களில் சிறு காயம் ஏற்பட்டாலும் அலட்சியப்படுத்தாமல் உடனே கண் மருத்துவரைப் பார்க்கவும். பார்வையில் தடுமாற்றம், கண்களில் மற்றும் கண்களைச் சுற்றி வலி, கண்களைத் திறக்க முடியாத நிலை, கண்களில் ரத்தம், கண்களை அசைக்க முடியாத நிலை, கருவிழியில் வித்தியாசம் போன்றவற்றை உணர்ந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

கண்களைத் தேய்ப்பது

அடிக்கடி உங்கள் கண்களைத் தேய்ப்பதால் கண்களில் எரிச்சல் ஏற்படும், ரத்த நாளங்களைச் சேதப்படுத்தும். உங்கள் கைகள் கண்களைத் தேய்ப்பதன் மூலம், கிருமித்தொற்றுக்கு இலக்காகும். எனவே அடிக்கடி கண்களைத் தொடாமலிருப்பது அவசியம். அப்படியே தொட வேண்டும் என்றால் உங்கள் கைகள் சுத்தமாக இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

கான்டாக்ட் லென்ஸ் பராமரிப்பைத் தவற விடுதல்

கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவோர், அவற்றை தண்ணீர், உமிழ்நீர் போன்றவற்றில் சுத்தப்படுத்தக்கூடாது. அவற்றுக்கான பிரத்யேக திரவத்தில்தான் சுத்தப்படுத்த வேண்டும். இரவிலும், தூங்கும்போதும் லென்ஸை அகற்றிவிட வேண்டும். குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் அவற்றை உபயோகிக்கக்கூடாது.

ஸ்கிரீன் டைமில் எல்லை மீறுதல்

கம்ப்யூட்டர், டேப்லட், மொபைல் போன்றவற்றில் அதிக நேரத்தைச் செலவிடுவது கண் தசைகளை பலவீனமாக்கும். கண்களைக் களைப்படையச் செய்து, தலைவலிக்கும் காரணமாகும். ஏற்கெனவே முந்தைய அத்தியாயங்களில் பார்த்த 20-20-20 விதிமுறையைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வோர் 20 நிமிடங்களுக்கொரு முறை, 20 அடி தூரத்திலுள்ள காட்சியை 20 நொடிகளுக்குப் பார்ப்பதுதான் இந்த விதி. கண்களை இமைக்க மறக்கக்கூடாது. அப்போதுதான் கண்கள் வறண்டு போகாமலிருக்கும். கம்ப்யூட்டருக்கு ஆன்டிக்ளேர் பாதுகாப்புத்திரை பொருத்துவதும் உதவும்.

சன் கிளாஸ் அணியத் தவறுவது

சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க சன் கிளாஸ் அணிவது அவசியம். புறஊதாக் கதிர்களின் தாக்கத்தால் இளம் வயதிலேயே கண்புரை, மாகுலர் சிதைவு போன்றவவை உண்டாகலாம்.

eye glasses
eye glasses

கான்டாக்ட் லென்ஸும் வெந்நீர்க் குளியலும்

குளிர் இரவுகளிலும், மழைநாள்களிலும், அதீத களைப்புக்குப் பிறகும் சூடான குளியல் போடுவது இதமாக இருக்கும்தான். ஆனால் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கமுள்ளவர்கள், லென்ஸை அகற்றாமல் வெந்நீர்க் குளியல் போடுவது ஆபத்தானது. தண்ணீரில் கிருமிகள் கலந்து, தொற்றுக்கு வழிவகுக்கும். எனவே குளிக்கும் முன் உங்கள் லென்ஸை அகற்றிவிடுங்கள்.

ஐ மேக்கப்பை நீக்காமலிருப்பது

மஸ்காரா, ஐலைனர் அல்லது ஐ ஷேடோ என கண்களுக்கு எந்த மேக்கப் உபயோகித்தாலும், இரவு தூங்கச் செல்வதற்கு முன் அவற்றை முழுமையாக அகற்றிவிட வேண்டும். அப்படி அகற்றாத பட்சத்தில் அதில் எஞ்சியிருக்கும் துகள்கள் உங்கள் கண்களில் விழுந்து தொற்றுக்கு வழிவகுக்கும். உங்கள் கண்கள் சிவந்து வலிக்க ஆரம்பித்தால், உடனடியாக கண் மருத்துவரை அணுகவும்.

பாதுகாப்புக் கண்ணாடிகள் அணியாதது

ஆபத்தான வேலைகளைச் செய்யும்போதும், விளையாடும்போதும் கண்களில் அடிபடுவதையும் காயங்கள் ஏற்படுவதையும் தடுக்க சரியான பாதுகாப்பு முக்கியமானது. அதற்கேற்ப பாதுகாப்பு கண்ணாடிகள் அல்லது பாதுகாப்பு கவசம் அணிவது உங்கள் கண்களைக் காப்பாற்றும்.

குடும்ப பின்னணியைத் தெரிந்துகொள்ளாமலிருப்பது

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது கண் நோய்கள் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்களும் குறிப்பிட்ட இடைவெளியில் கண் மருத்துவரை அணுகி, கண்களைப் பரிசோதித்து, பிரச்னை இருந்தால் உடனே சிகிச்சை பெற வேண்டும். உதாரணத்துக்கு கிளாக்கோமா மற்றும் மாகுலர் சிதைவு என இரண்டு பாதிப்புகளும் மரபணுக்களுடன் தொடர்புடையவை, பார்வையிழப்புக்கு காரணமாகும் என்பதால் குடும்பத்தில் யாருக்காவது இவை இருக்கும் பட்சத்தில், மற்றவர்களும் முறையான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

eye glasses
eye glasses

கண்ணாடி அணிவதைத் தவிர்ப்பது

வயதுக்கேற்ப பார்வைத்திறன் மாறத் தொடங்கும். அந்த மாற்றங்களை அலட்சியப்படுத்தாமல் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது முக்கியம். எப்போதோ பல வருடங்களுக்கு முன் மருத்துவர் பரிந்துரைத்த அதே பவரில் கண்ணாடியை தொடர்ந்து அணிவது சரியானதல்ல. வயதுக்கேற்ப, வருடத்துக்கொரு முறை கண் பரிசோதனை மேற்கொண்டு, பவரின் ஏற்ற, இறக்கங்களுக்கேற்ப கண்ணாடியை மாற்ற வேண்டும்.

புகைப்பழக்கம்

இந்தப் பழக்கம் உங்கள் உடலின் மற்ற பகுதிகளைப் போலவே உங்கள் கண்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். தவிர, புகைப்பழக்கத்தால் கண்புரை உண்டாகலாம். பார்வை நரம்புகள் சேதமாகலாம். கண்களின் மாகுலா பகுதியில் உள்ள செல்கள் சிதையலாம். இவை அனைத்தும் பார்வை இழப்புக்கும் வழிவகுக்கும்.

- பார்ப்போம்

- ராஜலட்சுமி

பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.