Published:Updated:

உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய மெடிக்கல் கேட்ஜெட்கள்!

மெடிக்கல் கேட்ஜெட்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மெடிக்கல் கேட்ஜெட்கள்!

முதலுதவி

கொரோனா லாக்டௌனால் முன்புபோல மக்களால் மருத்துவ மனைக்குச் செல்ல முடியாத நிலை. இதனால், வீட்டிலேயே சர்க்கரை அளவை பரிசோதிப்பது முதல் ரத்த அழுத்தத்தை அறிந்து கொள்வதுவரை, ஆரோக்கியத்தைக் கண்காணிக்க கைகொடுக்கும் மருத்துவக் கருவிகளின் (Medical Gadgets) பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் அவசியமாக இருக்க வேண்டிய மெடிக்கல் கேட்ஜெட்கள் பற்றியும், அவற்றைப் பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்குகிறார், மதுரை மருத்துவக்கல்லூரியின் உடற்கூறியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ராஜ்கோகிலா.

உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய மெடிக்கல் கேட்ஜெட்கள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தெர்மாமீட்டர்... கண்கள் கவனம்!

‘‘உடல் வெப்பநிலையைக் கண்டறிய மூன்று வகையான தெர்மாமீட்டர்கள் உள்ளன. பாதரச தெர்மாமீட்டர், டிஜிட்டல் தெர்மாமீட்டர், இன்ஃப்ராரெட் (Infrared) தெர்மாமீட்டர். கண்ணாடியாலான பாதரச தெர்மாமீட்டர் கையாள சிரமமானது. இன்ஃப்ராரெட் தெர்மாமீட்டர், இப்போது பரவலாக அலுவலகம், ஷாப்பிங் மார்க்கெட் என வாயிலில் மக்களின் நெற்றி, கைகளில் ஒளிக்கற்றையைச் செலுத்தி உடல் வெப்பநிலையைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது. இதை தெர்மல் ஸ்கேனர் என்றும் அழைப்பார்கள். இதைப் பயன்படுத்தும்போது உமிழப்படும் ஒளிக்கற்றை கண்களில் பட நேர்ந்தால் கண் பிரச்னை ஏற்படலாம் என்பதால், நெற்றியைத் தவிர்த்து கைகளில் ஓளிக் கற்றையைச் செலுத்திப் பயன்படுத்துவது நல்லது. இவை இரண்டையும்விட, டிஜிட்டல் தெர்மாமீட்டர்தான் வீட்டுப் பயன்பாட்டுக்கு ஏற்றது. இதை அக்குள், நாக்கின் அடிப்பகுதிகளில் வைத்து உடல் வெப்பநிலையைக் கண்டறியலாம். தெர்மாமீட்டரை வெதுவெதுப்பான நீரிலோ, ஒரு பங்கு வெள்ளை வினிகருடன் மூன்று பங்கு வெதுவெதுப்பான நீர் கலந்தோ சுத்தம் செய்யலாம்.

உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய மெடிக்கல் கேட்ஜெட்கள்!

தெர்மாமீட்டரில் உடலின் வெப்பநிலை 970F - 990F வரை இருப்பது இயல்பு. அதைவிட அதிகரிக்கும்போது, பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்வது, தண்ணீரில் நனைத்துப் பிழிந்த பருத்தித் துணியை நெற்றியில் வைத்து எடுப்பது என்று செய்யலாம். தொடர் காய்ச்சல், குறிப்பாக 1000F-க்கு அதிகமாக உடல் வெப்பநிலை சென்றால் மருத்துவரை நாட வேண்டியது அவசியம். அதேபோல, உடல் நடுக்கத்தோடு வெளியே குளிராகவும், உடலுக்குள் வெப்பமாகவும் இருக்கும் குளிர்க்காய்ச்சல் ஏற்பட்டால், அவர்களுக்கு உடல் வெப்பநிலை 900F வரை கீழே செல்லும். அப்போதும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிளட் பிரஷர் மானிட்டர்...

கவனிக்க வேண்டிய அறிகுறிகள்!

பாதரசம் மானிட்டர், எலெக்ட்ரானிக் மானிட்டர் எனச் சந்தையில் இரண்டு வகையான பிளட் பிரஷர் மானிட்டர்கள் உள்ளன. பாதரச பி.பி மானிட்டர் மருத்துவரின் பயன்பாட்டுக்குரியது. வீட்டில் பயன்படுத்த ஏற்றது எலெக்ட்ரானிக் பி.பி மானிட்டர்தான்.

உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய மெடிக்கல் கேட்ஜெட்கள்!

இதயம் சுருங்கும்போதும், விரியும்போது ரத்த நாளங்களில் அழுத்தம் ஏற்படும். இதயம் சுருங்கும்போது ஏற்படும் அழுத்தம் `சிஸ்டோல்’ என்று அழைக்கப்படும். சாதாரணமாக சிஸ்டோல் அளவு 120mmHg இருக்க வேண்டும். 130mmHg, 140mmHg என்றிருந்தால் உயர் ரத்த அழுத்தம் (Hypertension). தொடர் மருத்துவ ஆலோசனை, மருந்துகள் என்றிருக்க வேண்டும். கவனிக்காமல் விட்டால் இதய செயலிழப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

இதுவே இதயம் விரியும்போது ஏற்படும் அழுத்தம் `டயஸ்டோல்’. டயஸ்டோல் அளவு 80mmHg இருக்க வேண்டும். 70mmHg, 60mmHg என்று இறங்கினால் அது குறை ரத்த அழுத்தம் (Hypotension). குறை ரத்த அழுத்தத்தின் அறிகுறிகளான உடல் சில்லிடுவது, மூச்சுவாங்குவது, சோர்வு, பார்வை மங்குவது போன்றவற்றைக் கவனித்து மருத்துவ ஆலோசனையின் கீழ் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குளுக்கோமீட்டர்...

சர்க்கரை அளவு குறைந்தால் அலர்ட்!

ரத்தச் சர்க்கரையின் அளவை அறிய உதவும் கருவி இது. இதில் குளுக்கோமீட்டர், விரலில் குத்தும் ஊசி மற்றும் குளுக்கோ மீட்டரின் நுனியில் மாட்டும் அட்டை என மூன்று பொருள்கள் இருக்கும். சில குளுக்கோமீட்டர்களில் ஊசி இணைந்திருக்கும், அதை குறிப்பிட்ட இடைவெளியில் மாற்ற வேண்டியிருக்கும் அல்லது ஒரு நேரப் பயன்பாடு ஊசி (use and throw) இருக்கலாம். விரல் நுனியில் ஊசியால் எடுக்கப்படும் துளி ரத்தம் மூலம், கருவி சர்க்கரையின் அளவைக் கண்டறியும். பயன்படுத்திய ஊசியைக் கவனத்துடன் அப்புறப்படுத்தாவிட்டால், மற்றவர்கள் கால்களில் குத்தி தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய மெடிக்கல் கேட்ஜெட்கள்!

சாதாரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு 80mg/dL முதல் 120mg/dL வரை இருக்கலாம். 300 mg/dL அளவுக்கு மேல் அதிகரித்தால் உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம். அதேபோல, சர்க்கரை அளவு 60 mg/dL அளவுக்குக் குறையும்போதும் தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்ல வேண்டும். உடல் சோர்வு, மயக்கம் ஏற்பட்டால் ஏதாவது இனிப்பை வாயில் போட்டுக்கொள்ள வேண்டும். அறிகுறி களைக் கவனிக்காமல்விட்டால் மூளை பாதிப்படையும்வரை செல்லலாம் கவனம்.

பல்ஸ் ஆக்ஸி மீட்டர்... 20 விநாடிகள் பொறுமை!

இதயத்துடிப்பு மற்றும் ரத்தத்தில் கலந்துள்ள ஆக்ஸிஜனின் அளவைக் கணக்கிட பல்ஸ் ஆக்ஸி மீட்டரைப் பயன்படுத்து கிறோம். விரலில் மாட்டுவது (கை, கால் விரல்), காது மடலில் மாட்டுவது, குழந்தைகளுக்காக கை மணிக்கட்டில் மாட்டிவிடும் பேண்ட் (Band) என மூன்று வகையான ஆக்ஸிமீட்டர்கள் கிடைக்கின்றன.

உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய மெடிக்கல் கேட்ஜெட்கள்!

நமது உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை சுமந்துசெல்லும் பணியைச் செய்பவை, ரத்த சிவப்பணுக்கள். அவை எவ்வளவு ஆக்ஸிஜனை சுமந்து செல்கின்றன எனக் கண்டறிவதே பல்ஸ் ஆக்ஸிமீட்டரின் வேலை. இவற்றில் இருக்கும் இன்ஃப்ராரெட் ஒளிக்கற்றைகள், துல்லியமாக ஆக்ஸிஜன் அளவை அளந்து சொல்லும். அதற்கு 10 முதல் 20 விநாடிகள் ஆகலாம். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். ஆக்ஸிஜன் அளவு 95 முதல் 100 வரை இருப்பது இயல்பானது. 93-க்குக் கீழ் சென்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இதயத்துடிப்பை பொறுத்தவரை, 72 - 100 வரை. வயது, உடல், எடை ஆகிய வற்றைப் பொறுத்து இது மாறலாம்.

சர்க்கரை நோயாளிகள் உடல் நிலையின் தேவைக்கேற்ப குளுக்கோமீட்டரை பயன்படுத்தலாம். ஆனால், வீட்டில் தெர்மாமீட்டர், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், பி.பி மானிட்டர் இருக்கிறது என்பதால் அவற்றைப் பயன்படுத்தி அடிக்கடி பரிசோதித்துக்கொண்டே இருப்பது மன அழுத்தத்துக்கு வழிவகுக்கலாம் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும். தேவை ஏற்படும்போதுதான் இந்தக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.

உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய மெடிக்கல் கேட்ஜெட்கள்!

போலிகளை எவ்வாறு அடையாளம் காண்பது?

 வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மருத்துவக் கருவிகளை வாங்கும்போது தரத்தில் சமரசம் கூடாது. விலைக் குறைவான பொருள்களை வாங்கினால் துல்லியத் தன்மை இல்லாமல் போய்விடும்.

 இந்தியத் தயாரிப்பு மருத்துவக் கருவியாக இருந்தால் அதில் ISI (Indian Standards Institution) முத்திரை அல்லது IMA (Indian Medical Association) முத்திரை இருக்கும் அல்லது MCI (Medical Council of India) சான்று அளித்திருக்க வேண்டும்.

 மேற்சொன்ன எந்த முத்திரையும் இல்லாமல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சந்தைகளில் விற்கப்படும் மருத்துவக் கருவியாக இருந்தால், அது FDA (The Food and Drug Administration) சான்று பெற்றிருக்க வேண்டும். கூடவே, மேற்கண்ட இந்திய நிறுவனங்களில் ஏதாவது ஒன்று சான்று அளித்திருக்கும். இவை எதுவுமே இல்லையென்றால் அது 100% போலியானது.

 ஆன்லைனில் வாங்கும்போதும் மேற்சொன்ன முத்திரைகளைக் கவனிக்க வேண்டும். அவற்றுக்கான ரெவ்யூவையும் படிக்க வேண்டும்.

 குளுக்கோமீட்டரைப் பொறுத்தவரை அதன் தேவை அதிகமாக உள்ளதால், சந்தையில் அதில் போலிகளும் அதிகமாக உள்ளன என்பதால் அதைக் கவனித்து வாங்க வேண்டும்.