Published:Updated:

`நெஞ்சுவலி என போன் செய்தால் வாயுத் தொந்தரவா, மாரடைப்பா என எப்படிக் கணிப்பது?’ -மருத்துவர்கள் சந்திக்கும் சவால்

மருத்துவரின் வேதனை
மருத்துவரின் வேதனை

இறந்தபின் எந்த வகையிலும் கொரோனா நோய் பரவாது என்பதை மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?

இந்தியாவில் கொரோனா தாக்கத்தின் ஆரம்பத்திலிருந்தே பல்வேறு விதமான விழிப்புணர்வு பதிவுகளைத் தொடர்ந்து பதிவு செய்து வந்தவர் மகப்பேறு மருத்துவரும் நடிகர் தனுஷின் சகோதரியுமான கார்த்திகா. அத்தனை பேரின் இயல்பு வாழ்க்கையும் புரட்டிப்போடப்பட்டுள்ள காலகட்டத்தில், ஒரு மருத்துவராக அவருடைய மனநிலை எப்படி இருக்கிறது? டாக்டர் கார்த்திகாவிடம் பேசினோம்.

Corona virus
Corona virus

"ஒவ்வொரு நாளும் பணி முடிந்து வீடு திரும்பும்போது, ஒருவிதமான பதற்றத்தையே எதிர்கொள்கிறது மனது. மருத்துவராக நாங்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் எங்களிடமிருந்து எங்களைப் பார்க்க வரும் நோயாளிகளுக்கோ அல்லது அவர்களிடமிருந்து எங்களுக்கோ நோய் பரவாமல் தடுக்க முடியும். ஆனால், போதிய அளவு மாஸ்க் மற்றும் மற்ற பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்து மருத்துவமனைகளுக்கும் போய்ச் சேரவில்லை என்பதுதான் நிதர்சனம்" என்றவரிடம் தற்போதைய சூழலில் பொது மற்றும் மகப்பேறு மருத்துவராக அவர் சந்திக்கும் சவால்களைப் பற்றிக் கேட்டோம்.

``முடிந்தவரை காணொலி அல்லது தொலைபேசி மூலமாகத்தான் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அவர்களில் எந்த நோயாளிக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும், யாருக்கு உடனடி சிகிச்சை தேவை என்பதைக் கண்டறிவது எங்களுக்கான மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. மிகவும் தேவைப்படும் சூழலில் மட்டுமே மருத்துவமனைக்கு வரச் சொல்கிறோம். ஆனால், திடீரென ஒருவர் போன் செய்து நெஞ்சுவலி எனச் சொல்லும்போது, அது வாயுப் பிரச்னையால் வந்ததா அல்லது மாரடைப்பால் வந்ததா என்பதை போனில் எப்படிக் கணிப்பது. ஏதேனும் தவறாகிவிட்டால் உயிரே போய்விடுமே என்ற பயமும் பதற்றமும் எங்களுக்கு இருக்கிறது. அதிலும் என்னுடைய மகப்பேறு மருத்துவத் துறையில் தவறு நேர்ந்தால், இரண்டு உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும்.

Karthika with a new born
Karthika with a new born

மருத்துவர்களுக்கான உண்மையான சவாலே இந்த லாக்டௌன் முடிந்தபிறகுதான் இருக்கிறது. அவசியத்துக்கு மட்டும் வெளியே வருவதையும், மாஸ்க் அணிந்து வெளியே செல்லும் பழக்கத்தையும், கைகளை அடிக்கடி கழுவும் வழக்கத்தையும் லாக்டௌன் முடிந்தபிறகும் அனைவரும் நிச்சயம் பின்பற்றவேண்டும். மேலும், ஏற்கெனவே வேறு பிரச்னைகளுக்காக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருப்பவர்கள் வெளியில் வரவே வேண்டாம். அனைவரும் உடற்பயிற்சி செய்யவேண்டும். பாசிட்டிவ் விஷயங்களைப் பார்ப்பது சிறந்தது. இதற்கான தடுப்புஊசி வரும் வரை, நாம் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துத்தான் ஆகவேண்டும். இதுவும் கடந்து போகும் என்பதை நம்புவோம்."

"மாஸ்க் பயன்பாடு பற்றி உங்களுடைய கருத்து என்ன?"

"எந்த இடத்தில் என்ன வகையான மாஸ்க் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் பாதுகாப்பு இருக்கிறது. சாதாரணமாக வெளியே சென்று வருவதற்குத் துணி மாஸ்க் போதுமானது. அதனை வீட்டிற்கு வந்ததும் நன்கு துவைத்து, காயவைத்து மீண்டும் உபயோகிக்கலாம். நீண்டதூரப் பயணம் மற்றும் மருத்துவமனைக்குச் செல்லும் நபர்கள் சர்ஜிக்கல் மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம். அவற்றையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தவேண்டும்.

Doctor Karthika
Doctor Karthika

பயன்படுத்திவிட்டு அப்படியே குப்பைத் தொட்டியில் விசிறிவிட்டுச் செல்லக்கூடாது. வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ளவர்கள் அவற்றை எடுத்து உபயோகிக்க அதிக வாய்ப்புண்டு. மேலும், சிலர் பணம் பார்க்கும் நோக்கில் அதனை முறையாகச் சுத்தம் செய்யாமல் மீண்டும் அதையே குறைந்த விலைக்கு விற்கவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் நோய்த்தொற்று அதிகளவில் பரவக்கூடும். எனவே, சரியான முறையில் பயன்படுத்திய மாஸ்க்குகளை அப்புறப்படுத்தவேண்டும். கோவிட் வார்டுகளில் வேலை செய்பவர்கள் மட்டுமே N95 மாஸ்க்குகளைப் பயன்படுத்தவேண்டும்."

"மருத்துவர் சைமன் இறப்பு பற்றி?"

"அதுபோன்ற நிலை எந்த மனிதருக்கும் வரக்கூடாது. தினமும் காய்கறி மற்றும் இதர மளிகைப் பொருள்கள் வாங்குவதற்கு வீட்டைவிட்டு வெளியே செல்கிறார்கள். அந்நேரத்தில், நூற்றுக்கணக்கில் மக்கள் ஒன்றுகூடுகிறார்கள். அப்போதெல்லாம் நோய் பரவும் என்பது மக்களுக்குத் தெரியாமல் இல்லையே. அவர்களுக்குத் தேவையான நேரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

ஆனால், இறந்தபின் எந்த வகையிலும் அந்த நோய் பரவாது என்பதை மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறார்கள்? தங்களின் உயிரையும் பணயம் வைத்துதான் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளிலும் ஒவ்வொரு மருத்துவரும் இன்னோர் உயிரைக் காப்பாற்றுவதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான இறுதி மரியாதைகூட சரியாகப் போய்ச் சேராதது அனைத்து மருத்துவப் பணியாளர்களையும் மனதளவில் பாதிப்படையச் செய்திருக்கிறது. இதுபோன்ற உணர்வை இனி யாருக்கும் கொடுத்துவிடாதீர்கள்."

உள்ளூரில் 400, இறக்குமதியில் 1,500... கரூர், திருப்பூரின்  PPE-ஐ கவனிக்குமா அரசு?!
அடுத்த கட்டுரைக்கு