Election bannerElection banner
Published:Updated:

`அம்மா கிச்சன்' தேர்தல் வரைதானா... கொரோனா வார்டில் தரமற்ற உணவு... தலையைக் காட்டுவாரா உதயகுமார்?

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

தற்போது தேர்தல் முடிந்துவிட்டது. `அமைச்சரையும் காணோம், உணவையும் காணோம். தேர்தலை மனதில் வைத்து இந்த விளம்பரங்களை எல்லாம் தேடிக்கொண்டிருக்கிறார்' என்று புலம்புகின்றனர் சிகிச்சைக்கு வந்துள்ள நோயாளிகளின் உறவினர்கள்.

கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. `மதுரையில் முதல் அலையின்போது அரசு இராசாசி மருத்துவமனை கொரோனா வார்டுகள் விசிட், நோயாளிகளுக்கு இலவச உணவு என்று பரபரப்பாக இருந்தார் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். ஆனால், தேர்தல் முடிந்ததும் அமைச்சரையும் காணோம், உணவையும் காணோம்' என்று புலம்புகிறார்கள் மக்கள்.

அரசு இராசாசி மருத்துவமனை கொரோனா வார்டுகளின் மெனுவில் இருந்து மிளகுப் பால், பயறு வகைகள், பழங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. மெனு பாதியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. சென்ற முறைபோல இப்போது நோயாளிகளின் உறவினர்களுக்கு (Patient Attenders) உணவு வழங்கப்படவில்லை. குடிக்கும் தண்ணீரைக்கூட காசு கொடுத்து வாங்கும் அவலம் நிலவுகிறது. `அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தன் அறக்கட்டளையிலிருந்து ஆரம்பித்த `அம்மா கிச்சன்' தேர்தல் விளம்பரத்துக்குத்தானா? மறுபடியும் `அம்மா கிச்சன்' பக்கம் தலையைக் காட்டுவாரா?' என்று கேட்க ஆரம்பித்துள்ளனர் பொருளாதார நெருக்கடியில் உள்ள நோயாளிகளும் உறவினர்களும்.

கொரோனா முதல் அலையின்போது நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட உணவு விவரங்கள் மற்றும் தற்போது இரண்டாம் அலையில் வழங்கப்படும் உணவு விவரங்களின் ஒப்பீடு இங்கே...

பட்டியல் விபரம்
பட்டியல் விபரம்

கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா பாதிப்பு ஆரம்பமானது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தீவிரமாக இருந்தது. மதுரை உட்பட பல மாவட்டங்களிலிருந்தும் ஏழை, எளிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்காகவே மதுரை அண்ணா நகர் பேருந்து நிலைய விபத்து காய சிகிச்சை வார்டுகள் அமைந்துள்ள கட்டடம் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி சிறப்பு சிகிச்சைக் கட்டடம் முழுவதும் கொரோன சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டன.

அரசு இராசாசி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுபவர்கள், முழுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தனித்தனியாக அவசர சிகிச்சை வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதோடு சத்தான உணவுகள் வழங்குவதற்காக, அமைச்சர் ஆ.பி.உதயகுமாரின் அறக்கட்டளை சார்பாக ஆரம்பிக்கப்பட்ட `அம்மா கிச்சனி'ல் மூன்று வேளை உணவுகள் தயாரிக்கும் பணிகள் தடபுடலாக மேற்கொள்ளப்பட்டன. இதில் நோயாளிகளுக்கென்று தனியாக உணவுகளும், நோயாளிகளுடன் வந்தவர்களுக்கு என்று தனி உணவுகளும் வழங்கப்பட்டன. நோயாளிகளின் உறவினர்களுக்கு மூன்று வேளையும் இலவசமாகத் தரமான உணவுகள் வழங்கப்பட்டன.

மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனை
மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனை
ஈ.ஜெ.நந்தகுமார்

நாள் ஒன்றுக்கு மூன்று வேளை உணவுடன் 3 அவித்த முட்டை, கபசுரக் குடிநீர், வாழைப்பழம், வெரைட்டி ரைஸ், சப்பாத்தி குருமா என்று தரமான உணவு வழங்கப்பட்டது. இதை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தன் நேரடி மேற்பார்வையில் வழங்கியதோடு, அவரே நேரடியாக அடிக்கடி விசிட் செய்து, சமைக்கவும் செய்தார். பல மணிநேரம் அம்மா கிச்சனில் செலவிட்டார். இவர் சமைப்பது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகின.

தற்போது தேர்தல் முடிந்துவிட்டது. `அமைச்சரையும் காணோம், உணவையும் காணோம். தேர்தலை மனதில் வைத்து இந்த விளம்பரங்களை எல்லாம் தேடிக்கொண்டிருக்கிறார்' என்று புலம்புகின்றனர் சிகிச்சைக்கு வந்துள்ள நோயாளிகளின் உறவினர்கள்.

கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் தவித்தவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட இந்த உணவு உதவியாக அமைந்தது. ஆனால், இப்போது அமைச்சர் பாராமுகமாக இருக்கிறார் என்கிறார்கள் மக்கள்.

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெரோணிக்கா மேரி, ``சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் என் அம்மா நுரையீரல் சுவாசப் பிரச்னையால் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வெரோணிக்கா மேரி
வெரோணிக்கா மேரி

நான் உடனிருந்து கவனித்துக்கொண்டேன். அப்போது எனக்கு வழங்கப்பட்ட உணவுகள் தரமானதாக இருந்தன. பொருளாதார நெருக்கடியிலிருந்த என்னைப் போன்றோருக்கு உதவியாக அமைந்தது. ஆனால், தற்போது நோயாளிகளின் உறவினர்களுக்கு குடிக்க தண்ணீர்கூட ஏற்பாடு செய்யவில்லை. மக்கள் காசு கொடுத்துதான் தண்ணீர் வாங்கிக் குடிக்கின்றனர். தண்ணீருக்கே இப்படி என்றால் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு என்ன செய்வார்கள்? உணவும் தரமாக இல்லை.

ஏழை எளிய மக்கள் கடன் வாங்கி செலவு செய்கின்றனர். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சென்ற ஆண்டுபோல மதுரை உட்பட தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கிய அதே சிறந்த தரத்தில் இலவசமாக உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு