Published:Updated:

`சென்டிமென்ட் செயின்... இறுதிக்கட்ட முடிவுகள்... கடைசி ஆசை!' - மருத்துவர் சாந்தா என்னும் சகாப்தம்

மருத்துவர் சாந்தா
மருத்துவர் சாந்தா

இத்தனை மாற்றங்களை நிகழ்த்திக்காட்டினாலும், எளிமை, எல்லோரிடமும் மென்மையாகப் பழகக்கூடிய தன்மை, முதுமையைப் பொருட்படுத்தாத இடைவிடாத உழைப்பு, அர்ப்பணிப்புடன் கூடிய மருத்துவச் சேவை ஆகியவைதான் டாக்டர் சாந்தாவின் 67 ஆண்டுக்கால அடையாளம்.

ருத்துவத்தைப் பணம் ஈட்டும் தொழிலாகச் செய்வோருக்கு மத்தியில், அதை அறம் காக்கும் சேவையாகச் செய்து வந்த சாந்தா, மருத்துவத் துறையின் மாண்பைக் காத்த சேவை மனுஷி. இவரது தன்னலமற்ற உழைப்பால் சென்னை அடையாற்றின் முக்கிய அடையாளமாகவும், புற்றுநோயாளிகளுக்குச் சரணாலயமாகவும் மாறியது புற்றுநோய் நிறுவனம். சாந்தாவுக்குக் கடந்த 67 ஆண்டுகளாக சுவாசம், உலகம் என எல்லாமுமாக இருந்தது புற்றுநோய் நிறுவனம்தான். அவரின் சுவாசமின்றி வேருக்கு நீரற்ற வெறுமையில் தவிக்கிறது அந்த நிறுவனம்.
டாக்டர் சாந்தா
டாக்டர் சாந்தா

ஒரு நூற்றாண்டின் ஈடு இணையற்ற சமகால வரலாறாகவும் சகாப்தமாகவும் வாழ்ந்துள்ள சாந்தாவின் மறைவால், மருத்துவ உலகம் மட்டுமன்றி அனைத்து துறையினரும் வருந்துகின்றனர். காரணம், புற்றுநோயாளிகளின் நலனுக்காகவே அவர் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் போற்றத்தக்கது. இவரது உழைப்பையும் சேவையையும் போற்றும் வகையில், சாந்தாவின் உடல் காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. யார் இந்த சாந்தா? இவரது வாழ்க்கைப் பயணத்தையும் பர்சனல் உலகத்தையும் அறிவோம்.

சென்னையில் நடுத்தர குடும்பம் ஒன்றின் மூத்த மகள் சாந்தா. நான்கு தங்கைகள், இரண்டு தம்பிகள். நோபல் பரிசு வென்ற சர் சி.வி.ராமன் சாந்தாவின் இளைய தாத்தா. நோபல் பரிசு வென்ற மற்றொரு விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர் தாய்மாமா. அப்பா ரயில்வே அதிகாரி. அம்மாவிடம்தான் ஆரம்ப கல்வி பயின்றார். நன்றாகப் படித்தார் சாந்தா. தனது விருப்பப்படியே மருத்துவர் ஆனார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றினார். பெரும் முயற்சிக்குப் பிறகு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தொடங்கிய புற்றுநோய் நிறுவனத்தில் தானும் இணைந்தார் சாந்தா. அதற்காகவே, அரசு மருத்துவர் பணியில் இருந்து விலகினார்.

doctor shanta
doctor shanta

1954-ம் ஆண்டு. இரண்டு படுக்கை, இரண்டு மருத்துவர்கள் மற்றும் நான்கு ஊழியர்களுடன் குடிசையில் தொடங்கப்பட்டதுதான் புற்றுநோய் நிறுவனம். மருத்துவ வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்தில், புற்றுநோய் வருவதற்கான காரணமும், உரிய சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களுக்கே அதிகம் தெரியவில்லை. இதனால், குழந்தைகள் உட்பட பலரும் உயிரிழப்பது அதிகமாக இருந்தது. அதைக் கண்டு வருந்திய சாந்தா, உயரிய, உரிய சிகிச்சை முறைகளைக் கற்றுக்கொண்டார். முத்துலட்சுமி ரெட்டி மற்றும் அவரின் மகனும் மருத்துவருமான கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் இணைந்து, புற்றுநோய் நிறுவன வளர்ச்சிக்காக மட்டுமே உழைத்தார். தமிழகம் தவிர, வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் இந்த மையத்தை நாடி வந்து பயன்பெற்றுள்ளனர்.

புற்றுநோய் என்றாலே பலரும் அஞ்சி நடுங்கிய காலகட்டத்தில், `இது குணப்படுத்தக்கூடிய நோய்தான்' என்று நம்பிக்கையூட்டியதுடன் திறமையான சிகிச்சை முறையால் அதை மெய்ப்பித்தும் காட்டினார். புற்றுநோய்க்கான மேம்பட்ட சிகிச்சை முறைகளை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தி, மத்திய மாநில அரசுகளுக்கு இணைப்புப் பாலமாகவும் இருந்தவர். ஆயிரக்கணக்கான திறமையான மருத்துவர்களையும் செவிலியர்களையும் உருவாக்கி மருத்துவ ஆசிரியராகவும் திகழ்ந்தார்.

இந்த சேவைப் பணிக்காகவே, திருமணம் உள்ளிட்ட தனது தனிப்பட்ட நலன்களைத் தவிர்த்தார். முத்துலட்சுமி மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்குப் பிறகு, 1997-ம் ஆண்டு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவரானார் சாந்தா. புற்றுநோயாளிகளைக் குணப்படுத்துவதில் பெரும் முனைப்பு காட்டியவர், அரசு மற்றும் தனியாரிடம் நிதியுதவி பெற்று, புற்றுநோய் நிறுவனத்தைப் படிப்படியாய் விரிவுபடுத்தினார். 130 மருத்துவர்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் சிகிச்சைபெறும் அளவுக்கு பெரும் விருட்சமாக வளர்ந்துள்ளது இந்த மையம். ஓரளவுக்கு வசதி படைத்தோரிடம் மட்டும் சிகிச்சைக்காகக் கட்டணம் பெறுகின்றனர். புற்றுநோய் பாதித்த ஏழைகளுக்கு இலவசமாகவே சிகிச்சை வழங்குகின்றனர்.

doctor shanta
doctor shanta

இத்தனை மாற்றங்களை நிகழ்த்திக்காட்டினாலும், எளிமை, எல்லோரிடமும் மென்மையாகப் பழகக்கூடிய தன்மை, முதுமையைப் பொருட்படுத்தாத இடைவிடாத உழைப்பு, அர்ப்பணிப்புடன் கூடிய மருத்துவச் சேவை ஆகியவைதான் டாக்டர் சாந்தாவின் 67 ஆண்டுக்கால அடையாளம். குடும்ப விழாக்களில் மட்டும் சொந்த பந்தங்களைச் சந்திப்பார். தங்கை சுசீலா தவிர, யாருடனும் அதிக நேரம் செலவிட மாட்டார். பண்டிகைக் காலம் உட்பட எப்போதும் வெளியிடங்களுக்கும் செல்ல மாட்டார். கொண்டாட்டங்களிலும் அதிக நாட்டமில்லாதவர். விருந்தினர்கள் வந்தால்தான் அலுவலக குடியிருப்பின் வரவேற்பறைக்கு வருவார். மற்றபடி தனது அறையில்தான் எப்போதும் இருப்பார். ஓய்வு நேரத்தில் அதிகம் வாசிப்பார். தவிர, புற்றுநோயாளிகளின் நலனுக்கும் புற்றுநோய் நிறுவன வளர்ச்சிக்காவும் மட்டுமே அதிகம் சிந்தித்தார்.

ஆசியாவின் உயரிய விருதான மகசேசே விருது, இந்தியாவின் உயரிய பத்ம விருதுகள் அனைத்தையும் வென்றவர். `விருதுகள் நம்மைத்தேடி வர வேண்டும். நாம் அவற்றுக்கு ஆசைப்படக் கூடாது' என்பார்கள். சாந்தா அதற்கும் ஒருபடி மேலே சென்று, `வாங்கிய விருதுகள் போதும்' எனத் தன்னைத் தேடிவந்த விருதுகள் பலவற்றையும் வாங்க மறுத்தார். இந்தியாவின் உயரிய விருதான `பாரத ரத்னா' விருதையும் இவருக்கு வழங்குவதற்கு மத்திய அரசு பலமுறை முயன்றும் சாந்தா மறுத்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு சாந்தாவுக்கு அவள் விகடனின் `தமிழன்னை விருது' வழங்கிய தருணம் இங்கே குறிப்பிடத்தக்கது.

அவள் விகடன் விருது நிகழ்ச்சி
அவள் விகடன் விருது நிகழ்ச்சி

மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முயன்றும், `விருது வேண்டாமே' என்று அடக்கமாக மறுத்து வந்தார். இருப்பினும், சாந்தாவின் தன்னலமற்ற பணியை கெளரவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த ஆண்டும் பெரிதும் முயன்றோம். பலனாக, புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் அவள் விகடன் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். `தமிழன்னை' விருதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட சாந்தா, புற்றுநோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து தாயுள்ளத்துடன் வலியுறுத்தினார். விகடன் குழுமம் சார்பில் சாந்தாவுக்கு வழங்க முன்வந்த ஒரு லட்சம் ரூபாய் தொகையை, `தனது நிறுவனத்தின் முன்னேற்றப் பணிகளுக்காகவே வழங்க வேண்டும்' என்ற அவரின் விருப்பமும் அதே அரங்கில் நிறைவேற்றப்பட்டது. இதுபோலவே, தனக்குக் கிடைக்கும் பரிசு, பணம் உள்ளிட்ட அனைத்தையும் புற்றுநோய் நிறுவனத்துக்கே பயன்படுத்தினார்.

நகைகளின்மீது துளியும் நாட்டமில்லாதவர். தனிப்பட்ட சென்டிமென்ட் காரணத்தால் மெல்லிய தங்க செயின் ஒன்றை மட்டும் எப்போதும் அணிந்திருந்தார். மற்றபடி பழுப்புநிற காட்டன் புடவைகளை மட்டுமே உடுத்துவார். ஆன்மிகத்தில் அதிக நாட்டமில்லாதவர். உதவும் மனங்கள்மீது அதிக மதிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தார். அதிகாலை 4.30 மணிக்கு எழுந்தால், இரவு 10 மணிவரை அவரது சிந்தனை எல்லாம் மருத்துவம் சார்ந்த பணிதான். ஒரு வேலையைக் கையில் எடுத்தால் வெற்றி கிடைக்கும் வரை இடைவிடாமல் போராடுவார். வயோதிகத்தைப் பொருட்படுத்தாமல், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் புற்றுநோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கி வந்தார்.

மருத்துவர் சாந்தா
மருத்துவர் சாந்தா

ருசிக்கு இல்லாமல், பசிக்கு மட்டும் அளவாகவே உணவு உண்பார். ஒரு பருக்கை சாதம்கூட வீணாகக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையோடு இருப்பார். பத்திரிகைகளில் வரும் குறுக்கெழுத்துப் போட்டிக்கு மழலைத் தன்மை ஆர்வத்துடன் விடை காண்பார். அப்துல் கலாம் மீது அதிக அன்பு கொண்டவர். அவரைப் பற்றித் தன் உரைகளில் தவறாமல் குறிப்பிடுவார். உடன் பிறந்த தங்கை சுசீலா மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். தங்கையுடன்தான் தினமும் மதிய உணவு சாப்பிடுவார். ஓராண்டுக்கு முன்பு சுசீலாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. மிகவும் துடித்துப்போன சாந்தா, தங்கை குணமான பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற அவள் விகடன் விருது நிகழ்ச்சிதான், சாந்தா கலந்துகொண்ட கடைசி பொது நிகழ்ச்சி. அதன் பிறகு, கொரோனா லாக்டெளன் அமலானதால் தனது குடியிருப்பில் மட்டுமே இருந்தார். இருப்பினும் வழக்கமான நிர்வாகப் பணிகளைத் தொய்வின்றி செய்து வந்தார். ஒரு வாரமாகவே சாந்தாவுக்கு உடல்நலக்குறைபாடு இருந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். உடனே வீடு திரும்பியவர், நேற்று முக்கியமான பணிகளைக் கவனித்திருக்கிறார். தன் உடல்நிலையை நன்கு அறிந்தவராக, தனக்குப் பிந்தைய நிறுவன வளர்ச்சிக்கான சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். இந்த நிலையில், இரவில் மீண்டும் உடல்நிலை மோசமாகி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். சிகிச்சைப் பலனின்றி சாந்தாவின் உயிர் இன்று அதிகாலையில் பிரிந்தது.

மருத்துவர் சாந்தா
மருத்துவர் சாந்தா
`அடையாற்றின் மற்றோர் ஆலமரம்’... மருத்துவர் சாந்தா காலமானார்!

தனது இலக்குப்படியே கடைசி மூச்சு வரை புற்றுநோய் நிறுவனத்துக்காகவே வாழ்ந்து மறைந்துள்ளார் சாந்தா. `என் மறைவுக்குப் பிறகு, எனது அஸ்தியை புற்றுநோய் நிறுவனம் முழுக்கத் தூவி விட வேண்டும்' என்று முன்கூட்டியே கூறியிருக்கிறார். அவரது இறுதி ஆசை உறுதியாக நிறைவேற்றப்படும் என்றே புற்றுநோய் மைய நிர்வாகிகள் கூறுகின்றனர். சாந்தாவின் மறைவுக்கு பிரதமர், முதல்வர், மருத்துவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சாந்தாவைப் போல தன்னலமற்ற சேவை மனுஷியைக் காண்பது அரிதிலும் அரிது!

அடுத்த கட்டுரைக்கு