Published:Updated:

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்! | முதுமை எனும் பூங்காற்று #MyVikatan

அடிக்கடி சிரித்து மகிழ்ச்சியுடன் இருப்பவர்களுக்கு உயர் ரத்தம் அழுத்தம், மாரடைப்பு மற்றும் மனச்சோர்வு போன்ற நோய்கள் வருவதில்லை. தேவையற்ற மனப்பதற்றம் குறையும். இரவில் நல்ல உறக்கம் வரும்

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்! | முதுமை எனும் பூங்காற்று #MyVikatan

அடிக்கடி சிரித்து மகிழ்ச்சியுடன் இருப்பவர்களுக்கு உயர் ரத்தம் அழுத்தம், மாரடைப்பு மற்றும் மனச்சோர்வு போன்ற நோய்கள் வருவதில்லை. தேவையற்ற மனப்பதற்றம் குறையும். இரவில் நல்ல உறக்கம் வரும்

Published:Updated:

நகைச்சுவையும் சிரிப்பும் மனிதனுக்கு மட்டுமே கிடைத்த ஒரு வரம். மற்ற எந்த ஜீவராசிகளுக்கும் இந்த வரம் கிடையாது. குழந்தைப் பருவத்தில் சிரிப்பு தான் அதிக வெளிப்பாடாக இருக்கும். வயது ஆக, ஆக சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முதுமையில் பலருக்கு சிரிக்கத் தெரியாமலேயே போய்விடுகிறது. முதியவரிடம் நகைச்சுவைப் பற்றி கேட்டால் அது கிலோ என்ன விலை, அது எங்கே கிடைக்கும் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். மேலும் சிலர், வயதான காலத்தில் பல நோய்களினாலும், குடும்ப பிரச்சினைகளினாலும் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறேன், எனக்கு எப்படிச் சிரிப்பு வரும் என்று கூறுபவர்களும் உண்டு. இதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு பல முதியவர்கள் நகைச்சுவை ததும்ப பேசிக் கொண்டு காலத்தை இனிமையாக கழிப்பவர்களும் உண்டு. முதுமையில் ஏற்படும் சில சிரமங்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு சற்று சிரித்து பாருங்கள் அல்லது நகைச்சுவையுடன் பேசிப் பாருங்கள், உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

நகைச்சுவையின் முன்னோடி

பல வருடங்களுக்கு முன்பே சிரிப்பின் வகைகளைப் பற்றி மறைந்த கலைவாணர் ச.ந.கிருஷ்ணன் அவர்கள் நல்லதம்பி என்ற திரைப்படத்தில் தன் துணைவியார் திருமதி ப.அ.மதுரத்துடன் சேர்ந்து சிரிப்பைப் பற்றி பாடல் ஒன்றை பாடியுள்ளார். அதில் பலவிதமான சிரிப்பை பாடலாக பாடியிருப்பார். உதாரணமாக: சாகசச் சிரிப்பு, சங்கீதச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, அசட்டுச் சிரிப்பு போன்றவை. கலைவாணர் அவர்கள் நகைச்சுவையுடன் நல்ல கருத்துகளை சிரித்துக் கொண்டே பாடியதை எளிதில் யாராலும் மறக்க முடியாது.

N S Krishnan - T A Mathuram
N S Krishnan - T A Mathuram

கலைவாணரின் நகைச்சுவை

கலைவாணர் ஒரு நாடகத்தில் இதோ பாரு.. எனக்கு வர்ற கோவத்துக்கு இப்ப உன்னை அறைஞ்சேன்னா 31 பல்லும் கொட்டிப் போயிடும் என்பார்.

32 பல் என்பதற்குப் பதிலாக 31 பல் என்று கலைவாணர் சொன்னதும். "முதலாளி... மனுசனுக்கு 32 பல்லுங்கறதை மறந்துட்டிங்களா?’ என்பார் உடன் நடிப்பவர்.

கலைவாணர் சற்றுத் திகைத்து தடுமாறிய பிறகு சமாளித்து சாதுரியமாக சொன்னார்.

"நான் மறக்கலே... அந்த ஒரு பல்லுமே வலி வந்தே நீ சாகணும். அதற்காக அதை விட்டு வச்சிருக்கேன்’ என்பார். ரசிகர்களின் சிரிப்பு அடங்க வெகு நேரம் ஆகும்.

நகைச்சுவைப் பற்றி திருவள்ளுவர்

"இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத் (து) ஊர்வ (து) அஃதுஒப்ப (து) இல் (குறள் 621)

சோதனை, வேதனை ஆகிய துன்பங்களைக் கண்டு சோராது அதனை எள்ளி நகையாடுக! ஏனெனில், இதற்கு அடுத்து நீ அடையப் போகும் வெற்றிக்கு இதுவே முத்தாய்ப்பு ஆகும்.

"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள்’ (குறள் 999)

யாரோடும் சிரித்துப் பழகத் தெரியாதவர்களுக்கு இப்பேருலகம் பகற்காலத்தும் இருளாகத் தோன்றும் என்பார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Sujatha
Sujatha

எழுத்தாளர்களின் நகைச்சுவை

எழுத்தாளர் சுஜாதாவிடம் திருக்குறள் பற்றி ஒருவர் கேள்வி கேட்டார் "திருக்குறள் 1330 குறள்கள் அல்லவா அப்படியானால் திருக்குறளை திருக்குறள்கள் என்று தானே சொல்ல வேண்டும்? அப்படி இருக்க பன்மையில் சொல்லாமல் ஏன் ஒருமையில் திருக்குறள் என்று சொல்கிறோம்’ என்று கேள்வி கேட்டார். சுஜாதா அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? "திருவள்ளுவர் கள்ளை அனுமதிப்பதில்லை!’

நகைச்சுவையும் ஆன்மிகவாதிகளும்

பெரும்பாலான ஆன்மிகவாதிகளின் சொற்பொழிவில் நகைச்சுவை அதிகம் கலந்தே இருக்கும். அவர்கள் பேசும் பொழுது முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவில் எப்பொழுதும் நகைச்சுவை இருக்கும். உதாரணம்:

புத்திசாலிக் கணவனுக்கும் முட்டாள் கணவனுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? இதோ, வாரியார் கூறுகிறார், "வாயை மூடு!’ என்று முட்டாள், தன் மனைவியைத் திட்டுகிறான். "நீ அமைதியாக இருக்கும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா?’ என்கிறான் புத்திசாலி. அறிவார்ந்த நகைச்சுவை என்பது இதுதான்!

Dr V S Natarajan
Dr V S Natarajan

முதியவர்களிடம் நான் பகிர்ந்த நகைச்சுவை

முதியோர்களிடம் என் அனுபவத்தில் பகிர்ந்து கொண்ட இரண்டு நகைச்சுவைகளைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.

முதியோர் நல விழாவில் கலந்து கொண்டு "முதுமை என்னும் பூங்காற்று’ என்ற தலைப்பில் உரையாற்றும் போது ரசிப்பதற்காக நான் சொன்ன ஒரு நகைச்சுவை.

"அண்ணாநகர் அடுக்குமாடியில் ஒரு பாட்டி தனியாக வசித்து வருகிறார். அவர்களைக் காண மூன்று பேரன்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தார்கள். ஒரு மாதம் பாட்டியோடு இருந்து விட்டு பேரன்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் நேரம் வந்தாகி விட்டது. முதல் பேரன் பாட்டியிடம், ‘பாட்டி நீங்கள் ஏன் அடுக்குமாடியில் வாடகை வீட்டில் இருக்க வேண்டும். உங்களுக்கென்று ஒரு சிறு பங்களா வாங்கி உள்ளேன். அதில் நல்ல வசதியுடன் இருங்கள்’ என்று வீட்டு சாவியைக் கொடுத்தான். இரண்டாவது பேரன், ‘நீங்கள் வாடகைக் காரில் பயணம் செய்வது என் மனதிற்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. ஆகையால், நல்ல கார் ஒன்று உங்களுக்காக வாங்கி வந்துள்ளேன்’ என்று கார் சாவியை பாட்டியிடம் கொடுத்தான். மூன்றாவது பேரன், ‘உங்கள் தனிமையைத் தவிர்க்க நல்ல அழகான கிளி ஒன்றை வாங்கி வந்துள்ளேன். அது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்’ என்று ஒரு கிளியை கூண்டோடு கொடுத்து விட்டு மூன்று பேரும் வெளிநாடு சென்று விட்டார்கள்.

சுமார் ஒரு மாதம் கழித்து பாட்டி தன் கடைசி பேரனுக்கு கடிதம் எழுதினாள். ‘வயதான காலத்தில் எனக்கு இந்த பெரிய வீடு பிடிக்கவில்லை. பழையபடியே அடுக்குமாடிக்கு வந்துவிட்டேன். எனக்கு கார் அவ்வளவாக உபயோகமாயில்லை. அதையும் விற்றுவிட்டேன். ஆனால் நீ கொடுத்த கிளியோ மிகவும் ருசியாக இருந்தது. எனக்கு அதை மட்டும் மறுபடியும் கொடுக்க ஏற்பாடு செய்யேன்!’

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதியவர்களிடமிருந்து வந்த சிரிப்பொலி அடங்க வெகு நேரமாயிற்று!

மற்றொரு முதியோர் நல விழாவில் ’முதுமையை முறியடிப்போம்’ என்ற தலைப்பில் நீண்ட சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினேன். அதில் நிகழ்ச்சி தொய்வில்லாமல் இருப்பதற்காக ஒரு செய்தியைக் கூறினேன். கடவுளின் படைப்புகள் எல்லாமே ஒரு காரணத்துடன் தான் மற்றும் உபயோகத்துடன் தான் இருக்கும். மனித உடலில் ஞானப் பல், பித்த நீர்ப்பை, குடல் வால்வு மற்றும் பிராஸ்டேட் சுரப்பி போன்ற உறுப்புகளினால் பலன் அதிகம் இல்லை. ஆனால், கடவுள் ஏன் அதனை படைத்தார் என்றால், அறுவை சிகிச்சை நிபுணர்கள் எல்லாம் கடவுளிடம் சென்று எங்களுக்கு போதுமான வருமானம் இல்லை என்று முறையிட்டதற்காக கடவுள் "உங்களுக்காகவே நாலு உறுப்புகளை மனிதனுக்குப் படைத்திருக்கிறேன், அதை வைத்து கொண்டு நல்லபடியாக வாழுங்கள் என்றாராம்’ (இது நகைச்சுவைக்காக மட்டும் தான், யார் மனதையும் புண்படுத்துவதற்கு இல்லை, அறுவை சிகிச்சை நிபுணர்கள் மன்னிக்கவும்). நிகழ்ச்சி முடிந்ததும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் என் உரை எப்படி இருந்தது என்று வினவ, "நீங்கள் சொன்ன ஜோக் நன்றாக இருந்தது’ என்றார்கள். நான் சொன்ன பல நல்ல கருத்துகளை விட சாதாரணமாகச் சொன்ன நகைச்சுவைதான் அவர்களுக்குப் பிடித்தது என்பதை அறிய எனக்கு சற்று ஏமாற்றம் தான். எனினும், நகைச்சுவையை முதியவர்கள் வெகுவாக ரசித்தார்கள் என்பதற்காக நான் மகிழ்ச்சியடைந்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நகைச்சுவையின் நன்மைகள்

"வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போய்விடும்’ என்ற ஒரு பழமொழி உண்டு.

⦁ நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தி நகைச்சுவைக்கு உண்டு. இதற்காகவும் மற்றும் பல நன்மைகளுக்காகவும் நகைச்சுவை குழு (Humor club) மற்றும் சிரிப்பு குழுவில் (Laughter’s Club) பலர் உறுப்பினர்களாகி பயனடைந்து வருகிறார்கள்.

⦁ அடிக்கடி சிரித்து மகிழ்ச்சியுடன் இருப்பவர்களுக்கு உயர் ரத்தம் அழுத்தம், மாரடைப்பு மற்றும் மனச்சோர்வு போன்ற நோய்கள் வருவதில்லை

⦁ தேவையற்ற மனப்பதற்றம் குறையும்

⦁ இரவில் நல்ல உறக்கம் வரும்

⦁ நகைச்சுவையுடன் பேசுபவர்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்

⦁ சிரிப்பதனால் செலவு ஏதுமில்லை

⦁ பக்கவிளைவுகளும் இல்லை

Laugh
Laugh
freepik
கவலை, பிரச்னை, நோய்த் தொல்லை போன்றவற்றிலிருந்து சற்று விடுபட வேண்டும் என்றால், நகைச்சுவையை காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள். பேரக் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுங்கள், அவர்களிடமிருந்து நிறைய நகைச்சுவை துணுக்குகள் இலவசமாக கிடைக்கும்.

சர்வதேச மகிழ்ச்சி தினம் – மார்ச் 20

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ந் தேதி "சர்வதேச மகிழ்ச்சி’ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகிழ்ச்சியை மறந்தவர்களுக்கு இதன் மூலம் ஞாபகப்படுத்துவது தான் இந்நாளின் முக்கிய நோக்கமாகும். எல்லாம் என்னுடையது என்ற நினைப்பவர்கள் புன்னகையைத் தொலைக்கிறார்கள். எதுவும் என்னுடையதில்லை என நினைப்பவர்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே எல்லாவற்றையும் இயல்பாகக் கடக்கிறார்கள்.

கவலை, பிரச்னை, நோய்த் தொல்லை போன்றவற்றிலிருந்து சற்று விடுபட வேண்டும் என்றால், நகைச்சுவையை காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள். பேரக் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுங்கள், அவர்களிடமிருந்து நிறைய நகைச்சுவை துணுக்குகள் இலவசமாக கிடைக்கும். முடிந்த அளவுக்கு மகிழ்ச்சியுடன் பேசி மகிழுங்கள். இல்லையென்றால் மற்றவர்கள் பேசும் நகைச்சுவையை அனுபவியுங்கள். நகைச்சுவைக்காக என்று சிறுசிறு நூல்கள் பல வந்துள்ளன, தொலைக்காட்சியிலும் இதற்காகவே தனியாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். இவைகள் மூலம் நீங்கள் எளிதாக நகைச்சுவையைப் பெற்று உங்கள் வாழ்க்கையை சற்று இன்பகரமாக மாற்றிக் கொள்ளலாம். அதை இன்றிலிருந்தே கடைப்பிடித்து நீங்களும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விக்க செய்யலாமே!

- பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன், முதியோர் நல மருத்துவர், டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, சென்னை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism