Published:Updated:

`மக்களுக்கு நிம்மதி அளிக்கும்’ - கொரோனா பரிசோதனை கட்டணத்தை அதிரடியாகக் குறைத்த மகாராஷ்டிரா!

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மகாராஷ்டிராவில் 53 அரசு ஆய்வகங்களுக்கும் 42 தனியார் ஆய்வகங்களுக்கும் கோவிட்-19 கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள அனுமதி அளித்திருந்தது.

கொரோனா வைரஸ் பரவலில் இந்தியாவிலேயே ஒரு லட்சம் தொற்றாளர்களைக் கடந்து முதல் மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. அங்கு, வைரஸ் பரவல் பன்மடங்கு அதிகரித்து வரும் வேளையில், அரசு அனுமதி அளித்துள்ள தனியார் ஆய்வகங்களில் பெரும்பாலான மக்கள் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனையை அதிக அளவில் மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு அமலில் இருப்பதால் பெரும்பாலானோர் வருமானம் இன்றி தவித்து வரும் வேளையில், மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைக் கட்டணத்தை அதிரடியாக குறைத்து அம்மாநில சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் டோப் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தும் சோதனைக்கான கிட்டுகள் தயாரிப்பு செய்யப்படுவதால், தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் சோதனைக்கான கட்டணத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் குறைக்க பரிந்துரைத்திருந்தது. இதனிடையே, மகாராஷ்டிரா அரசு தனியார் ஆய்வகங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களைக் குறைத்து, மறு நிர்ணயம் செய்ய நான்கு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவில், மாநில சுகாதார உத்தரவாத சங்கத்தின் தலைமை அதிகாரி சுதாகர் ஷிண்டே, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் இணை இயக்குநர் அஜய் சந்தன்வாலே மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் அமிதா ஜோஷி ஆகியோர் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

கொரோனா பரிசோதனை - மாதிரி படம்
கொரோனா பரிசோதனை - மாதிரி படம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மகாராஷ்டிராவில் 53 அரசு ஆய்வகங்களுக்கும் 42 தனியார் ஆய்வகங்களுக்கும் கோவிட்-19 கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள அனுமதி அளித்திருந்தது. அரசு ஆய்வகங்களில் பரிசோதனைகள் கட்டணமின்றி மேற்கொள்ளப்பட்டாலும், தனியார் ஆய்வகங்களில் பரிசோதனைக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தனியார் ஆய்வகங்களுக்குச் சென்று பரிசோதனைக்கான மாதிரியை அளித்து வந்தால் அதற்கான கட்டணமாக 4,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஆய்வகத்தின் சார்பில் வீடுகளிலேயே வந்து மாதிரிகளைப் பெற்றுச் சென்றால் அதற்கான கட்டணமாக 5.200 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப், மக்களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுக்கான கட்டணங்களைக் குறைப்பதாக உத்தரவிட்டுள்ளார். அவரின் அறிவிப்பை அடுத்து, ஆய்வகங்களில் சென்று பரிசோதனை செய்ய கட்டணமாக 4,500 ரூபாயிலிருந்து 50 சதவிகிதத்துக்கும் மேலாக கட்டணத்தை குறைத்து, 2,200 ரூபாய் என அறிவித்துள்ளார். மேலும், வீட்டிலிருந்து மாதிரிகளைப் பெற்று பரிசோதனை செய்வதற்காக முன்பு நிர்ணயிக்கப்பட்ட 5,200 ரூபாயிலிருந்து 2,800 ரூபாயாக குறைத்து உத்தரவிட்டுள்ளார்.

Corona
Corona

கொரோனா வைரஸுக்கான சோதனைக் கட்டணத்தைக் குறைத்த பின், செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் டோப், ``சிறப்புக் குழு அமைத்து தனியார் ஆய்வகங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை ஆய்வு செய்த பின், தற்போது கட்டணத்தை அரசு குறைத்துள்ளது. அரசால் மறுவரையறை செய்யப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக தனியார் ஆய்வகங்கள் கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார். தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்களும் அதிகப்படியான கட்டணம்தான் என்றாலும், மும்பை, புனே போன்ற அதிக சோதனைகள் தேவைப்படும் மாவட்டங்களில் உள்ள தனியார் ஆய்வகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றையும் குறைக்க மாவட்ட நிர்வாகங்கள் முயற்சி எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அழைப்பு விடுப்பதாக கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவிலேயே, கோவிட்-19 கொரோனா வைரஸுக்கான தனியார் ஆய்வகங்களில் வசூலிக்கப்படும் கட்டணம் மகாராஷ்டிராவில் மட்டும்தான் குறைவாக உள்ளதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, 6,24,000-க்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கோவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் என உறுதிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு