Published:Updated:

கோவாக்சின் இரண்டாவது டோஸ் கிடைக்காமல் அல்லாடும் மதுரை மக்கள்; நடவடிக்கை எடுக்குமா அரசு?

இளங்கோ பள்ளி தடுப்பூசி மையம்
இளங்கோ பள்ளி தடுப்பூசி மையம்

``கடந்த வாரம் மிகக் குறைவாகவே கோவாக்சின் தடுப்பூசிகள் வந்த நிலையில் அதை 2-வது டோஸ் போட வேண்டியவர்களுக்குப் போடாமல், முதல் டோஸாக போட்டுள்ளார்கள்.''

அரசு மருத்துவமனைகளில் கோவாக்சின் 2-வது டோஸ் போட முடியாமல் மதுரை மக்கள் தவித்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகமும் எந்தவொரு மாற்று ஏற்பாடும் செய்யாததால் தடுப்பூசி மையங்களுக்கு வந்து, ஊசி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்கள்
தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்கள்
கோவிட் தடுப்பூசி: ஒருபக்கம் தட்டுப்பாடு; மறுபக்கம் வற்புறுத்தல்கள்; தனியாரை ஊக்குவிக்கிறதா அரசு?

கொரோனாவுக்கான தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதால் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வத்துடன் முன்வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

கோவிஷீல்டு முதல் டோஸ் போட்டவர்கள் குறைந்தது 12 வாரங்கள் (84 நாள்கள்) கழித்தும், கோவாக்சின் முதல் டோஸ் போட்டவர்கள் குறைந்தது 4 (28 நாள்கள்) கழித்தும் 2-வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டுமென்று அரசு சுகாதாரத்துறை அறிவித்தது. மேலும், கோவிஷீல்டு 2-வது டோஸை அதிகபட்சம் 16 வாரங்களுக்குள்ளும் (112 நாள்கள்), கோவாக்சின் இரண்டாவது டோஸை 6 வாரங்களுக்குள்ளும் (42 நாள்கள்) எடுத்துக்கொண்டால்தான் அதிக பலன் கிடைக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை, 2வது டோஸ் போட்டுக்கொள்ள நினைவூட்டி மத்திய அரசின் கோவின் தடுப்பூசி தளத்திலிருந்து மெசேஜ் வருகிறது. ஆனால், அரசு மருத்துவமனைகளிலோ, ``கோவாக்சின் தடுப்பூசி இருப்பு இல்லை, எப்போது வரும் என்று தெரியாது'' என்று அலட்சியமான பதில் சொல்லப்படுகிறது.

இதனால் 2-வது டோஸ் போடவேண்டியவர்கள் தடுப்பூசி கிடைக்காததால் பதற்றமாகி வருகிறார்கள். மதுரை ராஜாஜி மருத்துவமனை அருகிலுள்ள இளங்கோ பள்ளி தடுப்பூசி மையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள். சமீபத்தில் அங்கு போராட்டமும் நடத்தினார்கள்.

அரசு மருத்துவமனை தடுப்பூசி மையம்
அரசு மருத்துவமனை தடுப்பூசி மையம்

நம்மிடம் பேசிய பொதுமக்கள், ``தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட வசதியில்லாதவர்களும், தனியார் மருத்துவமனைகளின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் அரசு மருத்துவமனைகளைத்தான் நம்பியுள்ளார்கள். கோவாக்சின் முதல் டோஸ் போட்டவர்களுக்கு 28 - 42 நாள்களுக்குள் இரண்டாவது டோஸ் போட வேண்டும் எனத் தெரிந்தும் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.

ஆரம்பத்தில், ஆன்லைன் மூலமும் கஸ்டமர் கேர் மூலமும் பதிவு செய்து தடுப்பூசி முதல் டோஸைப் போட்டோம். அது பிரச்னை இல்லாமலும், கூட்ட நெரிசல் இல்லாமலும் இருந்தது. அதுபோல் 2-வது டோஸ் செலுத்தவும் ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால், கடந்த வாரம் மிகக் குறைவாகவே கோவாக்சின் தடுப்பூசிகள் வந்த நிலையில் அதை 2-வது டோஸ் போடுபவர்களுக்கு போடாமல் முதல் டோஸாக போட்டுள்ளார்கள். ஆன்லைன் மூலம் புக்கிங் வசதி இல்லாததால் அதிகாலையிலேயே இளங்கோ பள்ளி தடுப்பூசி மையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

இந்தக் கூட்ட நெரிசலிலேயே மீண்டும் கொரோனா பரவி விடுமோ என்ற அச்சம் உள்ளது. தடுப்பூசி பதிவுக்கு லிங்க் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் பதிவு செய்தால் இன்னும் 20 நாள்கள் கழித்துத்தான் ஊசி போட முடியும் என்று தேதி காட்டுகிறது. ஏற்கெனவே 40 நாள்களை கடந்து விட்ட நிலையில் இன்னும் தாமதமாகத்தான் ஊசி கிடைக்கும் என்று சொன்னால் என்ன செய்வது? இவ்வளவு தாமதமாக இரண்டாவது டோஸ் செலுத்தினால் தடுப்பூசி பலன் தருமா? மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் மிக அலட்சியமாக இருக்கிறது" என்றனர்.

ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேலு
ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேலு

கோவாக்சின் 2-வது டோஸ் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேலிடம் கேட்டோம். ``கோவாக்சின் இருப்பு இல்லை. அரசு ஒதுக்கினால்தான் அனைவருக்கும் போட முடியும். ஆனால், எப்போது வரும் என்று தெரியாது" என்றவரிடம், ``கோவாக்சின் 2-வது டோஸ் போடுவதற்கான கால இடைவெளி முடிந்தவர்கள் அச்சப்படுகிறார்களே?" என்று கேட்டதற்கு, ``அதற்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது, அரசுதான் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார் பட்டும் படாமல்.

கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு பற்றி, சமீபத்தில் சிவகங்கை வந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, ``தட்டுப்பாடில்லாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் அனைத்து தடுப்பூசிகளும் அனுப்பி வைக்கப்படும்" என்றார்.

A woman receives the  vaccine
A woman receives the vaccine
AP Photo / Aijaz Rahi
கோவாக்சின் தடுப்பூசி: 3-ம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியீடு; முடிவுகள் சொல்வது என்ன?

கோவிஷீல்டு போட்டுக்கொள்பவர்கள் 2-வது டோஸ்க்கு 84 - 112 நாள்கள் வரை காத்திருக்கலாம் என்பதால், பிரச்னை இல்லாமல் உள்ளனர். ஆனால், 28 - 42 நாள்களில் கோவாக்சின் 2-வது தவணை போடவேண்டும் என்ற நிலையில் 40 நாள்கள் கடந்தும் அது கிடைக்காமல் இருப்பதால் பதற்றமடைந்து வருகிறார்கள் மக்கள்.

அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு