Published:Updated:

̀தேசிய பேரழிவுக்கான முழு பொறுப்பும் மோடி அரசினுடையதே!' - லான்செட் பத்திரிகை கடும் விமர்சனம்

Narendra Modi
Narendra Modi ( AP Photo / Bikas Das )

``பல சமயங்களில் மோடியின் அரசு பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் ட்விட்டரில் வரும் விமர்சனத்தை அகற்றுவதிலேயே அதிக கவனம் செலுத்தியது." - லான்செட் பத்திரிகை

இந்தியாவை கொரோனா இரண்டாம் அலை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் ஆக்ஸிஜனுக்காகவும், மருத்துவமனை அனுமதிக்காகவும், படுக்கைக்காகவும் அல்லல்படும் மக்களின் கோரிக்கைகள் சமூக ஊடகம் எங்கும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

2019-ம் ஆண்டு முதன்முதலில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய சமயத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்தன. வல்லரசு நாடு என்று சொல்லக்கூடிய அமெரிக்காவும் இதில் விதிவிலக்கல்ல. பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி என இந்த வரிசை மிக நீளம். அந்த சமயத்தில் கொரோனா பேரழிவை ஏற்படுத்த வாய்ப்புள்ள நாடு என அனைவரும் சுட்டிக் காட்டிய ஒரு நாடு இந்தியா. ஆம், இந்தியாவின் மக்க ள்தொகையைக் கணக்கில் கொண்டால் இதுவரை எந்த நாடும் காணாத ஒரு பாதிப்பை இந்தியா காணப்போகிறது என்றனர்.

India Covid 19 Outbreak
India Covid 19 Outbreak

அந்தக் கூற்றுகள்படியே அப்போது ஆபத்துகள் வந்தாலும் அது பேரழிவாக இல்லை. ஆனால், இந்த இரண்டாம் அலை அப்படி அல்ல. ஏனென்றால் இது குறித்து சுதாரித்துக்கொள்ள ஒரு வருட கால அனுபவமும், மருத்துவ ஆராய்ச்சிகளும் கையில் இருந்தன. இதற்கு மேலாக தடுப்பூசிகள் என்ற பிரம்மாஸ்திரமும் கையில் எடுக்கப்பட்டு விட்டது.

எனவே இரண்டாம் அலையில் கிட்டத்தட்ட பல நாடுகள் சுதாரித்துக் கொண்டு அலையில் சிக்காமல் மீண்டு எழுந்துவிட்டன.

கொரோனா பேரழிவில் சிக்கியதற்கு யார் காரணம்?

இந்தியாவின் நிலை அப்படி இல்லை. தற்போது கோரத்தாண்டம் ஆடிக் கொண்டிருக்கும் இந்த `கொரோனா சுனாமி’ அரசாங்கத்தின் அலட்சியத்தால் ஏற்பட்டது என்று இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலிருந்தும் பல்வேறு குரல்கள் அழுத்தமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. விஞ்ஞானிகள் இது குறித்த எச்சரிக்கையை விடுத்த போதும் அரசு அதை சட்டை செய்யவில்லை.

இது அனைத்துக்கும் மேலாக மோடியின் அரசு கொரோனாவை வென்றுவிட்டது என விழா எடுக்காத குறைதான். இதுதான் அனைத்து தரப்பினரையும் கடுஞ்சினத்துக்கு ஆளாக்கியுள்ளது. வெளிநாட்டு பத்திரிகைகள் அனைத்தும் இந்தியாவின் நிலையை சுட்டிக் காட்டி மோடியும் மோடியின் அரசும்தான் இதற்கு முழு காரணம் என்று காட்டமாக எழுதி வருகின்றன.

அதன்வரிசையில் தற்போது பழம்பெரும் மருத்துவ பத்திரிகையான லான்செட்டும் சேர்ந்துள்ளது. மிகக் கடுமையான வார்த்தைகளால் மோடி மற்றும் மோடி அரசின் அலட்சியத்தை அந்தப் பத்திரிகை விமர்சித்துள்ளது.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

அதன் தலையங்கம் இதோ:

``இந்தியாவில் நடந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது. மே மாதம் 4-ம் தேதி வரை 20.2 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுகள் இந்தியாவில் பதியப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 3,78,000 தொற்றுகள் பதிவாகின்றன. 2,22,000க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகின்றன. இது குறைத்து மதிப்பிட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. சுகாதாரப் பணியாளர்கள் சோர்ந்து விட்டனர். தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

சமூக ஊடகங்களில் மருத்துவர்களும், மக்களும் ஆக்ஸிஜன், மருத்துவப் படுக்கைகள் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் குரல்கள் நிரம்பியுள்ளன. மார்ச் மாதம் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தொடங்குவதற்கு முன் இந்தியாவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இந்தியா கொரோனாவை எதிர்கொண்டுவிட்டது என்று தெரிவித்தார்.

இரண்டாம் அலையின் ஆபத்து குறித்து விடாமல் விடுக்கப்பட்ட எச்சரிக்கை, புதிய திரிபுகள் உருவாகலாம் என விடுக்கப்பட்ட எச்சரிக்கை என அனைத்துக்கும் பிறகு, சில மாதங்களாக தொற்று எண்ணிக்கை குறைந்த காரணத்தால் இந்திய அரசு கோவிட்டை வீழ்த்திவிட்டதாகவே கருதியது.

இந்தியா மந்தை எதிர்ப்பு சக்தியை அடைந்துவிட்டது என தவறாகக் கூறப்பட்டு எந்த முன் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் இந்திய மருத்துவ கவுன்சிலால் நடத்தப்பட்ட ரத்த சீரம் மாதிரி ஆய்வில் மக்கள் தொகையில் வெறும் 21 சதவிகிதம் பேருக்கே சார்ஸ் - கோவி - 2க்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியிருப்பது தெரியவந்தது.

விமர்சனத்தை ஒடுக்குவதில் கவனம் செலுத்திய மோடி அரசு

பல சமயங்களில் மோடியின் அரசு பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் ட்விட்டரில் வரும் விமர்சனத்தை அகற்றுவதிலேயே அதிக கவனம் செலுத்தியது.

India Covid 19 Outbreak
India Covid 19 Outbreak
கொரோனா:`மோடி பொறுப்பைக் கைகழுவிவிட்டார்' - சர்வதேச ஊடகங்கள் கடும் விமர்சனம்

பல எச்சரிக்கைகளுக்குப் பிறகும் வேகமாக தொற்று பரவக் கூடிய ஆபத்து உள்ள மத விழாக்களுக்கும், அரசியல் பேரணிகளுக்கும் அரசு அனுமதி வழங்கியது. கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் காற்றில் பறந்தன. கொரோனா தொற்றுப் பரவல் நின்றுவிட்டது என்ற செய்தி தடுப்பூசி செலுத்தப்படுத்துவதையும் மந்தமாக்கியது. அதன் காரணமாக மக்கள் தொகையில் 2 சதவிகிதத்துக்கும் குறைந்த அளவிலான மக்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய அளவில் இந்தியாவின் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தடம் மாறியது. மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்காமல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்தது. அது தடுப்பூசி பற்றாக்குறைக்கு மேலும் வழிவகை செய்தது. மேலும் மத்திய அரசின் கொள்கை மாற்றத்தால் எந்த மாநிலத்திற்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்படும் என குழப்பம் அதிகரித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள், கொரோனா தொற்று திடீரென உயர்ந்ததைக் கையாள முடியாமால் திணறி வருகின்றன. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனையில் இடமில்லை, உடல்களை எரிப்பதற்கும் இடமில்லை. இதில் அதிகபட்சமாக சில மாநிலங்கள் ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ படுக்கைகளை கோருவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தின.

மறுபுறம் கேரளா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்கள் சற்று தயார் நிலையில் இருந்தன. தேவையான ஆக்ஸிஜனை தயாரித்து வைத்திருப்பதோடு பிற மாநிலங்களுக்கும் வழங்கின.

India Covid 19 Outbreak
India Covid 19 Outbreak
மோடி அரசை விமர்சிக்கும் சேத்தன் பகத்: ’’வெளிநாட்டு ஆயுதங்கள் வாங்கலாம்... ஆனால், தடுப்பூசி கூடாதா?''

இந்தியா தற்போது இருமுனை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். தடுப்பூசி திட்டத்தை மிக வேகமாகச் செயல்படுத்த வேண்டும். இரு சிக்கலை விரைவில் எதிர்கொள்ள வேண்டும். தடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்த வேண்டும். அதற்கு தடுப்பூசிகள் வெளிநாடுகளிலிருந்தும் வர வைக்கப்பட வேண்டும். இரண்டாவது நகர்ப்புறங்களில் மட்டுமல்ல இந்தியாவின் 65 சதவிகித மக்கள் தொகை இருக்கும், அடிப்படை சுகாதார வசதிகள் அற்ற கிராமப்புறங்களிலும் தடுப்பூசி சென்றடையும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

உள்ளூர் நிலவரத்தை அறிந்துள்ள ஆரம்ப சுகாதார மையங்களுடன் இணைந்து அரசு தடுப்பூசி அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

இரண்டாவது, தடுப்பூசி செலுத்தப்படும் அதே நேரத்தில் கொரோனா பரவாமல் தடுக்க வேண்டும். தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் அரசு துல்லியமான தரவுகளை சரியான நேரத்தில் மக்களிடம் காட்ட வேண்டும். மக்களிடம் துல்லியமான தரவுகள் கூறி சூழலை விளக்க வேண்டும். தொற்றுப்பரவலைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை மக்களிடம் புரிய வைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

SARS-CoV-2 திரிபுகள் பரவுவதைத் தடுக்கும் `ஜினோம் சீக்வென்ஸிங்’ முறையை விரிவுபடுத்த வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான தேவையையும், பரிசோதனைகளின் அவசியத்தையும் மத்திய அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.

சுகாதார மதிப்பீடுகள் மற்றும் அளவீட்டு கழகம் இந்தியாவில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியில் 10 லட்சம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பர் என்று கூறுகிறது.

India Covid 19 Outbreak
India Covid 19 Outbreak
`கொரோனாவைக் கட்டுப்படுத்த தவறியது மோடி அரசு; வேடிக்கை பார்க்கிறது உச்ச நீதிமன்றம்’-சிவசேனா காட்டம்

அது நடந்தால் தனக்கு தானே உருவாக்கிக் கொண்ட தேசிய பேரழிவுக்கான முழு பொறுப்பும் மோடி அரசினுடையதே. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா ஆரம்ப காலத்தில் அடைந்த வெற்றியை அதுவே சிதைத்துக்கொண்டது.

நெருக்கடி தலைக்கு மேல் சென்று கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் அதற்கான எதிர்வினை நடவடிக்கையை இந்தியா சீரமைக்க வேண்டும். அரசு தனது தவற்றை ஒப்புக் கொண்டு, தேவையான தலைமையை அளித்து, வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு அறிவியல் தன்மையுடன் சுகாதார நடவடிக்கையை செயல்படுத்துவதைப் பொறுத்தே அந்த முயற்சியின் வெற்றி அமையும்."

- திலகவதி

அடுத்த கட்டுரைக்கு