``கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் இனிமேல்தான் வரவேண்டும் என்பதில்லை. மூன்றாவது அலை மகாராஷ்டிராவில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. குறிப்பாக மாநிலத்தில் தினசரி தொற்றுப் பதிவு நான்காயிரத்தைக் கடந்துள்ளது. அதனால் விநாயகர் சதுர்த்தி விழாவை மும்பை மக்கள் வீட்டிலிருந்தே கொண்டாடவேண்டும். மேலும் தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்றவற்றை எப்போதும் கடைப்பிடிக்கவேண்டும்" என்று மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கூறியிருக்கிறார்.
கடந்த சில நாள்களாகவே மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மும்பையைத் தவிர புனே மற்றும் தானேவில் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மகாராஷ்டிராவில் அரசியல் நிகழ்சிகள் மற்றும் சமய வழிபாட்டு ஊர்வலங்கள் நடத்துவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
``பண்டிகைகள் மற்றும் சமய வழிபாட்டு நிகழ்ச்சிகளை வருங்காலத்தில்கூட சிறப்பாகக் கொண்டாடிக் கொள்ளலாம். ஆனால் ஆரோக்கியம் மற்றும் விலை மதிப்பற்ற உயிர் போனால் திரும்ப வராது. எனவே மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கவேண்டும்" என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
குறிப்பாக மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் ஒன்றான நாக்பூரிலும் கொரோனா தொற்று பாதிப்பு இரட்டை இலக்கத்தில் அதிகரித்து வருவதாகவும் வெகு விரைவில் அமலில் உள்ள தளர்வுகள் குறைக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று நாக்பூரின் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் நிதின் ரவுத் தெரிவித்திருக்கிறார். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வரக்கூடும் என்று சொல்லப்பட்டிருந்தாலும் நாக்பூரில் மூன்றாவது அலை ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்றும் அவர் மக்களை எச்சரித்திருக்கிறார்.

இரவு 10 மணிவரை திறக்கப்பட்டிருக்கும் நாக்பூரின் உணவகங்கள் இனி 8 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என்றும், மற்ற கடைகள் 4 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் என்றும், இனி வார இறுதி நாள்களில் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர பிற சேவைகள் நிறுத்தப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மிக முக்கியமாக டெல்டா ப்ளஸ் திரிபுள்ள கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் மகாராஷ்டிராவில் அதிகரித்து வருவதால் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் ஒவ்வொரு நோயாளியும் மருத்துவமனைகள் அல்லது சுகாதார மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படவேண்டியது அவசியம் என்று நாக்பூர் முனிசிபல் கார்ப்பரேஷன் உத்தரவிட்டுள்ளது.