Published:Updated:

`கக்கூஸ் படை’ நோய்க்குக் காரணம் சுகாதாரமற்ற கழிப்பறைகள்! #WorldToiletDay

சிறுநீர் கழிக்க அவசரம்?
சிறுநீர் கழிக்க அவசரம்?

அரசாங்கமும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மக்களுக்கும் கழிவறை குறித்த விழிப்புணர்வு இல்லை. கணிப்பொறித்துறையில் வானம்தொட்ட நம் ஊரில்தான் கழிப்பறை இல்லாத இழிநிலை.

``இந்த நாட்டுல வாழ்றதுதான் கஷ்டம்னா, பேல்றதும்தான் கஷ்டம்னு இப்பத்தான் தெரியுது'' என்ற ஒரு வசனம் `ஜோக்கர்' திரைப்படத்தில் இடம்பெறும். அந்தப் படம் வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அதே நிலைதான் நீடிக்கிறது. கேட்டால், 95 மில்லியன் டாய்லெட்டுகள் கட்டப்பட்டுள்ளன என்று கூறுகிறார்கள். சரி... இப்போ இதைப்பத்தி என்ன பேச்சு? காரணம் இருக்கிறது.

கழிப்பறைகளின் லட்சணம்
கழிப்பறைகளின் லட்சணம்

இன்று உலக டாய்லெட் தினமாக அனுசரிக்கப்படுகிறது. சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த ஒரு மேல்நாட்டு அறிஞர் இங்குள்ள மக்கள் திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழிப்பதைப் பார்த்துவிட்டு, `இந்தியா இஸ் ஏ வெரி பிக் டாய்லெட்' என்று சொல்லிவிட்டுப் போனார். இதைப் போக்குவதற்காக சுதந்திர இந்தியாவில் இன்றுவரை எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக குக்கிராமம் தொடங்கி பெருநகரம் வரை 9.5 கோடி கழிப்பறைகள் இந்தியா முழுவதும் இதுவரை கட்டப்பட்டிருக்கின்றன என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. எல்லா வீடுகளிலும் கழிவறைகள் இருக்கின்றன. தவிர கிராமத்துக்கென பொதுக் கழிப்பறைகளும் இருக்கின்றன. அவை எல்லாம் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கழிப்பறைகளின் அவல நிலை
கழிப்பறைகளின் அவல நிலை

ஆனால் சென்னையில்..? பணி நிமித்தமாக வருகிறவர்கள், அவசரத்துக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. குறிப்பாக சென்னை, தாம்பரத்திலிருந்து பாரிமுனைவரை ஒருவர் பயணிக்கிறார் என்றால் அவர் பயன்படுத்த, பராமரிக்கப்பட்ட பொதுக்கழிப்பறை என்பது எந்த ஓர் இடத்திலும் இல்லை என்பதே உண்மை.

போதாக்குறைக்கு `சில்வர் அலுமினியக் கழிப்பறைப் பெட்டிகள்' திடீர் திடீரென முளைக்கின்றன. அதை அந்தப் பகுதி கவுன்சிலரோ எம்.எல்.ஏவோ அல்லது அமைச்சரோ திறந்து வைத்துவிட்டுச் சென்றதுடன் சரி. இரண்டு நாள்கள் மட்டுமே நன்றாக இருக்கும். ஒரு வாரம் கழித்துப் பார்த்தால், பல் இளிக்கத் தொடங்கிவிடும். முறையாகப் பராமரிக்கப்படாமல், கழிவுகள் சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசும் நிலை. இரவு நேரத்தில் `குடிமகன்கள்' உடைத்துப் போடும் மது புட்டிகள். உள்ளே போகமுடியாமல் அவசரத்துக்கு சிறுநீர் கழிப்பவர்கள், அந்தப் பகுதியைச் சுற்றி சகதிக் காடாக ஆக்கிவிடுவார்கள். மனிதர்கள் பயன்படுத்த முடியாமல் போகும்.

அண்ணா சாலை
அண்ணா சாலை

பலரும், இங்கு சிறுநீர் கழித்து நோயை விலைக்கு வாங்குவதா என கடந்து போய்விடுவார்கள். அவ்வப்போது பெய்யும் மழையில் சாலையில் இந்தக் கழிவுகள் கலந்து ஓடி, உடைந்து கிடக்கும் குடிநீர்க் குழாய்களில் கலக்கும் அவலமும் அரங்கேறுவதுண்டு.

அரசாங்கமும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மக்களுக்கும் கழிவறை குறித்த விழிப்புணர்வு இல்லை. கணிப்பொறித்துறையில் வானம்தொட்ட நம் ஊரில்தான் கழிப்பறை இல்லாத இழிநிலை. அந்தக் காலத்தில் நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்ட கழிப்பறைகள் பொதுமக்களுக்கும், பாதசாரிகளுக்கும் சிறுவியாபாரிகளுக்கும், கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் பெரிய அளவில் பயன் தரும்.

கழிப்பறைகளின்
கழிப்பறைகளின்

இன்றைக்கு மூன்றில் ஒருவர் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இப்படி இருக்கக்கூடிய நிலையில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால், ஒரு மனிதன் மக்கள் நிரம்பியிருக்கும் பகுதியில் ஒதுங்குவதற்கு இடம் இல்லாமல், அங்கும் இங்கும் அலைந்து திரிந்து, ஏதோ ஒரு சந்து முனையில் அல்லது கண்ணாடி பாட்டில்கள் உடைந்து கிடக்கும் டிரான்ஸ்ஃபார்மரின் காலடியில் சிறுநீர் கழித்துவிட்டு, மிகுந்த பயத்தோடுதான் வரவேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால், ஏதாவது ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர்.

சங்கடம் உணர்பவர்கள், 30 ரூபாய் கொடுத்து ஒரு ஹோட்டலில் காபி சாப்பிடப்போய், அங்குள்ள ரெஸ்ட் ரூமை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

நவீன கட்டண கழிப்பிடம்
நவீன கட்டண கழிப்பிடம்

பெரிய பெரிய வீடுகள், பெரிய பெரிய அப்பார்ட்மென்ட்கள் இவையெல்லாம் இன்று உருவாகிவிட்டன. ஆனால், அந்த அப்பார்ட்மென்டுக்கு உணவு கொண்டுவரும் ஒரு ஸ்விகி பணியாளரோ அல்லது கொரியர் கொண்டுபோய் கொடுப்பவரோ சிறுநீரை அடக்கி வைத்துக்கொண்டு திரும்பிவர வேண்டிய நிலையைத்தான் பார்க்கமுடிகிறது. கீழ்த்தளத்தில் இருக்கும் ஒற்றை டாய்லெட்டை பெரிய பூட்டு போட்டு பூட்டி சாவியை கையில் வைத்துக்கொள்வார் அதன் வாட்ச்மேன். அவரிடம் கேட்டால், `வெளிநபர்களுக்கு அனுமதி கிடையாது' என்கிற பதில்தான் வரும். அப்படி ஒரு மனிதாபிமானம். இந்தளவு மனித மனங்கள் இறுகிப்போன ஒரு நிலை ஏன் என்ற கேள்வி நம் மனத்தில் எழாமல் இல்லை.

சிறுநீரையும் மலத்தையும் அடக்குவதால் என்னென்ன உடற்கேடுகள் வரும் என்பது பற்றி ஆயுர்வேத மருத்துவர் ஆர். பாலமுருகனிடம் கேட்டோம்.

``சிறுநீரையும் மலத்தையும் அடக்குவதில் பெரியவர்களைவிட பணிக்குச் செல்லும் பெண்கள், கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், மாணவிகளுக்குத்தான் அதிக அவஸ்தை ஏற்படுகிறது. சிறுநீரை, மலத்தை அடக்கி வைப்பது மிகுந்த உடல் உபாதைகளை உருவாக்கக்கூடியது. சிறுநீரை அடக்கினால் சிறுநீரகக் கல் ஏற்படும் வாய்ப்பு அதிகம். மலத்தை அடக்கினால், தலைபாரம், தலைவலி போன்றவை ஏற்படும். மனிதர்கள், தங்களுக்கு ஏற்படும் உபாதைகளில் கோபம், பொறாமை, காமம் போன்றவற்றைத் தடுக்கலாம். இருமல், ஏப்பம், தும்மல், வாயு பிரிதல், தாகம், பசி, தூக்கம், சிறுநீர், மலம் கழித்தல் போன்ற உபாதைகளைத் தடுக்கக் கூடாது. அவற்றை நாம் தடுத்தால் இதய பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். பயமுறுத்துவதற்காக கூறவில்லை. இது ஆயுர்வேதம் சொல்லும் உண்மை.

டாக்டர். ஆர்.பாலமுருகன்
டாக்டர். ஆர்.பாலமுருகன்

என்னிடம் வரும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகளில் பலருக்கும் `கக்கூஸ் படை' எனும் `கக்கூஸ் பத்து' நோய் பரவலாகக் காணப்படுகிறது. இந்த நோய் வந்தால், அவ்வளவு எளிதாகக் குணமாவதில்லை. இதற்கு மிக முக்கியக் காரணம் ஈரமான உள்ளாடைகளை அணிவதும் சுத்தமற்ற கழிப்பறைகளைப் பயன்படுத்துவதும்தான். ஒரு முறை கக்கூஸ் படை வந்துவிட்டால், அதிலிருந்து வெளியேறும் சீழ் மற்றும் கெட்டநீர் படுகின்ற இடத்திலெல்லாம் பரவிவிடும். இதற்கு ஆயுர்வேத மருத்துவத்தில் `சீமை அகத்தி' என்ற இலையைப் பறித்து அரைத்துப் பூசினால் நோயிலிருந்து குணம் அடையலாம்.

இந்த கக்கூஸ் படைக்கு மிக முக்கியக் காரணமே, நம்முடைய டாய்லெட்டுகளை நாம் சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் இருப்பதுதான். திருமலை திருப்பதிக்குச் சென்றவர்களுக்குத் தெரியும். அங்கு நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர்வரை சுவாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். கிட்டத்தட்ட 20 ஆயிரம் வரை அங்கே டாய்லெட்டுகள் இருக்கின்றன. அவை அத்தனையும் சுத்தமாகவும் எப்போதும் தண்ணீர் நிரம்பிய தொட்டிகளுடன் இருக்கும் வகையிலும் பராமரிக்கப்படுகின்றன. இதேபோன்ற நிலையை பெருநகரங்களில் ஏற்படுத்தினால் நிச்சயம் நல்ல பலனிருக்கும். மலச்சிக்கல் தொடர்பான நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும்'' என்கிறார்.

சுத்தமான கழிப்பறைகள்
சுத்தமான கழிப்பறைகள்

இதற்கான தீர்வுக்கு முயற்சி எடுக்க வேண்டியது அரசு மட்டுமல்ல, மக்களிடமும் போதுமான விழிப்புணர்வு தேவை. நீண்ட காலம் இருக்கும் வகையிலான டாய்லெட்டுகளைக் கட்டித் தருவதுதான் சிறந்த தீர்வாக இருக்கமுடியும். எல்லாவற்றுக்கும் நாம் அரசாங்கத்தை மட்டுமே குறைசொல்லிக்கொண்டிருக்க முடியாது. நாமும் மாற வேண்டும். இந்த நிலை மாற இன்னும் எத்தனை ஆண்டுக்காலம்தான் இதற்காக நாம் காத்திருக்க வேண்டும் என்பது வேதனைக்குரிய விஷயம்.

சங்கடம் தரும் சிறுநீர் வாடை - காரணங்களும் தீர்வுகளும்!
அடுத்த கட்டுரைக்கு