குஜராத் மாநிலம் அகமதாபாத் ராஜ்கோட்டை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவரின் ரத்த வகையுடன், வேறு எந்த ரத்த வகையும் பொருந்திப் போகாததால், 2020-ம் ஆண்டில் இருந்து இதய அறுவைசிகிச்சை செய்ய இயலாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகி வந்தார்.
இந்நிலையில், அவருக்கு EMM நெகட்டிவ் என்ற அரிய வகை ரத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ரத்தம் உலகில் மொத்தம் 10 பேருக்கு மட்டும் இருந்து வந்த நிலையில், 11 வது நபராக அந்த முதியவரும் தற்போது பட்டியலில் இணைந்துள்ளார். இது இந்தியாவின் முதல் EMM நெகட்டிவ் ரத்த வகை என்பது குறிப்பிடத்தக்கது.

`ஏஷியன் ஜர்னல் ஆஃப் டிரான்ஸ்ஃபியூஷன் சயின்ஸ்' இதழில் இது தொடர்பான கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அகமதாபாத்தில் உள்ள, பிரதாமா ரத்த வங்கியின் இயக்குநர் மருத்துவர் ரிபால் ஷா கூறுகையில், ``ராஜ்கோட் ரத்த வங்கியில் அந்த முதியவரின் ரத்த வகைக்கு ஏற்ற ரத்தம் கிடைக்காததால் அவரின் ரத்த மாதிரி அகமதாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பைபாஸ் சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு இந்த வகை ரத்தம் தேவைப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த முதியவரின் பிள்ளைகளின் ரத்தம்கூட இவரின் ரத்தத்துடன் பொருந்திப் போகவில்லை. இவரின் ரத்த மாதிரிகள் பின்னர் மேம்பட்ட பகுப்பாய்வுக்காக, சூரத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவில் உள்ள ஓர் ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆய்வு முடிவில், EMM நெகட்டிவ் ரத்தவகை என்று கண்டறியப்பட்டது.

அவரின் உறவினர்களில், அந்த முதியவரின் சகோதரரைத் தவிர வேறு யாரின் ரத்தமும் பொருந்திப்போகவில்லை. இவருக்கு அவரின் சகோதரர் ரத்தம் கொடுத்திருக்கலாம். ஆனால், இதயநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி, மற்ற உடல்நல பாதிப்புகளும் அவரின் சகோதரருக்கு இருந்ததால் அவரின் ரத்தத்தையும் பயன்படுத்த இயலவில்லை" என்று தெரிவித்தார்.
இந்த அரிய வகை ரத்தம் குறித்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அதிகாரியும் ரத்தப் பரிமாற்றத்துறை மருத்துவருமான தமிழ்மணியிடம் பேசினோம்:
``உலகம் முழுவதிலும் மொத்தம் 370 ரத்த வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இந்த EMM நெகட்டிவ் ரத்த வகை, இவை அனைத்திலும் அரிதிலும் அரிதானது. EMM என்ற ஆன்டிஜென் (ஆன்டிபாடிகளை உருவாக்க உடலுக்கு உதவும் ஒரு பொருள்) AB பாசிட்டிவ் என்ற ரத்த வகையில் இல்லாததால், இந்த ரத்த வகை உருவாகிறது. எல்லா AB ரத்தவகை நபர்களுக்கும், EMM ஆன்டிஜென் இருக்கும். குறிப்பிட்ட இந்த நபருக்கு EMM ஆன்டிஜென் இல்லாததால் அரிய வகை ரத்தம் என்று கூறப்படுகிறது.

ரத்தத்தில் உள்ள ஆன்டிஜென், ஆன்டிபாடியை வைத்தே அது எந்த வகை ரத்தம் என்று வரையறுக்கப்படும். A குரூப் என்றால் A ஆன்டிஜென், B குரூப் என்றால் B ஆன்டிஜென். AB குரூப் என்றால் AB ஆன்டிஜென் இருக்கும்.
EMM என்ற நெகட்டிவ் ஆன்டிஜென், பொதுவாகவே எல்லா ரத்த வகைகளிலும் இருக்கும். EMM நெகட்டிவ் ஆன்டிஜென்கள் உள்ள ரத்தத்தை ஆய்வு மையங்களில் ஆராய்ச்சி செய்துதான், ரத்த வகையைக் கண்டுபிடிப்பார்கள். இது மிகவும் கடினமான ஆய்வும்கூட.
இவ்வகை ரத்தம் உள்ள நபரின் ரத்த சொந்தங்களிடம் இருந்து ரத்தத்தைச் சேகரித்து அவசர காலங்களில் பயன்படுத்தலாம். இந்த வகை ரத்தம் உள்ள நபர்களைக் கண்டறிந்து அவர்களின் பெயர், தொலைபேசி எண் போன்ற தகவல்களைப் பெற்று வைத்துக்கொண்டு, வரும் காலத்தில் அவசர சிகிச்சைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வகை ரத்தம் மொத்தமே 10 பேருக்குதான் இருக்கிறது.

இதுபோன்று அரிய ரத்த வகை உள்ள நபர்களைக் கண்டறிந்து, அவர்களிடம் இருந்து ரத்தம் தானம் பெற்று ரத்த வங்கிகளில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இல்லையெனில், இந்த அரிய ரத்த வகை உள்ளவர்கள், தானாக முன்வந்து தானம் கொடுத்து சேமித்து வைக்கலாம்.
அரியவகை ரத்தம் உள்ள நபர்களின் உறவினர்களில், குறிப்பாக AB பாசிட்டிவ் ரத்தம் உள்ள நபர்களின் ரத்தத்தைப் பரிசோதித்து அதில் EMM நெகட்டிவ் என்று வரும் நபர்களின் ரத்தத்தை சேமித்து வைப்பது நல்லது. இப்படிச் சேமித்து வைத்தால்தான் அவசர காலங்களில் பயன்படுத்த முடியும். இந்த ரத்த வகை உள்ளவர்களுக்கு முடிந்தவரை ரத்த இழப்பு இல்லாமல் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரிதான ரத்த வகையைக் கொண்டவர்கள் தானம் செய்யும்போது எந்த ரத்த வகை என்று மருத்துவர் கேட்கும்பொது AB என்று சொல்லிவிடுவார்கள். எனவே, AB பாசிட்டிவ் ரத்த வகை உள்ளவர்கள் ரத்ததானம் செய்ய வரும்போது மருத்துவர்கள் அவர்களிடம் ரத்த வகையில் எதாவது பிரச்னை இருக்கிறதா, குடும்ப நபர்களில் யாருக்காவது பிரச்னை இருக்கிறதா என்று கேட்டுவிட்டு EMM ஆன்டிஜென்களை பரிசோதித்தால் அரிய ரத்த வகையை அறியலாம்.

இதுபோன்ற அரிய ரத்த வகை உள்ளவர்கள் தாராளமாக எப்போதும் போல் ரத்ததானம் செய்யலாம். 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம். இப்படிச் செய்வதன் மூலம் பிரசவம், விபத்து போன்ற அவசர காலங்களில் உபயோகித்துக்கொள்ளலாம். இந்த வகை ரத்தம் உள்ள நபர்களுக்கென பிரத்யேகமான மருத்துவச் சிக்கல்கள், நோய்கள் என்று எதுவும் வராது'' என்றார்.