என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

இளமை திரும்புதே...
பிரீமியம் ஸ்டோரி
News
இளமை திரும்புதே...

வயதான ஆண்களைவிட வயதான பெண்கள் சந்திக்கிற பிரச்னைகள் சற்று அதிகம்தான்.

அறுபது வயதை முதுமையின் தொடக்கமாகப் பார்த்த காலம் மாறி, இன்று சதமடிக்கும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆரோக்கியத்தின் மீதான அக்கறை, மருத்துவ முன்னேற்றம் என இதற்குப் பல காரணங்கள்...
 வி.எஸ்.நடராஜன் - பூர்ண சந்திரிகா - மெரிட்டா ஜோசப்
வி.எஸ்.நடராஜன் - பூர்ண சந்திரிகா - மெரிட்டா ஜோசப்

எனவே, அறுபதில் அடியெடுத்து வைப்பதை ஒருவகையில் `முதுமையில் இளமை’ என்றே சொல்லலாம். இந்த வயதில் ஏற்படுகிற உடல், மனநல பிரச்னைகளை அடையாளம் காணவும் அவற்றுக்குச் சரியான முறையில் தீர்வு காணவும் தெரிந்துகொண்டால், வயதையும் வாழ்வியல் நோய்களையும் வெல்லலாம். அதற்கு வழிகாட்டவே இந்தப் புத்தகம்.

வயதான ஆண்களைவிட வயதான பெண்கள் சந்திக்கிற பிரச்னைகள் சற்று அதிகம்தான். உதாரணத்துக்கு, மெனோபாஸ் காரணமாகப் பெண்கள் சந்திக்கிற உடல்நல பிரச்னைகளையும், கணவரையும் பிள்ளைகளையும், பொருளா தாரத்தில் சார்ந்து இருப்பதால் வருகிற மன அழுத்தத்தையும் குறிப்பிடலாம்.

சீனியர் சிட்டிசன் பெண்களுக்கான உடல் நலம் குறித்து முதுமை நோய் மருத்துவர் வி.எஸ்.நடராஜனும், மனநலம் குறித்து மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகாவும், பொழுதுபோக்கு குறித்து முதியோர்நல அமைப்பான டிக்னிட்டி ஃபவுண்டேஷனின் டெபுடி மேனேஜர் மெரிட்டா ஜோசப்பும் இங்கே விரிவாகப் பேசுகிறார்கள்.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

எலும்பு வலிமை இழத்தல் என்கிற ஆஸ்டியோபொரோசிஸ்!

இன்றைய லைஃப்ஸ்டைலில், முப்பதுகளிலேயே ஆஸ்டியோ பொரோசிஸ் பிரச்னையால் அவதிப்பட ஆரம்பித்துவிட்டார்கள் பெண்கள். இந்த நிலையில் வயதான பெண்களின் நிலைபற்றிச் சொல்லவே வேண்டாம். பெண்களுக்கு வயதாக ஆக அவர்களுடைய எலும்பின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். ஆண்களைவிட பெண்கள் சீக்கிரமே பலவீனமடைவதற்கு எலும்பு வலிமை இழத்தல்தான் முக்கியமான காரணம்.

எலும்பு வலிமை இழத்தலுக்கான காரணங்கள்

முன்பெல்லாம் பெண்களுக்கு 50 வயதுகளில்தான் மெனோபாஸ் வந்துகொண்டிருந்தது. தற்போது நாற்பதுகளிலேயே வந்துவிடுகிறது. மெனோபாஸ் வந்த பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடும். இதனால் அவர்களுடைய எலும்பின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். இப்படிப்பட்ட பெண்களுக்கு ஆஸ்டியோபொரோசிஸ் வெகு சீக்கிரம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

உடலில் கால்சியம் சத்து குறைவாக இருக்கிற பெண்களுக்கும், தைராய்டு பிரச்னை இருக்கிற பெண்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வருகிற முதிய பெண்களுக்கும் எலும்புகள் வலுவில்லாமல்தான் இருக்கும்.

உடல்நலப் பிரச்னை காரணமாகப் படுத்த படுக்கையாக இருக்கிற வயதான பெண்களின் எலும்புகளும் பலவீனமாகத்தான் இருக்கும்.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

எலும்பு வலிமை இழத்தலுக்கான அறிகுறிகள் என்னென்ன?

வயதான பெண்கள் அடிக்கடி `உடம்பு வலிக்குது’ என்று சொல்லிக்கொண்டே இருந்தால், அவர்களுக்கு எலும்பு வலிமை இழத்தல் பிரச்னை இருக்கலாம். ஒரு சிலர் உடல் மெலிந்துகொண்டே போவார்கள். இதுவும் எலும்பின் அடர்த்தி குறைவதன் அறிகுறிதான். இன்னும் சிலருக்கு உடல் வளைந்து உயரம் குறைய ஆரம்பிக்கும். இவற்றைத்தாண்டி வேறு பெரிதான அறிகுறிகள் தெரிவதில்லை. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட முதிய பெண்கள் தவறி கீழே விழுந்தால் உடலின் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்படும்.

எப்படிக் கண்டறிவது?

எலும்புகள் வலிமை இழந்துகொண்டிருப்பதை எலும்பின் அடர்த்தியைக் கண்டறியும் டெக்ஸா ஸ்கேன் (Dexa Scan) மூலம் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம்.

வராமல் எப்படித் தடுப்பது?

 • தினம்தோறும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் எலும்புகள் வலுவாக இருக்கும்.

 • தினமும் குறைந்தது அரை மணி நேரம் முதல் அதிகபட்சம் ஒரு மணி நேரம் வரை சூரிய ஒளியில் நிற்கலாம்.

 • காபி, டீ அருந்துவதைக் குறைத்துக்கொண்டால் எலும்புகள் சீக்கிரம் பலவீனமடையாது.

 • ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்னைகளுக்கு ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்றால், மருத்துவரைக் கேட்டு அவற்றின் அளவைக் குறைத்துச் சாப்பிடலாம்.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

உதவி செய்யும் உணவுகள்

 • கால்சியல் சத்து நிறைந்த பால், சிறுதானியங்கள், குறிப்பாகக் கேழ்வரகு ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 • தினம்தோறும் ஏதாவது ஒரு கீரையைச் சாப்பிட வேண்டும். கிட்னியில் பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு அதற்கேற்ற உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும்.

 • கறிவேப்பிலை என்றாலே இரும்புச்சத்தும் சுண்ணாம்புச்சத்தும்தான். அதனால், கறிவேப்பிலையைத் தட்டில் ஒதுக்கிவைக்காமல் சாப்பிட்டுவிடுங்கள்.

 • இறால், நண்டு, மீன் ஆகியவற்றிலும் சுண்ணாம்புச்சத்து அதிகம் இருக்கிறது. சைவம் சாப்பிடுபவர்கள் டாக்டருடைய ஆலோசனையைக் கேட்டு கால்சியம் மாத்திரை சாப்பிடலாம்.

பல மருத்துவர்களைத் தேட வைக்கும் தைராய்டு பிரச்னை!

பெண்களுக்கு வயதாகும்போது தைராய்டு சுரப்பியிலிருந்து தைராய்டு சுரப்பது குறைய ஆரம்பிக்கும். இதை `மிக்ஸ்சோடிமா’ (Myxedema) என்று சொல்வோம். தைராய்டு பிரச்னை வந்தவர்கள் காது சரியாகக் கேட்கவில்லை என்று காது, மூக்கு, தொண்டை மருத்துவரைச் சந்திப்பார்கள். மூட்டு வலிக்கிறது என்று ஆர்த்தோ டாக்டரைப் பார்க்கப் போவார்கள். இதயத்தில் பிரச்னை என்று இதயநோய் மருத்துவரைச் சந்திப்பார்கள். மொத்தத்தில் தைராய்டு என்ற ஒரு பிரச்னை பல டாக்டர்களைப் பார்க்கும்படி செய்துவிடும்.

காரணங்கள்

 • சில நேரத்தில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியானது, நம்முடைய உடலில் இருக்கிற செல்களுக்கு எதிராகச் செயல்பட ஆரம்பிக்கும். இதை ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் என்போம். இதனால் தைராய்டு சுரப்பது குறையும்.

 • தைராய்டு சுரப்பியில் கட்டிகள் இருந்து, அதை அறுவைசிகிச்சை செய்திருந்தால் `மிக்ஸ்சோடிமா’ வரும்.

 • புற்றுநோய் இருந்து அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் தைராய்டு சுரப்பது குறையும்.

 • டிப்ரெஷனுக்கான மருந்துகள் சாப்பிட்டாலும் தைராய்டு சுரப்பு குறையும்.

 • தைராய்டு மாத்திரைகளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டாலும் தைராய்டு சுரப்பு குறையும்.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

அறிகுறிகள்

முதுமைக்கான அறிகுறியும் தைராய்டுக்கான அறிகுறியும் ஒன்றுபோலவே இருப்பதால் மிக்ஸ்சோடிமாவைக் கண்டுபிடிப்பது சிரமம். உதாரணத்துக்குச் சொல்வதென்றால், தைராய்டு வந்தால் முடி கொட்டும், சருமம் வறட்சியாகும், மலச்சிக்கல் ஏற்படும், மூட்டுகளில் இறுக்கம் ஏற்படும், உடலில் மந்தநிலை ஏற்படும், நடை தள்ளாடும், ஞாபக மறதி வரும். இவற்றுடன் உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, மாரடைப்பு, இதய பலவீனம் போன்ற பிரச்னைகளும் வரும். இவை அத்தனையும் முதுமைக்கும் பொருந்தும்தானே... தவிர, தைராய்டு வந்தால் நாக்கு சற்று தடித்து தொண்டை கரகரப்பாக இருக்கும்.

வயதான பெண்மணிகள் `நான் முன்ன மாதிரி சுறுசுறுப்பா இல்ல டாக்டர். ரொம்ப சோர்வா ஃபீல் பண்றேன். உடம்பெல்லாம் வலிக்குது’ என்று சொன்னால், அதற்கு முதுமை மட்டுமல்ல, தைராய்டும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எப்படிக் கண்டறியலாம்?

சிம்பிளான ரத்தப் பரிசோதனையின் மூலமே தைராய்டு இருப்பதைக் கண்டறிந்துவிடலாம். T3, T4 நார்மலாக இருந்து TSH அதிகமாக இருந்தால் தைராய்டு பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். சிலருக்கு தைராய்டு சுரப்பியில் கட்டி இருக்கும். அதை ஸ்கேன் செய்து கண்டுபிடித்துவிடலாம். தைராய்டு என்றாலே தொண்டை வீங்கிவிடும் என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தைராய்டு இருக்கிற பலருக்கும் தொண்டை வீங்குவதில்லை என்பதே மருத்துவ உண்மை.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

சரி செய்ய முடியுமா?

ரத்தப் பரிசோதனையில் தைராய்டு பாதிப்பு இருப்பது தெரியவந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் தைராக்ஸின் மாத்திரையைச் சாப்பிட வேண்டும். அதுவும் விடாமல் சாப்பிட்டு வர வேண்டும். ஒரு சிலர் மூன்று மாதங்கள் சாப்பிட்டுவிட்டு பிறகு நிறுத்தி விடுவார்கள். ரத்தப் பரிசோதனையில் TSH அளவு குறைந்திருந்தால். மாத்திரையின் மில்லிகிராம் அளவை மருத்துவர்தான் குறைத்து பரிந்துரைப்பார். நீங்களாகவே செய்யக் கூடாது. வயதான பெண்களுக்கு தைராய்டு பிரச்னை வருவது நார்மல்தான். ஆனால், அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

சிறுநீர்க்கசிவு

வயதான பெண்களுக்கு இருமும்போதும் தும்மும்போதும் சிறுநீர் கசிய ஆரம்பிக்கும். அவர்களால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உந்துதலைச் சிறிது நேரம்கூட கன்ட்ரோல் செய்ய முடியாது. இதனால் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டார்கள். இவர்களால் நீண்ட நேரம், நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது. இதனால் வெளியுலகத் தொடர்பு குறைந்துபோய் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். ஒரு தலைமுறைக்கு முன்னால் இந்தப் பிரச்னையை வெளியே சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டு டாக்டரிடம்கூட வர மாட்டார்கள். தற்போது இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய ‘யூரோ கைனகாலஜிஸ்ட்’ என நிபுணர்களே இருக்கிறார்கள்.

காரணங்கள்

 • நிறைய குழந்தைகள் பெற்ற அம்மாக்களுக்கு சிறுநீர்க்கசிவு ஏற்படும்.

 • கர்ப்பப்பையிலும் சிறுநீர்ப்பையிலும் கட்டிகள் வந்தால், அவற்றை வெஜைனா வழியாகத்தான் அறுவைசிகிச்சை செய்வார்கள். இந்த அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பெண்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம்

 • பருமனாக இருப்பவர்களுக்கு சிறுநீர்க்கசிவு பிரச்னை வரலாம்.

 • வருடக்கணக்கில் மலச்சிக்கல் தொல்லை இருப்பவர்களுக்கும் சிறுநீர்க்கசிவு ஏற்படலாம்.

 • வயதாகும்போது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைவதும் சிறுநீர்க்கசிவுக்கு ஒரு காரணம்தான்.

 • தீர்வுகள்

 • நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, நிறைய தண்ணீர் குடித்து வந்தால், மலச்சிக்கல் சரியாகும். இதன் தொடர்ச்சியாக சிறுநீர்க்கசிவு சரியாவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

 • ஆஸ்துமா, பிராங்கைட்டீஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு அடிக்கடி இருமலும் தும்மலும் வரும். இருமும்போதும் தும்மும்போதும்தானே சிறுநீர்க்கசிவு வருகிறது. அதனால், முதலில் இந்த இரண்டு பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுத்துச் சரி செய்துவிட்டால் சிறுநீர்க்கசிவு ஏற்படுவது தானாகவே குறைய ஆரம்பிக்கும்.

 • ஈஸ்ட்ரோஜென் ஜெல்லை பிறப்புறுப்பில் தினமும் இரண்டு வேளை தடவிவந்தால் சிறுநீர்க்கசிவு குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது.

 • அடிவயிற்றுத் தசையை வலிமையடையச் செய்கிற `பெல்விக் எக்ஸர்சைஸ்' செய்வதும் நல்ல பலன் தரும். ஒரே நேரத்தில் ஆசன வாயையும் சிறுநீர் வாசலையும் இறுக்கிக்கொள்ள வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவந்தால், சிறுநீர்க்கசிவு கட்டுக்குள் வந்துவிடும். இந்தப் பயிற்சியிலும் சரியாகவில்லையென்றால், சிறிய அறுவைசிகிச்சையின் மூலம் சிறுநீர்க்கசிவைக் கட்டுப்படுத்தலாம்.

புற்றுநோய்

மார்பகப் புற்றுநோய்தான் பல காலமாகப் பெண்களைப் பயமுறுத்தி வந்தது. சமீபகாலமாகக் கர்ப்பப்பைவாய் புற்றுநோயும் பெண்களை அதிகம் தாக்குகிறது. கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இருந்தால் வெள்ளைப்படுதல், சிறுநீரில் ரத்தமும் சேர்ந்து வெளியேறுதல், அடிவயிற்றில் வலி ஆகிய அறிகுறிகள் இருக்கும். சாதாரண நோய்த் தொற்றுக்கும் இதே அறிகுறிகள்தான் தென்படும். அதனால் `பாப் ஸ்மியர்' டெஸ்ட் எடுத்துப் பார்ப்பார்கள். அது பாசிட்டிவ்வாக இருந்தால் பயாப்சி எடுத்துப் பார்ப்பார்கள். இந்த பாப் ஸ்மியர் பரிசோதனையை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே செய்கிறார்கள். தனியார் மருத்துவமனைகளிலும் இந்தப் பரிசோதனையின் விலை குறைவுதான். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் உயிரிழப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

கொழுப்பா, புற்றா?

மார்பகங்களில் சிறிய கட்டிபோல வரும். சுத்தமாக வலி இருக்காது. பலர் இதைக் கொழுப்புக்கட்டி என்று

நினைத்துக்கொள்கிறார்கள். கவனிக்காமல் விட்டால் அக்குள் வரை பரவிவிடும். ஒரு சிலருக்கு நுரையீரல், கல்லீரல் வரைக்கும் கூட பரவிவிடும். பரிசோதனை செய்தால்தான் கேன்சர் இருப்பது தெரியவரும்.

மார்பகப் புற்றுநோய்க்கு எந்த அறிகுறியும் தெரியாது. பரவிய பிறகுதான் கண்டுபிடிக்க முடியும். அதனால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்களைத் தாங்களே பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். சின்னதாக வித்தியாசம் தெரிந்தாலும் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் வேறு யாருக்காவது புற்றுநோய் இருந் திருந்தால் வருடத்துக்கு ஒரு தடவை மேமோகிராம் செய்து கொள்வது பாதுகாப்பு.

பருமன்

பருமனுக்கு உடலுழைப்பு இல்லா ததும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதும்தான் முக்கியமான காரணங்கள். தைராய்டு குறைபாடு இருப்பவர்களுக்கும் உடல் எடை போடும். டயாபடீஸ் அதிகமாக இருந்து அதற்காக ரெகுலராக

இன்சுலின் ஊசிபோட்டுக் கொள்பவர் களுக்கும், ஸ்டீராய்டு மருந்துகள் சாப்பிடுபவர்களுக்கும் உடல் பருமனாகும்.

மெனோபாஸுக்குப் பிறகு, வருகிற ஹார்மோன் மாறுபாடுகளாலும் சீனியர் சிட்டிசன் பெண்கள் உடல் பருமனால் அவதிப்படுவார்கள். உடல் எடை அதிகமாக இருந்தால் அதிகக் கொழுப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு, ஹார்ட் அட்டாக், மூட்டுவலி, குடலிறக்கம் போன்ற பிரச்னைகள் வரிசைகட்டி வரும்.

அதனால் வயதான பெண்கள் தினமும் சாப்பிட வேண்டிய 1200 கலோரிக்குப் பதிலாக 800 கலோரி மட்டும் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், கிழங்குகள், எண்ணெய் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

சீனியர் சிட்டிசன் பெண்களுக்கான மனநலம்!

‘நம்முடைய நாட்டில் உடல்நலம் சரியில்லை யென்றால்தான் மருத்துவமனைக்கு வருவார்கள். மனநலம் சரியில்லையென்றால் ‘மனக்கவலைக்கு மருந்தே கிடையாது’ என்று வீட்டிலேயே குமைந்து கொண்டிருப்பார்கள். அதனால், வயதான பெண்கள் மனநல மருத்துவரைச் சந்திக்க வருவதே அபூர்வம் தான்.

உடலுக்கு வருகிற பிரச்னைகளில் ரத்த அழுத்தம், நீரிழிவு என்று சொல்வதைப்போல மனநலனில் தனித்தனியாகப் பெயர் குறிப்பிடுவது கடினம். சூழ்நிலைகளுக்கேற்ப வயதான பெண்களின் மனநலம் பாதிக்கப்படும். அந்தச் சூழ்நிலைகளை மாற்றுவது, மனநல மருத்துவரைச் சந்திப்பது, தேவைப்பட்டால் உளவியல் சிகிச்சைகள் எடுத்துக்கொள்வதுதான் இதற்குத் தீர்வு!

மனநலப் பிரச்னைக்கான இரண்டு காரணங்கள்!

சீனியர் சிட்டிசனில் பெண்களுக்குத்தான் அதிகம் மனநல பிரச்னைகள் வருவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அதற்கு முதல் காரணம் என்ன தெரியுமா?

வயதான ஆண்களைவிட வயதான பெண்களுக்குத் தான் உடல்நல பிரச்னைகள் அதிகமாக வருகின்றன. அதனால்தான், இவர்களுக்கு மனநலம் தொடர்பான பிரச்னைகளும் அதிகம் வருகின்றனவாம். இரண்டாவது காரணம், பண விஷயத்தில் வயதான பெண்களில் பெரும்பாலானோர் மற்றவர்களையே சார்ந்து இருக்கிறார்கள். கை நிறைய காசு வைத்துப் புழங்கும் சீனியர் சிட்டிசன் பெண்கள் நம் நாட்டில் மிக மிகக் குறைவு.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

கிராமத்துப் பெண்களுக்கு வாய்ப்பு அதிகம்!

நகரத்து முதிய பெண்களைவிடக் கிராமத்து முதிய பெண்கள் சீக்கிரம் மனநல பிரச்னைகளுக்கு ஆளாகிவிடுகிறார்கள். இதற்குக் காரணம், அவர்களுக்குப் படிப்பறிவு குறைவாக இருப்பதுதான். படிப்பறிவு குறைவாக இருப்பவர்களுக்கு டிமென்ஷியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றன ஆராய்ச்சிகள். இந்த ஞாபக மறதியும் வயதான பெண்களின் மனநலனை அலைபாய வைத்துவிடுகிறது.

படுத்த படுக்கையாக இருந்தால் வரும்!

நீண்டகால உடல்நல பிரச்னைகள், உடல் பலவீனம், பக்கவாதம் போன்ற காரணங்களால் படுத்த படுக்கையாகிவிடுகிற முதிய பெண்கள் சந்திக்கிற மனநல பிரச்னைகள் ஏராளம். கணவர், பிள்ளைகள், வீடு, அலுவலகம் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் உடல் பலவீனமாகிப் படுக்கையில் விழுந்து விட்டால் ‘யாருக்கும் பலனில்லாமல் இப்படி படுக்கையில் கிடக்கிறோமே’ என்கிற சுய இரக்கமே அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுத்துவிடும். நம் நாட்டில் மனநலன் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், படுக்கையில் கிடக்கிற முதிய பெண்களைக் குடும்பத்தினர் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வதே இல்லை. நம் நாட்டில் இன்று வரை இதுதான் எதார்த்தம்.

கவலைக்கிடமாகும் வசதியற்ற பெண்களின் நிலைமை!

கார்ப்பரேட் மருத்துவமனைகளில் சிகிச்சை செய்துகொள்பவர்களை அனைத்து நோயியல் நிபுணர்களும் பரிசோதிப்பார்கள் என்பதால், அந்தப் பெண்களுக்கு மனநல சிகிச்சையும் கிடைத்துவிடும் அல்லது இவருக்கு மனநல சிகிச்சையும் தேவைப்படுகிறது என்பதையாவது அங்கே கண்டுபிடித்துவிடுவார்கள். இந்த வசதி, வாய்ப்பு கிடைக்காத வயதான பெண்களின் நிலைதான் மிகவும் கவலைக்கிடமானது.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

குடும்பத்தினரின் கஷ்டம் பார்த்து வரும் மன உளைச்சல்!

இன்றைக்கு உயிர் வாழும் காலம் அதிகரித்துவிட்டது. அதே நேரம் புற்றுநோய் உள்ளிட்ட தொற்றாநோய்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. இதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும் போது அவை தருகிற பக்க விளைவுகள் மற்றும் பண இழப்புடன், வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் அலைந்துகொண்டிருக்கும் குடும்பத்தினரின் கஷ்டமும் வயதான பெண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. ‘தான் எல்லாருக்கும் பார்த்துப் பார்த்துச் செய்தது போய் தனக்கு எல்லாரும் செய்யும்படி ஆகிவிட்டதே’ என்கிற மனக்கவலை பெண்களுக்கே உரிய ஒன்று. அதேநேரம் நோய் வந்து, குடும்பத்தினர் பார்க்காவிட்டாலும் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள்.

சார்ந்திருப்பதால் வருகிற மன அழுத்தம்!

மிடில் கிளாஸ் குடும்பங்களில் வயதான பெண்கள் சந்திக்கிற பிரச்னைகள் வேறு மாதிரியாக இருக்கும். உதாரணத்துக்கு, கணவர் இறந்த பிறகு, முழுக்க முழுக்க மகனையும் மருமகளையும் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருப்பார்கள். சொந்த வீட்டிலேயே கிட்டத் தட்ட சம்பளம் வாங்காத வேலைக்காரியாகத்தான் இவர்கள் இருப்பார்கள். இவர்களுடைய மன அழுத்தத்தை இரவுகளும் தலையணையும்தான் அறியும்.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

தூக்கத்தைக் கெடுக்கும் மன அழுத்தம்!

லோயர் மிடில் கிளாஸ் குடும்பங்களில் ஓர் அறையோ, கிச்சனுடன் சேர்த்து இரண்டு அறைகளோதான் இருக்கும். கணவரை இழந்த அம்மாக்கள் மகனுடன் இருப்பார்கள். அந்த மகனுக்குத் திருமணமாகிவிட்டால், வயதான அம்மா இரவு நேரங்களில் உறங்குவதற்கு வாசலுக்குத்தான்

வர வேண்டும். முன்காலத்தைப்போல தற்போது கிராமங்களில் இருக்கிற வீடுகளில்கூட திண்ணைகள் இருப்பதில்லை. இப்படிப்பட்ட அம்மாக்கள் சினிமாக்களில் காட்டப் படுவதுபோல இரவு நேரங்களில் தோழிகளின் வீடுகளிலோ, கோயில் களிலோ தங்க முடியாது. இந்தக் கையறு நிலையும் வயதான பெண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

பிள்ளைகள் அங்கே... அம்மாக்கள் இங்கே...

இது வெளிநாட்டில் செட்டிலாகிவிட்ட அல்லது வேலைபார்க்கிற பிள்ளைகளின் அம்மாக்கள் சந்திக்கிற மனக்கஷ்டம். வசதியான வீடு, மாதம் பிறந்தால் வங்கிக்கு வந்துவிடும் பணம், பார்த்துக்கொள்ள வேலையாட்கள் என்று பார்ப்பதற்கு செளகர்யமாக வாழ்வதுபோல தான் இருக்கும். ஆனால், ஒரு மருத்துவ அவசரத்துக்குக்கூட பிள்ளைகள் பக்கத்தில் இல்லாமல், சொந்தக்காரர்களின் உதவியை எதிர்பார்த்து வாழ்கிற அவர்களின் மனநிலையை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. இந்த வகை முதிய பெண்கள், கணவர் உயிருடன் இருக்கும்வரை தனிமையின் கொடுமை தெரியாமல் இருப்பார்கள். கணவர் இறந்த பிறகு, மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில் வெளிநாடு வாழ் பிள்ளைகளின் பெற்றோர்கள்தாம் அதிகம் டிப்ரெஷனில் அவதிப்பட்டார்கள்.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

கணவரின் பிரிவினால் வருகிற மன அழுத்தம்!

கணவருடன் அந்நியோன்னியமாக வாழ்ந்த பெண்கள், கணவர் மறைந்தவுடன் பித்துப் பிடிக்கிற நிலைக்குச் சென்றுவிடுவார்கள். சிலர் உச்சபட்சமாக ‘செத்துட்டா போதும்’ என்பார்கள். தொடர்ந்து டிப்ரெஷனிலேயே இருப்பதால் இந்த வகை முதிய பெண்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாகிவிடும். இதனால் சின்னச் சின்ன உடல்நலக் கோளாறுகள் இவர்களை எளிதில் தாக்கும். இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்கெனவே இருக்கிற நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு மருந்து எடுத்துக்கொள்ளவும் மாட்டார்கள். சிலர் இதைக் கவனமாகவே செய்வார்கள். இப்படிப்பட்டவர்களை அதிலிருந்து மீட்பது மிகவும் கடினம்.

இயல்பால் வருகிற பிரச்னை இது!

வயதான பெண்களின் இயல்புகளில் இதுவும் ஒன்று. அதாவது, மனக்கஷ்டத்தில் இருக்கும்போதோ, குடும்பத்தினர் தொடர்பான யோசனைகளில் இருக்கும்போதோ உடல் உபாதைகளுக்கான மருந்து, மாத்திரைகளை நேரத்துக்குச் சாப்பிட மாட்டார்கள். அல்லது சாப்பிடவே மாட்டார்கள். சிலர் மறந்து விடுவார்கள். பிள்ளைகள் கவனித்து விசாரித்தாலும் ‘சாப்பிட்டுட்டேன்’ என்று மழுப்பிவிடுவார்கள்.

என்றைக்காவது ஒரு நாள் நீரிழிவோ, ரத்த அழுத்தமோ அதிகமாகி மயக்கம் போட்டு விழும்போதுதான் குடும்பத்துக்கு இவர்கள் மாத்திரை சாப்பிடவில்லை என்பதே தெரியவரும். இதனால், இவர்களைப் பராமரிக்கிற பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகி, அந்த வெறுப்பை இவர்கள் மீதே காட்டு வார்கள். இதுவும் வயதான பெண்களை மன அழுத்தத்தில் தள்ளும்.

ஏற்கெனவே மனநோயுடன் இருந்தவர்களுக்கு, வயதாகும்போது அது இன்னும் அதிகமாகலாம்.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

டிமென்ஷியா அலர்ட்

ஒரு சிலர் எப்போது பார்த்தாலும் கவலையாகவே இருப்பார்கள். இது டிமென்ஷியா என்ற ஞாபக மறதிக்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம். அதனால், எப்போதும் கவலையாக இருப்பதுபோல் உணரும் சீனியர் சிட்டிசன் பெண்கள் உடனே மருத்துவரைப் பார்த்துவிடுவது நல்லது.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

தூக்கமின்மையும் வரவழைக்கும்!

வயதாக ஆக, தூங்குகிற நேரம் குறைய ஆரம்பிக்கும். ஒரு சிலருக்கு இது தூக்கமின்மை பிரச்னையாகவும் மாறி இருக்கும். தொடர்ந்து தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களின் மனநலனும் வெகு விரைவில் பாதிக்கப்படும்.

பணி ஓய்வால் வருகிற டிப்ரெஷன்!

அலுவலக வேலை, அதிகாரம், கை நிறைய சம்பளம் என்று மதிப்பாக வலம்வந்தவர்கள் பணி ஓய்வுபெற்றவுடன் அதெல்லாம் கிடைக்காமல் டிப்ரெஷனில் மாட்டிக்கொள்வார்கள்.

வன்கொடுமைகளால் வருகிற டிப்ரெஷன்!

மருமகள் கொடுமை, பிள்ளைகள் அடிப்பது, திட்டுவது போன்ற வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகிற வயதான பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் மற்றவர்களைவிட வெகு சீக்கிரமே பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

தொற்றாநோய்கள் தரும் மன உளைச்சல்!

புற்றுநோய், கிட்னி ஃபெயிலியர் போன்ற மரணத்துக்கேதுவான நோய்கள் வரும்போது, முதிய பெண்களுக்கு வாழ விருப்பமில்லாமல் போய்விடுகிறது. இதுவும் அவர்களை டிப்ரெஷனுக்குள் தள்ளி விடுகிறது.

மனநோய்க்கான இரண்டு தீர்வுகள்

பாதிக்கப்பட்டவர்களிடம் பேசி பிரச்னையைச் சரி செய்ய முயற்சி செய்வது `நான்பார்மகலாஜிக்கல்' என்கிற மருந்தில்லா தீர்வு. பிரச்னையைக் கண்டறிந்து தேவைப்பட்டால் மருந்து, மாத்திரை கொடுத்துச் சரிசெய்வது `பார்மகலாஜிக்கல்' மருத்துவத் தீர்வு.

நெகட்டிவ் எண்ணங்களை மாற்றுவோம்!

பாதிக்கப்பட்டவர்களுடைய நெகட்டிவ் எண்ணங்களைக் கண்டறிந்து அவற்றை மாற்றுவோம். உதாரணத்துக்கு ‘நான் யாருக்குமே உபயோகம் இல்லாமல் இருக்கிறேன்’ என்று வருத்தப்படுபவர்களிடம், அவர்கள் குடும்பத்தைப் பராமரித்துக்கொண்டிருந்த காலத்தையும் அவர்கள் வாழ்க்கையில் சாதித்த விஷயங்களையும் நினைவுபடுத்தித் தேற்றுவோம்.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

பிடித்ததைச் செய்யச் சொல்வோம்!

மனதுக்குப் பிடித்ததைச் செய்தாலே பாதி மனநோய் போய்விடும். அதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அவற்றைச் செய்யச் சொல்வோம். உதாரணத்துக்கு, எந்த யோசனையும் இல்லாமல் செய்கிற வாக்கிங், ஆன்மிக சுற்றுலா அல்லது கோயில் விசேஷங்களில் பங்கெடுத்துக் கொள்வது, புத்தகம் வாசிப்பது என்று செய்யலாம். படுத்த படுக்கையாக இருப்பவர்கள் ஆடியோ புத்தகங்கள் கேட்கலாம். அல்லது பிடித்த சினிமாக்களைப் பார்க்கலாம்.

மருந்துகளும் மனநோய் தீர்க்கும்!

பாதிக்கப்பட்டவர்களின் வயதுக்கேற்றபடி, அவர்கள் ஏற்கெனவே சாப்பிட்டுக்கொண்டிருக்கிற மருந்துகளுடன் சேர்த்துச் சாப்பிடும்போது பக்க விளைவுகள் வராமல் இருக்கிறபடி, பாதுகாப்பான மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையோடு எடுத்துக்கொள்ளலாம். இந்த மருந்துகள் அவர்களை ஆசுவாசப் படுத்தும்.

சொல்லத் தெரியாவதர்களுக்கும் தீர்வு!

டிப்ரெஷனில் இருக்கிற முதிய பெண்கள் அதைச் சரியாக வெளிப்படுத்தத் தெரியாமல் கைவலி, கால்வலி என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இவர்களிடம் உளவியல் ஆலோசகர்கள் சற்று நேரம் ஆதரவாகப் பேசினாலே பிரச்னை என்னவென்பதை கண்டுபிடித்துச் சரி செய்துவிடலாம்.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

மன அழுத்தம் குறைக்கும் தாம்பத்தியம்!

வயதானவர்களுக்கு தாம்பத்தியத்தில் விருப்பம் இருக்காது. அவர்களுக்குத் தனிமை தேவையில்லை என்பதெல்லாம் உண்மை கிடையாது. விருப்பத்துடன் செய்கிற தாம்பத்திய செயல் பாடுகள்கூட முதிய பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

புகார் அளிப்பதும் தீர்வே!

கொடுமைப்படுத்தும் மருமகள், அடிக்கும் மகன் என்று குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிற முதிய பெண்களைப் பற்றித் தெரிந்தால், யார் வேண்டுமானாலும் காவல்துறையில் புகார் அளிக்கலாம். தன்னிடம் சிகிச்சைக்கு வருகிற முதிய பெண்மணி குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது தெரிந்தால், அந்த மருத்துவரே காவல்துறையில் புகார் அளிக்கலாம்.

தற்கொலை எண்ணம் ஏன்?

வாழ்க்கையின் இரண்டு கட்டங்களில் மனிதர்களுக்குத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் எழும்பும். ஒன்று, வளரிளம் பருவத்தில். அடுத்து, வயதான பிறகு. வயதானவர்களுக்குத் தற்கொலை எண்ணம் வருவதற்கு பணப்பிரச்னை, தனிமை, வாழ்க்கைத்துணை இறந்துபோவது, சரிசெய்ய முடியாத உடல்நிலை, வெளியே செல்ல முடியாமல் இருப்பது என்று மேலே சொன்னவைதான் காரணங்கள். தன் அம்மாவுக்கு என்ன பிரச்னை என்பதை பிள்ளைகள்தாம் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.

அரசும் உதவி செய்ய வேண்டும்!

வயதானவர்களுக்குச் சிகிச்சையளிப்பது வீண் செலவு என்ற மனநிலையை சமூகம், குறிப்பாகப் பிள்ளைகள் மாற்றிக்கொள்ள வேண்டும். வயதானவர்களின் மனநலன் தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும். ஆதரவற்ற வயதானவர்களுக்கு மருத்துவம், உளவியல் சிகிச்சை, போக்குவரத்து, ஆதரவு இல்லங்கள் என்று அவர்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும்.

சீனியர் சிட்டிசன் பெண்களுக்கான பொழுதுபோக்கு

இளம் வயதில் வீடு, அலுவலகம், கணவர், குழந்தைகள் என்று ஓய்வெடுப்பதற்கும் நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பார்கள் பெண்கள். அந்த நேரத்தில் பொழுதுபோக்கு என்ற வார்த்தையை நினைப்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் இருந்திருக்காது. எல்லா கடமைகளையும் முடித்துவிட்ட அறுபதுகளில் அவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளை தூசிதட்டி மீட்டெடுக்கலாம். பொழுதுபோக்கு என்றாலே அது இளைஞர்களுக்கானது என்று நாமெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அது முதிய பெண்களுக்குமானதுதான்.

அறுபதிலும் பாடலாம்!

குரல் நன்றாக இருக்கிறதோ, இல்லையோ எல்லாருமே இளம் வயதில் பாட்டுப் பாட ஆர்வம்காட்டியிருப்பார்கள். அதை வயதான பருவத்திலும் ஹேப்பியாகச் செய்யலாம். இன்றைக்கு எல்லோர் கையிலும் செல்போன் இருக்கிறது. அதில் எஃப்.எம், யூடியூப் இரண்டும் இருக்கின்றன. மனதுக்குப் பிடித்த பழைய பாடல்கள், டிரெண்டான புதிய பாடல்கள் எனக் கேட்கலாம். அவற்றுடன் கூடவே சேர்ந்து பாடலாம். டான்ஸில் விருப்பமுள்ளவர்கள் பேரப்பிள்ளைகளுடன் சேர்ந்து ஆடவும் செய்யலாம். சில மாதங்களுக்கு முன்புவரை புழக்கத்தில் இருந்த டிக்டாக்கில் நிறைய பாட்டிமார்கள் பேரப்பிள்ளைகளுடன் பாடியதையும் ஆடியதையும் நாமும் பார்த்தோம்தானே... இப்படிச் செய்வதால் பொழுது ஜாலியாகப் போவதோடு ‘ஃபிரெண்ட்லி பாட்டி’ என்று பேரப்பிள்ளைகளிடம் நல்ல பெயரும் வாங்கலாம்.

உடற்பயிற்சியும் யோகாவும்

வயதாக ஆக கைவலி, கால்வலி என்று உடம்பில் எந்நேரமும் ஏதோ ஒரு வலி இருக்கவே செய்யும். இதற்கு சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் செய்தால், வலி கட்டுக்குள் இருக்கும். தெரிந்தவர்கள் யோகாவும் செய்யலாம். யோகா செய்ய விருப்பமிருப்பவர்கள் முறைப்படி கற்றுக்கொண்டு செய்யலாம். ஆரோக்கியத்துக்கும் நல்லது. நல்லதொரு பொழுதுபோக்காகவும் இருக்கும்.

சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கலாம்!

வெளிநாடுகளில் இருக்கிற தங்கள் பிள்ளைகளிடமும் பேரப் பிள்ளைகளிடமும் பேசுவதற்காக ஸ்மார்ட்போன், லேப்டாப் என்று டெக்னாலஜி விஷயங்களைக் கற்றுக்கொள்ள இன்றைய முதிய பெண்கள் ஆர்வமாகவே இருக்கிறார்கள். இதையே கொஞ்சம் மாற்றி, தரமான செய்தி சேனல்களைப் பார்ப்பது, யூடியூப் சேனல்களை ரசிப்பது, சமூக வலைதளங்களை ஃபாலோ செய்வது என வயதானவர்கள் தங்கள் பொழுதைப் பயனுள்ளதாகப் போக்கலாம்.

எம்ப்ராய்டரி என்னும் பொழுதுபோக்கு!

சின்ன வயதில் எம்ப்ராய்டரியில் ஆர்வம் இருந்திருக்கும். ஆனால், காலப்போக்கில் வங்கி அதிகாரி அளவுக்கு பிசியான காரணத்தால் எம்ப்ராய்டரி ஊசியும் கலர் கலர் நூலும் கனவில் பார்த்ததுபோல மறந்து போயிருக்கும். அந்தச் சங்கிலித் தையலையும் காம்புத் தையலையும் மறுபடியும் போட ஆரம்பிக்கலாம்.

யூடியூப் சேனல்களில் லேட்டஸ்ட் எம்ப்ராய்டரி தையல்களும் சொல்லிக் கொடுக்கிறார்கள். அவற்றையும் கற்றுக்கொள்ளலாம். பிடித்த விஷயங்களைச் செய்யும்போது உடம்பு வலிகள்கூட தெரியாமல் போகலாம்.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

பேத்தி கவுனில் ஃபேப்ரிக் பெயின்டிங்!

சிலருக்கு சின்ன வயதில் தையலில் ஆர்வம் இருந்திருக்கும். தன் குழந்தைகளுக்குத் தன் கையாலேயே ஃபிராக் தைத்துப் போட்டிருப்பார்கள். பின்னாளில் வேலைப்பளுவில் தையல் மெஷின், சாமான்கள் வைக்கிற ஸ்டாண்டாக மாறிவிட்டிருக்கும். இப்போதும் முடிந்தால் உங்கள் பேரக்குழந்தைகளுக்கு ஃபிராக் தைக்க ஆரம்பிக்கலாம். இதுவே பெயின்டிங்கில் ஆர்வமிருக்கிறது என்றால், பேத்தி கவுனில் ஃபேப்ரிக் பெயின்டிங் செய்யலாம்.

மருத்துவ புத்தகங்கள் படிக்கலாம்!

இன்றைக்கு ஹெல்த் தொடர்பான விஷயங்களைக் கேட்பதற்கும் படிப்பதற்கும் சீனியர் சிட்டிசன் பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும் மாடர்ன் மெடிசினை தாண்டி பாரம்பர்ய மருத்துவங்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள விருப்பமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியம் தொடர்பான புத்தகங்களைப் படிப்பதில் தங்கள் பொழுதைப் போக்கலாம்.

பிடித்த இடங்களுக்குப் போகலாம்!

வயதாகிவிட்டது என்றாலே ஆன்மிக இடங்களுக்கு மட்டும்தான் செல்ல வேண்டும் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருந்த காலத்தில் ஆசைப்பட்டும் செல்ல முடியாத இடங்களுக்கு இப்போது நண்பர்களுடன் சேர்ந்து செல்லலாம்.

கிளப்பில் சேரலாம்!

பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு கிளப், ஒரு புரோகிராம் என ஏதாவது ஒரு விஷயத்தில் தங்களை இணைத்துக்கொண்டவர்களுக்குத் தனிமை உணர்வு வராது. பொழுதும் கலகலப்பாகக் கழியும்.

டர்ட்டிள் வாக் போகலாம்!

சீனியர் சிட்டிசன்களை அதிகம் பாதிப்பது டிமென்ஷியா என்கிற ஞாபகமறதி நோய்தான். இது வராமல் தடுக்க அல்லது வந்தாலும் கட்டுக்குள் இருக்க ஏதாவது ஒரு விஷயத்தில் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், சில்லுக்கருப்பட்டி படத்தில் ‘டர்ட்டிள் வாக்’ செய்வார்கள் இல்லையா? உங்களுக்குத் தெரிந்த என்.ஜி.ஓ-க்களுடன் இணைந்து இதுபோன்ற செயல் பாடுகளிலும் ஈடுபடலாம்.

இளமை திரும்புதே... சீனியர் சிட்டிசன்களுக்கான முழு கையேடு!

தோழிகளுடன் அவுட்டிங்!

இளவயதில்தான் நண்பர்களுடன் சேந்து ஒன்றாக வெளியே சாப்பிட செல்ல வேண்டும், ஷாப்பிங் போக வேண்டும் என்பதில்லை. வயதான பிறகும் இவற்றைச் செய்யலாம். இது வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் வயதான பெண்களின் மனநலனையும் உற்சாகமாக வைத்திருக்கும்.

அறுபதுக்குப் பிறகும் அவர்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.