Published:Updated:

கொரோனா பாதித்த நாடுகளிலிருந்து நாம் கற்கத் தவறுகிற பாடங்கள் என்னென்ன? #Corona

corona virus | கொரோனா
corona virus | கொரோனா

அது பொதுவாக சமூக விலைகலைக் கடைப்பிடிக்க வேண்டு்ம் என்னும் நோக்கத்திற்காகச் செய்யப்படுகிறது. ஆனால், அவர்களை தீண்டத்தகாதவர்கள்போல பார்க்கும் மனநிலையில்தான் மக்கள் இருக்கின்றனர்.

இதுவரை எந்த நோயும் கொரோனா அளவு வேகமாகப் பரவியதில்லை. தன் முதல் அலையிலேயே உலகைத் திக்குமுக்காட வைத்திருக்கிறது கொரோனா. தற்போது, கொரோனா தீவிரமாகப் பரவியுள்ள அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகள் எதிலுமே, திடீரென கொரோனா பரவிவிடவில்லை. தன் அண்டைநாடுகள் பாதிக்கப்படுவதைக் கண்கூடாகப் பார்த்துக்கொண்டே, நம் நாட்டிற்கு வரவில்லை என்று அலட்சியமாக இருந்ததன் விளைவாகவே இன்று நோய் பரவியதைத் தடுக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றன.

கொரோனா பரவலைத் துரிதமாகக் கட்டுப்படுத்திய நாடுகளான சிங்கப்பூர், தென் கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகள் யாவும் இதற்கு முன் இதேபோன்ற ஒரு கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட நாடுகள்தான். ஆசியாவிற்கு வெளியே தற்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கும் நாடுகள் யாவும் இதற்கு முன் இப்படி ஒரு பரவலைப் பெரிதாகக் கண்டதில்லை. மேலும் வைரஸ் பரவினாலும் தங்களால் கட்டுப்படுக்க முடியும் என்ற மெத்தனப் போக்கும், இந்த அளவு வைரஸ் பரவியதற்கு முக்கியக் காரணம்.

கொரோனா வைரஸ் - அமெரிக்கா
கொரோனா வைரஸ் - அமெரிக்கா

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகியவை 2003-ல் சார்ஸ் (SARS) நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவை. தென் கொரியாவோ 2015-ல் மெர்ஸ் (MERS) நோய்த் தாக்குதலுக்கு உள்ளானது. அவை வேகமாக விழித்துக்கொண்டு நோய்ப் பரவலை வேகமாகக் கட்டுப்படுத்திவிட்டன.

`ஆறே நாளில் மாறிய காட்சிகள்; 23 பேருக்கு கொரோனா தொற்று!' - கதிகலக்கும் கரூர் நிலவரம்

நோய்ப் பரவலால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடான இத்தாலி நாடு தழுவிய ஊரடங்கை முதலில் ஏற்கவில்லை. நிலைமை தீவிரமாவதை உணர்ந்து பின்னரே செயலாற்றத் தொடங்கியிருந்தனர். மார்ச் 16-ல்தான் பாரிஸ் நகரைத் தனிமைப்படுத்தலாமா என யோசித்துக் கொண்டிருந்தது பிரான்ஸ். ஆனால், அந்த நேரத்திலும் லண்டனில் குதிரைப் பந்தயங்களும், இசை நிகழ்ச்சிகளும் படு ஜோராக நடந்துகொண்டிருந்தன. இதற்கு காரணமாகச் சொல்லப்படுவது, லண்டன் மக்களுக்கு 'ஹெர்டு இம்மியூனிட்டி' (Herd Immunity) இருப்பதால் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்ற அரசு மற்றும் மக்களின் எண்ணம்தான். Herd Immunity என்பது இதற்கு முன்னர் ஓர் உடல் எடுத்துக் கொண்ட தடுப்பு மருந்து அல்லது நோய்த் தொற்றின் காரணமாக நம் உடலே நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியிருக்கும். அதனால், புதிய வைரஸ்களை நம் உடலினால் தாங்க முடியும் என்ற நிலை. இந்தக் கதையை மனதில் வைத்துத்தான் பெரிய அளவில் தொற்று ஏற்படாது என மெத்தனம் காட்டியது லண்டன்.

Corona virus
Corona virus

அமெரிக்காவைப் பற்றிக் கூறவே தேவையில்லை. உலக நாட்டுத் தலைவர்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்த போதும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டும் சாதாரணமாகவே சுற்றிக்கொண்டிருந்தார். கொரோனா பரவல் தீவிர நிலையை அடைந்துகொண்டிருக்கும்போதே நியூயார்க் தனிமைப்படுத்துதலுக்கான அறிவிப்பு வருகிறது. விளைவு, கொரோனா பரவலில் 3,30,000 பாதிப்புடன் உலகிலேயே முதல் இடம்.

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு 500-க்கும் குறைவாக இருக்கும்போதே நாடு முழுவதுமான ஊரடங்கு என்பது உலகளவில் பலராலும் வரவேற்கப்பட்ட ஒரு விஷயம். மற்ற நாடுகளைப்போல் கொரோனா வந்த பிறகு கட்டுப்படுத்துவது என்பது இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் மிகவும் சிரமமான ஒன்று. எனவே, அந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், எந்த ஒரு முன்னேற்பாடுகளுமின்றி மிகவும் குறைவான நேரத்தில் அதைச் செயல்படுத்தியது விவாதத்திற்கு உரியது. இதனால், ஒரே நாளில் கொத்துக் கொத்தாக மக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்ததுதான் மிச்சம்.

World fighting against corona
World fighting against corona

இந்தச் சூழ்நிலையில் அரசை மட்டுமே குறைகூற முடியாது. அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியேற வேண்டாம் எனக் கூறிய பிறகும், தேவையி்ல்லாமல் வெளியே சுற்றும் மக்கள் எத்தனை பேர்! கொரோனாவிற்கு எதிராக நம் ஒற்றுமையைக் காட்ட கைகளைத் தட்ட வேண்டும் என்பதும், விளக்கேற்ற வேண்டும் என்பதும் எதற்காக எனத் தெரியவில்லை. ஆனால், நாட்டின் பிரதமர் சொல்கிறார். அதை மக்கள் பின்பற்றுகிறார்கள். எந்தக் காரணத்திற்காக இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படுகின்றனவோ, அதையே தவிடுபொடியாக்கிவிட்டுக் கூட்டம் கூட்டமாகக் கொண்டாட்டம் நடத்த வேண்டியதன் அவசியம் என்ன? சிந்திக்காமல் செயலாற்றுவதாக அரசைக் குறை சொல்கிறவர்கள் இருக்கும் அதே நேரம், சிந்திக்காமல் செயலாற்றும் மக்களால்தான் கொரோனா பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

நாம் இப்படி நடமாடுவதும் அறியாமையில் இல்லை. சீனாவில் தானே பரவியுள்ளது என நடமாடினோம், டெல்லியில்தானே பரவியுள்ளது எனப் பேசிக் கொண்டிருந்தோம், ஈரோட்டில்தானே பாதிப்பு அதிகம் என மனதைத் தேற்றிக் கொண்டோம், இதோ இப்போது நம் வீட்டு வாசல் வரை வந்துவிட்டது. இனியும் நாம் மெத்தனமாத இருக்க முடியாது. நாம் இப்போது இருக்கும் மனநிலையானது கடுமையாகப் பாதிக்கப்பட்ட அமெரி்க்க, ஐரோப்பிய நாடுகளின் மனநிலைக்குச் சற்றும் சளைத்ததல்ல.

நகர்ப்புறத்தைவிட கிராமப்புறங்களில் நோய் குறித்த சரியான புரிதல் இல்லை. வெளியூரிலிருந்து சமீபத்தில் வீட்டிற்கு வந்தவர்களைக் கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அப்படி வெளியூரிலிருந்து வந்த தங்கள் குடும்பத்தினர் குறித்த தெளிவான விவரங்களைப் பலர் அளிப்பதில்லை. "எங்களுக்கு எந்த நோயும் இல்லை, இதை மறைப்பதினால் என்னவாகப் போகிறது" என்பதுதான் பலரிடமிருந்தும் பதிலாக வருகிறது. மேலும், இந்தத் தகவல்களைக் கொடுப்பதினால் தங்கள் குடும்பத்தினரைத் தனிமைப்படுத்தி விடுவார்கள் என்றும் அதனால் கொடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர். இதனால் யாருக்கு பாதிப்பு என்பதைக்கூட அறியாமல் செயல்படுகின்றனர்.

கொரோனா
கொரோனா

கைதட்டுங்கள் என்று கூறியதற்கு மக்களின் செயல்பாடுகளைப் பார்த்தாவது பிரதமர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். மீண்டும் வீட்டில் விளக்குகளை ஒளிர விடுங்கள் என அவர், ஒரு அர்த்தத்தில்கூற தீப்பந்தத்தைத் தூக்கிக்கொண்டு தெருத் தெருவாக அணிவகுப்பு நடத்தியும், கூட்டம் கூட்டமாக இணைந்து ஒளியெழுப்பியும் ஆரவாரமாகக் கொண்டாடியிருக்கிறார்கள். இது மொத்த ஊரடங்கையும் கேள்விக்குறியாக்குகிறது.

சமீபத்தில் வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்களின் வீடுகளில், ஸ்டிக்கர் ஒட்டி அடையாளப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அது, பொதுவாகச் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டு்ம் என்னும் நோக்கத்திற்காகச் செய்யப்படுகிறது. ஆனால், அவர்களை தீண்டத்தகாதவர்கள் போல பார்க்கும் மனநிலையில்தான் மக்கள் இருக்கின்றனர்.

அரசு எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும், மக்கள் கொடுக்கும் ஒத்துழைப்புதான் முழுமையான பலனைக் கொடுக்கும். மக்கள் எந்த ஒத்துழைப்பையும் கொடுக்காமல் அரசைக் குறை கூறுவது எந்த விதத்திலும் நமக்கு நன்மையைத் தராது.

அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்லாதீர்கள். சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள், உங்களுக்காக இல்லாவிடினும் உங்களைச் சுற்றி இருப்பவர்களின் நன்மைக்காகக் கடைப்பிடியுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு